Published : 15 Feb 2020 09:38 PM
Last Updated : 15 Feb 2020 09:38 PM
வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா உடல் தகுதித் தேர்வில் தேறிவிட்டதையடுத்து, அவர் நியூஸிலாந்து சென்று இந்திய அணியோடு இணைய உள்ளார்.
இதையடுத்து வரும் 21-ம் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் தொடரில் இசாந்த் சர்மா பங்கேற்பது உறுதியாகியுள்ளது
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், ரஞ்சிக்கோப்பைப் போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடந்த ஜனவரி 21-ம் தேதி விளையாடியபோது காலில் இசாந்த் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பந்துவீசுவதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு பெவிலியன் திரும்பினார். 6 வாரங்கள் ஓய்வில் இருக்க இசாந்த் சர்மாவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனால் நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இசாந்த் சர்மா பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.
தீவிர மருத்துவ சிகிச்சைக்குப்பின், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சேர்ந்து இசாந்த் சர்மா பயிற்சி எடுத்தார். அங்கு இசாந்த் சர்மாவுக்கு நடத்தப்பட்ட உடல் தகுதித் தேர்வில் அவர் தேறியதையடுத்து, அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அனுமதி தரப்பட்டது.
இதையடுத்து இசாந்த் சர்மா விரைவில் நியூஸிலாந்து புறப்பட உள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் வரும் 21-ம் தேதி நடக்கிறது. அந்த போட்டியிலே இந்திய அணியில் இசாந்த் சர்மா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருடன், இசாந்த் சர்மாவும் இணைகிறார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT