Last Updated : 16 Feb, 2020 06:24 PM

 

Published : 16 Feb 2020 06:24 PM
Last Updated : 16 Feb 2020 06:24 PM

ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது: கங்குலி அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டெஸ்ட் தொடரில் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று தெரிவித்தார்

ஆஸ்திரேலியாவில் எங்கு சென்று விளையாடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த மாதம் தெரிவித்திருந்தநிலையில் பகலிரவு டெஸ்ட் போட்டி முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி டெல்லியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆண்டு இறுதியில் செல்லும் இந்திய அணி அங்கு ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. எந்த மைதானத்தில் போட்டி நடக்கும் என்பதை முறைப்படி அறிவிப்போம்" எனத் தெரிவித்தார்

கடந்த 2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய சென்றிருந்த இந்திய அணியை பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆஸ்திரேலிய வாரியம் அனுகியது. ஆனால், போதுமான அனுபவம் இல்லாததால் அந்த கோரிக்கையை இந்திய வீரர்கள் மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து வங்கதேசத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் கொல்கத்தாவில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடிச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்குக் கிடைத்த அனுபவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் விளையாடச் சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்காக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியாவில் தங்கி டெஸ்டதொடரில் விளையாடுகிறது. இதில் பகலிரவு டெஸ்ட போட்டி அடிலெய்ட் அல்லது பெர்த் ஆகிய இரு மைதானங்களில் ஒரு மைதானத்தில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கடந்த மாதம் இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியைச் சந்தித்துப் பேசினார்கள். அப்போது இந்தியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்துவது குறித்து ஆலோசித்துள்ளார்கள். அந்த ஆலோசனையில் இந்திய அணி குறைந்த பட்சம் ஒரு போட்டியில் விளையாடச் சம்மதித்ததைத் தொடர்ந்து அவர்கள் மனநிறைவுடன் சென்றனர்

இதற்கிடையே ஐபிஎல் போட்டித் தொடர் முடிந்தபின் இலங்கை அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20தொடர் ஆகியவற்றில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x