Last Updated : 17 Feb, 2020 02:09 PM

 

Published : 17 Feb 2020 02:09 PM
Last Updated : 17 Feb 2020 02:09 PM

தென் ஆப்பிரிக்க கேப்டன் பதவியில் இருந்து டூபிளெசிஸ் திடீர் விலகல்

தென் ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ் : கோப்புப்படம்

ஜோகன்ஸ்பர்க்

தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து அனுபவ வீரர் பா டூபிளெசிஸ் விலகுவதாக இன்று திடீரென அறிவித்துள்ளார். புதிய கேப்டனாக குயின்டன் டீ காக் பொறுப்பேற்க உள்ளார்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் நிலையில் டூபிளெசிஸ் இந்தமுடிவை எடுத்துள்ளார்.

இதுவரை டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 விதங்களில் 112 போட்டிகளுக்கு கேப்டனாக டூபிளெசிஸ் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பணியாற்றியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முதல்முறையாக டூப்பிளசிஸ் தென் ஆப்பிரிக்க அணியை வழிநடத்தினார்.

சமீபத்தில் உலகக்கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து முதல் சுற்றோடு வெளியேறியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்களாக, தேர்வாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதன்படி, பேட்டிங் பயிற்சியாளராக ஜாக் காலிஸும், தலைமைப் பயிற்சியாளராக மார்க் பவுச்சரும், தேர்வுக்குழுத் தலைவராக ஸ்மித்தும் நியமிக்கப்பட்டார்கள்.இந்த சூழலில் அடுத்த தலைமுறையினருக்கு அணியில் வழிவிடவேண்டும் என்ற நோக்கில் கேப்டன் பதவியை டூபிளெசிஸ் ராஜினாமா செய்துள்ளார்.

கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து டூபிளெசிஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

நான் கேப்டனாக பொறுப்பேற்றபோது, அர்ப்பணிப்புடன் அணியை வழிநடத்தினேன், பேட்டிங் செய்தேன், அனைத்து நடவடிக்கையிலும் ஈடுபட்டேன். அணியில் தலைவர் எனும் முறையில் புதிய தலைவருக்கு வழிவிட வேண்டும், இளம் வீரர்களுக்கு வழிகாட்ட வேண்டும். தென் ஆப்பிரிக்க அணியின் எதிர்கால நலனுக்காக அனைத்துவிதமான போட்டிகளுக்கும் கேப்டன் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்.

இது மிகவும் கடினமான முடிவுதான் என்றாலும், அடுத்துவரும் கேப்டன் குயின்டன் டீகாக்கிற்கு தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குவேன். அணியைக் கட்டமைக்க அணி வீரர்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன், என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x