Published : 18 Feb 2020 01:24 PM
Last Updated : 18 Feb 2020 01:24 PM
மீண்டும் உடற்தகுதி பெற்று இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை எதிர்நோக்கும் நியூஸிலாந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு சவால் அளிக்க இனிமேலும் காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
நடப்பு நியூஸிலாந்து தொடர் விராட் கோலிக்கு சொல்லிக் கொள்ளும் படி அமையவில்லை, ஒருநாள் தொடரில் அவர் சரியாக ஆடவில்லை. இந்நிலையில் டெஸ்ட் போட்டியிலும் அவரை வீழ்த்த நியூஸிலாந்து பவுலர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
பொதுவாக கிரேட் பிளேயர்கள் சச்சின், லாரா, ரிக்கி பாண்டிங், ராகுல் திராவிட், ஜாக் காலீஸ், கெவின் பீட்டர்சன் என்று யாராக இருந்தாலும் பவுன்ஸ் பிட்ச்களில் பேக் அண்ட் அக்ராஸ் உத்தியைக் கடைபிடிப்பார்கள், ஆனால் விராட் கோலி இந்த விஷயத்தில் அரை திராவிட், அரை சுனில் கவாஸ்கர் இடது காலை முன்னால் நீட்டி ட்ரைவ் ஆடவே இவர் விரும்புகிறார், இதனால் ஒரு 10-15 பந்துகள் அவுட்ஸ்விங்கரை வீசி விட்டு ஒரு இன்ஸ்விங்கரை வீசினால் கோலி ஆட்டமிழக்கும் தருணங்கலை தென் ஆப்பிரிக்காவின் பிலாண்டர், நியூஸிலாந்தின் டிம் சவுத்தி ஆகியோர் அம்பலப்படுத்தினர், இந்நிலையில் இடது கை வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் சில பந்துகளை வலது கை கோலியின் உடலுக்குக் குறுக்காக வீசி விட்டு ஒரு பந்தை உள்ளே கொண்டு வரும் திறமை உள்ளவர், எனவே அவர் விராட் கோலியை வீழ்த்த விருப்பப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இந்நிலையில் அவர் கூறியிருப்பதாவது:
இதற்காகத்தான் நான் தனிப்பட்ட முறையில் ஆடுகிறேன், விராட் கோலி போன்ற வீரர்களை டெஸ்ட் போட்டியில் வீழ்த்துவதன் மூலம்தான் நான் என்னையே பரிசோதித்துக் கொள்ள முடியும், எனவே அவர் விக்கெட்டை வீழ்த்துவதற்காக நான் காத்திருக்க முடியாது, முதல் டெஸ்ட் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். கோலி ஒரு தனித்துவமான வீரர், அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இந்திய அணி பெரிய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடம் பிடித்துள்ளனர், தங்கள் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதில் இந்திய அணியினர் தெளிவானவர்கள். ஆஸ்திரேலியாவில் கடினமான பாடம் கற்றுக் கொண்டோம். எனவே மீண்டு எழுவதில் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பார்ப்பது நல்லது.
முதல் டெஸ்ட் போட்டிக்காக ஏங்கிக் காத்திருக்கிறேன், சிகப்புப் பந்தை கையில் பிடித்து வீசி ஸ்விங் செய்யும் தருணத்துக்காக பசியுடன் காத்திருக்கிறேன்” என்றார் போல்ட்.
போள்ட் இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் 256 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT