Published : 21 Feb 2020 06:38 AM
Last Updated : 21 Feb 2020 06:38 AM

வெலிங்டன் டெஸ்ட்: புஜாரா, கோலியை விரைவில் வெளியேற்றிய கைல் ஜேமிசன்- இந்தியா திணறல்

வெலிங்டன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார், உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் மயங்க் அகர்வால் 29 ரன்களுடனும், ரஹானே 19 ரன்களுடனும் நிற்கின்றனர். அனைத்து சந்தேகங்களுக்கும் பிறகு இஷாந்த் சர்மா ஆடுகிறார், விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று பசுந்தரையாக இருந்தது இன்று புற்கள் கொஞ்சம் பிரவுன் நிறமாக மாறியிருந்தன.

ஆஸ்திரேலியா போல் இல்லாமல் பிட்சின் மேற்புறம் மென்மையாகவே இருக்கிறது. மேகமூட்டமான வானிலை என்பதால் நியூஸிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது.

மயங்க் அகர்வால், பிரிதிவி ஷா தொடங்க நியூஸிலாந்தில் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் வீசினர். பிட்சில் ஒன்றும் பேய் பிசாசெல்லாம் இல்லை என்று தெரிகிறது. ஒருவேளை மேட் ஹென்றி, பெர்கூசன், நீல் வாக்னர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் இந்தப் பிட்ச் வேறு தோற்றமளித்திருக்கும்.

காயத்திலிருந்து வந்த ட்ரெண்ட் போல்ட் கடும் ஏமாற்றமளித்தார். இவர் ஷார்ட் ஆஃப் லெந்தில் வீசிய பந்துகள் நன்றாக இருந்தன, ஆனால் மற்றபடி அவர் பவுலிங்கில் அச்சுறுத்தல் எதுவும் இல்லை ஒரு முறை பிரிதிவி ஷாவுக்கும் அகர்வாலுக்கும் மட்டையின் உள்விளிம்பில் பட்டுச் சென்றது, ஒரு பந்து ஷாவின் மட்டை வெளி விளிம்பில் பட்டு பவுண்டரி சென்றது, அகர்வாலுக்கு ஒரு பந்து ஏறக்குறைய எட்ஜையும் மிஸ் செய்து ஸ்டம்பையும் மிஸ் செய்து சென்றது. .

சவுத்தி வழக்கம் போல் எளிதாக ஆடிவிடலாம் போல் தெரியும் ஆனால் கடினமான பந்து வீச்சு அது, பவுண்டரி பந்துகள் குறைவு, ஒரேயொரு முறை ஷார்ட் பிட்ச் வீச பிரிதிவி ஷா அதனை பாயிண்ட் மேல் தூக்கி பவுண்டரிக்கு அனுப்பினார். பிறகு போல்ட் பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரி.

தளர்வான பந்துகளில் ரன்களை எடுப்பதில் வல்லவரான ஷா 18 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் சவுத்தி ஒரு பந்தை ஆஃப் வாலி லெந்தில் காற்றில் உள்ளே கொண்டு வந்து சற்றே வெளியே ஸ்விங் செய்தார், பிரிதிவி ஷா கால்கள் நகரவில்லை, பெரும்பாலும் பேக் அண்ட் அக்ராஸ் வீரரான ஷா, இம்முறை முன் காலைத் தூக்கிப் போட்டு மட்டையுடன் வந்து ஆடியிருக்க வேண்டும், ஆனால் மட்டையை மட்டும் நீட்டினார், கால் நகர்த்தல் இல்லை. கிளீன் பவுல்டு ஆனார்.

புஜாரா இறங்கி சவுத்தியின் சபலம் ஏற்படுத்தும் பந்துகளை ஒருவாறு எதிர்கொண்டு ஆடி வந்த நிலையில் ஒரு புல்டாஸை முறையாக பவுண்டரிக்கு அனுப்பினார்.

கொலின் டி கிராண்ட் ஹோம் வீச வந்த போது அவரது 122-125 கிமீ வேகப்பந்துகளினால் சிரமம் ஏற்பட்டது, காரணம் அவரது லெந்த் பவுண்டரி அடிக்க முடியாதது, மெதுவாக வந்தாலும் டைட் லெந்த். நியூஸிலாந்தில் இப்படிப்பட்ட பவுலர்கள் எப்போதும் இருப்பார்கள், முன்பு கெவின் லார்சன் என்பவர் இருந்தார், அடிக்கவே முடியாது, அதே போல்தான் கொலின் டி கிராண்ட் ஹோம், இவரது ஒரு பந்து உள்ளே வர புஜாரா ஆடாமல் விட அது பெரிய எல்.பி.முறையீடானது, அபாயகரமான ஆட்டம், எஸ். வெங்கட்ராகவன் நடுவராக இருந்தால் வேண்டுமென்றே கால்காப்பில் ஆடியதற்காக அவுட் கொடுத்திருப்பார்.

கைல் ஜேமிசன் வந்தார் பெரிய வேகம் இல்லை 130 கிமே பக்கம்தான் வீசுகிறார், ஆனால் அவரது உயரம் அவர் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசும் கோணம், அனைத்திற்கும் மேலாக அவர் பந்தை பிட்ச் செய்யும் இடத்திலிருந்து அவருக்கு கிடைக்கும் பவுன்ஸ் ஆகியவை அவரை வித்தியாசமான பவுலராக்கியுள்ளது. முதல் ஓவரிலேயே அனுபவ புஜாராவை கதிகலக்கும் ஒரு பந்தை வீச அந்த பந்து மட்டையின் விளிம்பையும் மிஸ் செய்து ஸ்டம்பையும் மிஸ் செய்தது.

இப்படிப்பட்ட இன்னொரு பந்தில்தான் ஜேமிசன் பந்தை குட் லெந்தில் சற்றே வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசி உள்ளே காற்றில் கொண்டு வந்து வெளியே எடுத்தார், புஜாரா நிலை மாறினார், ஸ்கொயர் ஆனார், விளையாட முடியாத ஒரு பந்து, அதுவே மட்டையின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் எளிதான கேட்ச் ஆனது. 42 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் அவர் 11 ரன்களில் வெளியேறினார். ஒரு முனையில் கொலின் டி கிராண்ட் ஹோமை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

விராட் கோலி வந்தார். 7 பந்துகள்தான் நின்றார் 2 ரன்கள் எடுத்து கைல் ஜேமிசன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்திற்கு தனது வழக்கமான ட்ரைவுக்குச் சென்றார், சபலத்தில் மட்டை நீள விளிம்பில் பட்டு 100வது டெஸ்ட் ஆடும் டெய்லரிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது, ஜேமிசனுக்கு ஒரு கனவு டெஸ்ட் அறிமுகமாக அமைந்தது, இந்திய அணியின் இரண்டு டாப் பேட்ஸ்மென்களை அவர் மலிவாக வீழ்த்தினார். காரணம் போல்ட் சரியாக வீசவில்லை.

கொலின் டி கிராண்ட் ஹோம் 6 ஓவர் 3 மெய்டன் 4 ரன்கள். ஜேமிசன் 6-1-20-2. போல்ட் 8 ஓவர் 36 ரன்கள் என்று சொதப்பினார். சவுத்தி பிரமாதமாக 8 ஓவர் 19 ரன் ஒரு விக்கெட்.

ரஹானே இதுவரையிலான ஷாட் ஆஃப் த டே என்று கூறும்படி கைல் ஜேமிசனை நேராக ஒரு பவுண்டரி அடித்தார், மயங்க் அகர்வால் உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக பொறுமை இழந்து மட்டையை விட்டதில் எட்ஜ்கள் பறந்தன. மற்றபடி இந்தியா 79/3 என்பது அதிர்ஷ்டமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x