Published : 19 Feb 2020 08:16 AM
Last Updated : 19 Feb 2020 08:16 AM
அகில இந்திய என்ஐடி கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தடகளம் மற்றும் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் ரூர்கேலா என்ஐடியில் நடைபெற்றன. இதில், தடகளத்தில் திருச்சி என்ஐடி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் 24 என்ஐடி கல்வி நிறுவனங்களில் இருந்து சுமார் 1,000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.இதில் தடகளப் போட்டியில் திருச்சி என்ஐடி சார்பில் ஆடவர் பிரிவில் பங்கேற்ற வீரர்கள் 4X100 மற்றும் 4X400 ஆகிய தொடர் ஓட்ட போட்டிகளில் 2 தங்கம், 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், 100 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் தலா ஒரு தங்கம் என மொத்தம் 6 தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
மேலும், 200 மீட்டர் ஓட்டம், மும்முறை தாண்டுதல், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஆகியவற்றில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் என3 வெள்ளிப் பதக்கங்களும், 110 மீட்டர் தடை தாண்டுதலில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர்.
மகளிர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டம், 4X400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் 2 தங்கம், 4X100 தொடர் ஓட்டத்தில் வெள்ளி, 400 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் ஆகியவற்றில் தலா ஒரு வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளனர். இரு பிரிவுகளிலும் 8 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை குவித்துள்ளனர். இந்த தொடரில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் திருச்சி என்ஐடி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
வாலிபால் போட்டியில் திருச்சி என்ஐடி மகளிர் அணி முதலிடத்தையும், ஆடவர் அணி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. இதில் மகளிர் அணியைச் சேர்ந்த மாணவி நிதி சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT