Published : 17 Feb 2020 02:32 PM
Last Updated : 17 Feb 2020 02:32 PM
தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அங்கு கடந்த முறை ஸ்மித் கேப்டன்சியில் பால் டேம்பரிங் விவகாரத்தில் கையும் களவுமாகச் சிக்கி ஸ்மித், வார்னர் கடும் அவமானத்துக்கு உள்ளாகினர். இதனையடுத்து இம்முறை தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் அதைச் சுட்டிக்காட்டி இருவரையும் ஸ்லெட்ஜ் செய்தால் அது இவர்களை ஊக்குவித்து இன்னும் நன்றாகவே விளையாட வைக்கும் என்று நம்புவதாக முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.
மார்ச், 2018-ல் நியூலாண்ட்ஸ், கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பேங்க்ராப்ட் பந்தின் ஒரு பக்கத்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்ததை தொலைக்காட்சி படங்கள் அப்பட்டமாக பிடித்ததில் கடும் சர்ச்சைகள் எழுந்து ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் மூவரையும் ஆஸி. கிரிக்கெட் வாரியம் தடை செய்தது நினைவிருக்கலாம்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உலுக்கிய அந்தச் சம்பவத்துக்குப் பிறகு மீண்டும் ஸ்மித், வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
இந்நிலையில் ஸ்டீவ் வாஹ் இது தொடர்பாகக் கூறும்போது, “ஸ்லெட்ஜ் செய்தால் இருவரும் இருகரம் நீட்டி அதனை வரவேற்பார்கள். நிச்சயம் சிலபல கருத்துக்கள் கேலிகள், கிண்டல்கள் எழவே செய்யும். அது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். நிச்சயம் அவர்கள் ஸ்லெடிங்கை எதிர்நோக்குவார்கள். இங்கிலாந்தில் இதைச் செய்யப்பார்த்தனர், ஆனால் வேலைக்கு ஆகவில்லை.
இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது, ரசிகர்கள் தொடர்ந்து ஸ்மித்தைக் கேலி செய்தனர். ஸ்மித் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 140 ரன்கள் எடுத்தார்.
எனவே தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு நான் கூறுவது என்னவெனில் ஸ்மித், வார்னரை கேலி செய்ய நினைத்தால் அது இவர்களுக்குத்தான் சாதகமாக முடியும், ரன்களைக் குவிப்பார்கள், இது இயல்பானதுதான், எதுவும் நல்ல உணர்வின் அடிப்படையில் இருந்தால் பிரச்சினையில்லை, மிகவும் அதிக வசையில் ஈடுபடாமல் இருந்தால் சரி” என்றார் ஸ்டீவ் வாஹ்
தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரெலியா 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடவிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT