Last Updated : 20 Feb, 2020 05:18 PM

 

Published : 20 Feb 2020 05:18 PM
Last Updated : 20 Feb 2020 05:18 PM

அன்றொரு நாள் விராட் கோலியுடன் மனம்விட்டுப் பேசிய போது... : கேன் வில்லியம்சன் நெகிழ்ச்சி

கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி தங்கள் இருவருக்கும் உள்ள கருத்துக்கள் ஒத்துப் போகின்றன என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலி பற்றி தெரிவித்துள்ளார்.

விராட் கோலிக்கும் கேன் வில்லியம்சனுக்குமான நட்பு இருவரது யு-19 கிரிக்கெட் காலத்திலிருந்து இன்று வரை தொடரும் நட்பாகும். விராட் கோலி கூட அன்று நம்பர் 1 நிலையை ஒரே அணியுடன் தன்னால் பகிர முடியும் என்றால் அது நியூஸிலாந்துதான் என்று பிரமாதப்படுத்தி பேசியது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நியூஸிலாந்து மண்ணைக்கவ்வியதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சனின் பேட்டிங் மற்றும் நியூஸிலாந்து அணியின் வெற்றி இரண்டுமே நாளைய டெஸ்ட் போட்டியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியை முன் வைத்து கேன் வில்லியம்சன் கூறும்போது, “இந்தியா ஒரு தரமான அணியாகும். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முன்னிலை வகிக்கிறது, இதற்குக் காரணம் தரமான பேட்ஸ்மென்கள் இந்திய அணியில் உள்ளனர், உலகத்தரம் வாய்ந்த பந்து விச்சையும் கொண்டுள்ளனர்.

நான் நன்றாக ஆடி ரன்கள் குவிக்க வேண்டும், தனிப்பட்ட முறையில் அல்ல, அணியை நல்ல நிலையில் வைத்திருக்க நான் ரன்கள் குவிப்பது அவசியம்.

நீல் வாக்னர் போன்ற பவுலருக்கு மாற்று கண்டுபிடிப்பது கடினம், ஏனெனில் அவரது பந்து வீச்சு தனித்துவமானது. ஆனால் வேறு மாதிரி இடங்களில் பந்தை பிட்ச் செய்து வேறு உயரத்திலிருந்து வீசும் ஒரு பவுலர் வருகிறார், கைல் ஜேமிசனுக்கு உற்சாகமான வாய்ப்பாகும் இது.

பவுலிங்கிற்கு உதவி இருக்கும் பிட்ச்களில் கொஞ்சம் திட்டமிட்டு பேட் செய்தால் போதும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது நல்ல பிட்ச். எனவே பந்துகளை ஆடாமல் விடுவதும் நம் ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்ற தற்காப்புக் கவனமும் இருந்தால் ஆடி விட முடியும்.

எனக்கும் விராட் கோலிக்கும் இடையேயான நட்பு எங்களது யு-19 காலத்திலிருந்து இன்றும் தொடர்வதாகும். சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் என்று நாங்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். விராட் கோலியை பல வழிகளில் நான் பாராட்டியே வந்துள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டில் முன்னுதாரணமாக அவர் திகழ்வதைக் குறிப்பிடலாம்.

அன்றொரு நாள் அவுட் ஃபீல்டில் நானும் அவரும் உரையாடியது சுவாரஸியமானது. இருவரும் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டோம், ஆட்டம் பற்றி நாங்கள் இருவரும் ஒரேமாதிரிதான் சிந்திக்கிறோம். ஆனால் இருவரது அணுகுமுறையும் வேறு. கிரிக்கெட் அரங்கில் தனது சவாலான அணுகுமுறை போட்டி மனப்பான்மை மூலம் தலைமையேற்று நடத்தும் விராட் கோலியுடன் அன்று பேசியது எனக்கு உற்சாகமூட்டுவது என்பதுடன் ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது” என்றார்.

-ஸ்போர்ட்ஸ்டார் தி இந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x