Published : 19 May 2014 06:50 PM
Last Updated : 19 May 2014 06:50 PM

மோசமாக விளையாட வலியுறுத்தி என்னை அணுகிய சூதாட்ட வீரர்: மெக்கல்லம் வாக்குமூலம்

2008ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மோசமாக விளையாட வலியுறுத்தி சூதாட்டத் தொடர்புள்ள கிரிக்கெட் வீரர் ஒருவர் தன்னை அடிக்கடி தொந்தரவு செய்ததாக ஐசிசி சூதாட்ட விசாரணையில் நியூசீலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் வாக்குமூலம் அளித்துள்ளதாக பிரிட்டன் பத்திரிக்கைச் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

மெக்கல்லம் அளித்த வாக்குமூலம் பற்றிய விவரத்தை பிரிட்டன் செய்தித்தாள் செய்தியாக வெளியிட்டுள்ளது.

ஐசிஎல். கிரிக்கெட்டில் விளையாடிய நியுசீலாந்து வீரர் லூ வின்செண்ட் ஆட்டத்தைத் தோற்க அல்லது மோசமாக விளையாட பெண்கள் முதல் நிறைய பணம் தருவதாக தரகர் ஒருவர் மூலம் வீரர் தன்னை அணுகியதாகக் குண்டைத் தூக்கிப் போட்டதையடுத்து பல வீரர்களின் பெயர்கள் விசாரணையில் அடிபட்டு வருகின்றன. இதில் மெக்கல்லம் பெயரும் அடிபட்டதால் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மெக்கல்லம்மை அணுகிய அதே சூதாட்ட வீரர் மூலம்தான் லூ வின்செண்ட் தானும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக அந்தச் செய்தித்தாள் கூறியுள்ளது. மெக்கல்லம் தற்போது வாக்குமூலம் அளித்துள்ளதன் விவரத்தை அந்தச் செய்தித் தாள் தெரிவித்துள்ளது.

அதாவது 2008ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் துவக்கத்தில் ஒரு வீரர் தன்னை சூதாட்டத்திற்காக அணுகியதாகவும் பிறகு இதே வீரர் இங்கிலாந்து தொடரின் போது வொர்ஸ்டர்ஷயர் விடுதி ஒன்றில் தன்னை மீண்டும் சந்தித்து எப்படி சூதாட்டத்தில் பணம் சம்பாதிப்பது என்பதை விலாவாரியாக விளக்கினார் என்றும் மெக்கலம் வாக்குமூலத்தில் அந்தச் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் உலகில் முன்னணி வீரர்கள் பலர் இப்படி பணம் சம்பாதித்து வருகின்றனர் என்று அவர்களது பெயர்களையும் அந்த வீரர் கூறினாராம். அவர் பல சர்வதேச வீரர்கள் பெயர்களைக் குறிப்பிட்டார் ஆனால் தன்னால் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்று மெக்கல்லம் தன் வாக்குமூலத்தில் கூறியதாக பிரிட்டிஷ் செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது.

அதாவது மோசமாக ஆடினால் 70,000 அமெரிக்க டாலர்கள் முதல் 1,80,000 டாலர்கள் வரை சம்பாதிக்கும் வழிமுறைகளையும் தனக்கு அந்த வீரர் சொல்லிக் கொடுத்தார் என்று மெக்கல்லம் தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது.

ஆனால் மெக்கல்லம் அவரை நிராகரித்து அனுப்பியதாகவும் இந்த அனுபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறியதாகவும் அந்த பிரிட்டிஷ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெக்கல்லம் குறித்த இந்தச் செய்தி பற்றி நியூசீலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கையில், “பிரெண்டன் மெக்கல்லம் நிச்சயம் ஐசிசி விசாரணையில் இல்லை... ஆனால் அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரிதும் வரவேற்கத்தக்கது. மெக்கல்லம் மேல் தங்களுக்கு 100% நம்பிக்கை உள்ளது” என்று கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x