Published : 22 Feb 2020 08:54 AM
Last Updated : 22 Feb 2020 08:54 AM

ஆஷ்டன் ஆகர் ஹாட்ரிக் சாதனை: முதல் டி20யில் தென் ஆப்பிரிக்காவை கபளீகரம் செய்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் இடது கை ஸ்பின்னர் ஆஷ்டன் ஆகர் ஹாட்ரிக் சாதனை புரிந்து 5 விக்கெட்டுகளையும் கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி 89 ரன்களுக்குச் சுருண்டு 107 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

ஜொஹானஸ்பர்கில் நேற்று இரவு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 196/6 என்று பெரிய ஸ்கோரை எட்ட தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 89 ரன்களுக்குச் சுருண்டது.

டுபிளெசிஸ் அதிகபட்சமாக 24 ரன்களை எடுத்தார். டுபிளெசிச், பெலுக்வயோ, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் விக்கெட்டுகளை 8வது ஒவரில் தொடர்ச்சியாக வீழ்த்திய ஆஷ்டன் ஆகர் ஹாட்ரிக் சாதனை புரிந்தார், டி20 ஹாட்ரிக் சாதனை புரிந்த 13வது வீரர் ஆனார், அதே வேளையில் பிரெட் லீயிற்கு பிறகு ஹாட்ரிக் சாதனை புரிந்த ஆஸ்திரேலிய வீரரும் ஆனார் ஆஷ்டன் ஆகர்.

பிரெட் லீ 2007 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது. 2018 பால் டேம்பரிங் விவகாரத்துக்குப் பிறகு முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்தார், இவர்தான் ஆஸி. இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர்.

டாஸ் வென்ற குவிண்டன் டி காக் முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார், டேவிட் வார்னர் இன்னிங்ஸ் 2 பந்துகளே தாங்கியது. டேல் ஸ்டெய்ன் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் வார்னர், ஆனால் அடுத்த பந்தே ஷார்ட் பிட்ச் பந்தாக அதிர்ச்சியடைந்தார் வார்னர், டாப் எட்ஜ் ஃபைன் லெக்கில் கேட்ச் ஆனது.

ஸ்டீவ் ஸ்மித் டக் அவுட் ஆகியிருப்பார், காரணம் லுங்கி இங்கிடி வீசிய பந்தை ஸ்மித் பாயிண்டில் தூக்கி அடிக்க ஸ்டெய்ன் அங்கு விளக்கொளியில் கேட்சை கோட்டை விட்டார். பிறகு பெலுக்வயோ பந்து ஒன்று ஸ்மித்தின் மட்டையில் பட்டு லெக்ஸ்டம்பை உரசிச் சென்றது. தப்பினார்.

ஆனால் ஸ்மித்தும் ஏரோன் பிஞ்சும் (27 பந்துகளில் 42 ரன்கள்) சேர்ந்து 8 ஓவர்களில் 80 ரன்களை விளாசி ஆஸ்திரேலியாவை வலுப்படுத்தினர். பிஞ்ச், டுபிளெசிசின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார், பிறகு வேட் (18), ஸ்மித் இருவரும் 3 பந்துகள் இடைவெளியில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப ஆஸ்திரேலியா 117/4 என்று இருந்தது. ஷம்சி பந்தில் ஸ்மித் ஸ்டம்ப்டு ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 12 வைடுகளை வீசியது, பவுலிங் டெத் ஓவர்களில் சொதப்ப, பீல்டிங்கும் சொதப்ப ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி (27), மிட்செல் மார்ஷ் (19), ஆகர் (20 நாட் அவுட்) ஆகியோர் வெளுத்து வாங்க ஆஸ்திரேலியா 196 ரன்கள் குவித்தது, ரபாடா கடைசி ஒவரில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெய்ன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிடி 3 ஒவர் 37, ரபாடா 3 ஒவர் 45 என்று செம சாத்து வாங்க ஷம்சி அபாரமாக வீசி 4 -31-2 என்று முடிந்தார்.

தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸை தொடங்க தொடக்கத்திலேயே மிட்செல் ஸ்டார்க் அதிர்ச்சியளித்தார், அதிரடி அபாய வீரர் டி காக்கை 2 ரன்களில் அற்புதப் பந்தில் பவுல்டு செய்தார்.

பிறகு பாட் கமின்ஸ் உள்ளே புகுந்து விளையாடி 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவர் வான்டெர் டியூசனை 6 ரன்களிலும் ஸ்மட்ஸை 7 ரன்களிலும் ஷார்ட் பிட்ச் பந்தில் கபளீகரம் செய்தார்.

இதன் பிறகுதான் ஆகர் தன் வேலையைக் காட்டினார், முதலில் டுபிளெசிஸ் (24) கவர் பவுண்டரியில் கேட்ச் கொடுக்க அடுத்த பந்தே பெலுக்வயோ எல்.பி.ஆக, ஹாட்ரிக் பந்தில் ஸ்டெய்ன், ஸ்லிப்பில் பின்ச் கையில் கேட்ச் ஆக ஆகரின் ஹாட்ரிக் சாதனை நிறைவேறியது, தென் ஆப்பிரிக்கா 44/7 என்று ஆனது. ஆகர் 2வது ஹாட்ரிக்கையும் கைப்பற்றியிருப்பார், எப்படியெனில் பைட் வான் பில்யோன் (16), லுங்கி இங்கிடி (1) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார், ஆனால் கடைசி விக்கெட்டுக்காக களமிறங்கிய ஷம்சி 2வது ஹாட்ரிக் வாய்ப்பைத் தடுத்தார்.

சீரழிந்து சின்னாப்பின்னமாக வேண்டிய தென் ஆப்பிரிக்காவை ரபாடா 19 பந்துகளில் 22 ரன்கள் விளாசி கொஞ்சம் கவுரவம் அளித்தார். ஆடம் ஸாம்ப்பா (2-9), இவரை பவுல்டு செய்ய தென் ஆப்பிரிக்காவின் வேதனை முடிவுக்கு வந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

பேட்டிங்கில் 20 ரன்களையும் ஹாட்ரிக் சாதனையுடன் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆகர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x