Published : 24 Feb 2020 02:43 PM
Last Updated : 24 Feb 2020 02:43 PM
வெலிங்டன் டெஸ்ட் படுதோல்வியுடன் என்ன எல்லாம் முடிந்து விட்டதா? ஒரு தோல்வியில் உலகமே இந்திய அணிக்கு முடிந்து விட்டதா? என்று கேப்டன் விராட் கோலி காட்டமாக கேட்டுள்ளார்.
வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வி தழுவியதோடு, புகழ்பெற்ற பந்து வீச்சும் சொதப்பியதால் இந்திய அணி எந்த ஒரு போராட்டமும் இன்றி சரணடைந்தது.
இதனையடுத்து செய்தியாளர்களை எதிர்கொண்ட கேப்டன் விராட் கோலி, “நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பது எங்களுக்கு தெரிகிறது. ஆனால் இந்தத் தோல்வியை பெரிது படுத்தி இதிலிருந்து மலையை உருவாக்க நினைத்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை.
சில விமர்சகர்களுக்கு இந்தத் தோல்வியுடன் இந்திய அணியைப் பொறுத்தவரை உலகம் முடிந்து விட்டது என்பதுதான், ஆனால் எங்களுக்கு அப்படியில்லை. எங்களைப் பொறுத்தவரை தோற்றாகிவிட்டது என்ன செய்ய முடியும் அடுத்த கட்டத்துக்கு தலையை நிமிர்த்தியபடி நகர வேண்டியதுதான்.
உள்நாட்டில் ஆடினாலும் நன்றாக ஆடினால்தான் வெற்றி பெற முடியும். சர்வதேச மட்டத்தில் எளிதாக எதுவும் அமைந்து விடாது ஏனெனில் எதிரணியினரும் வெற்றிபெறத்தான் வருகிறார்கள். தோல்வியை ஏற்றுக் கொள்வோம் அதுதான் இந்த அணியின் குணாம்சத்தை பறைசாற்றுவதாகும்.
அதனால்தான் இந்த அணி இப்படிப்பட்ட கிரிக்கெட்டை ஆட முடிகிறது, வெளியில் பேசப்படும் பேச்சுகளுக்கு செவிமடுத்தால் மீண்டும் நம்பர் 7-8 இடங்களுக்குப் போக வேண்டியதுதான். எனவே வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பது ஒரு பொருட்டேயல்ல.
ஒரே தோல்வி ஒர் இரவில் ஓர் அணியை மோசமானதாக்கி விடாது. தோற்றால் அதை ஒப்புக் கொள்வதில் எந்த வெட்கமும் இல்லை, நாங்கள் நன்றாக ஆடவில்லை. விமர்சகர்கள் எங்கள் மன நிலையை மாற்ற முயற்சிக்கிறார்கள் ஆனால் அது அப்படி வேலை செய்யாது. ஓய்வறை இதனை வேறு மாதிரி சிந்திக்கிறது. ஓய்வறை சூழ்நிலையே வேறு.
பேட்ஸ்மென்களின் மனநிலையில் நியூஸிலாந்து விளையாடி நாங்கள் எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்ய வைத்தனர். பவுலர்களை எப்போது நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்கும் தாக்குதல் பேட்டிங் செய்வதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது.
அவர்கள் நன்றாக வீசினார்கள், அவர்களை நீண்ட நேரம் நன்றாக வீச அனுமதித்தோம். கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்தவில்லை.” என்றார் விராட் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT