Published : 10 Feb 2020 07:04 PM
Last Updated : 10 Feb 2020 07:04 PM
மவுண்ட் மாங்குனியில் செவ்வாயன்று 3வது இறுதி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்க, ஒயிட் வாஷ் முனைப்புடன் நியூஸிலாந்து களமிறங்குகிறது
இந்திய அணி கடைசியாக 1989-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக 5-0 என்று ஒயிட் வாஷ் தோல்வியைச் சந்தித்தது அதன் பிறகு தற்போது அதே நிலை வந்துள்ளது, இதனைத் தவிர்க்குமா அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி தலைமையில் இன்னொரு ஒயிட் வாஷ் வாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முதல் 2 போட்டிகளில் முதல் போட்டியில் பெரிய இலக்கை வெற்றியாக மாற்ற முடியாமல் ராஸ் டெய்லர், டாம் லேதம், நிகோல்ஸ் இன்னிங்சில் மடிந்த இந்திய அணி 2வது போட்டியில் குறைந்த இலக்கான 273 ரன்களை எடுக்க முடியாமல் ஜடேஜா, சைனி போராட்ட பேட்டிங்கிலும் கூட தோல்வியில் முடிந்தது, இதன் மூலம் தொடரை இழந்தது.
தொடரை இழந்த விராட் கோலி அதனை இழுத்து மூடும் விதமாக இந்த ஆண்டில் ஒருநாள் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவமில்லை என்று ஊற்றி மூடினார். இந்நிலையில் நாளை முக்கியத்துவமில்லாத போட்டியாக இது அமையுமா அல்லது தொடரின் கடைசி போட்டியில் வென்று இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுக்க முயலுமா என்பதைப் பார்க்க வேண்டும்
இந்திய அணியில் பும்ரா ஓய்வளிக்கப்பட்டு ஷமி திரும்ப வாய்ப்புள்ளது. அதே போல் ராகுலுக்கு ஓய்வு அளித்து ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங்குக்குத் திரும்புவாரா என்பதையும் பார்க்க வேண்டும், எதுவாக இருந்தாலும் கேதார் ஜாதவ் தனது கடைசி ஒருநாள் போட்டியை ஆடுகிறார் என்று தெரிகிறது. அவரது பங்கு குறித்து சீரிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, ஆனால் அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை, இறக்கிவிடும் டவுனில் தன்னலமற்ற வகையில் சிறு சிறு அதிரடி இன்னிங்ஸ்களை பயனுள்ள வகையில் ஆடித்தான் வருகிறார் ஜாதவ்.
மவுண்ட் மாங்குனி ‘பே ஓவல்’ மைதானம் எப்பவும் மந்தமாக இருக்கும் கொஞ்சம் பவுலர்களுக்குச் சாதகமாக இருக்கும், இங்கு இந்தியா கடைசியாக ஆடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள்ளது. நாளையும் அதுதொடர வாய்ப்புள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.
பும்ராவின் வேகப்பந்து வீச்சு கவலைக்குரியதாக மாறியுள்ளது, விக்கெட் வீழ்த்தும் அவரது பலம் சற்றே குறைய சிக்சர்களையும் விட்டுக் கொடுக்கத் தொடங்கியுள்ளார். அதாவது காயத்துக்குப் பிறகு பயமில்லாமல் வந்து வீசுவது என்பது பெரிய சவால், அவரை அணி நிர்வாகம் போற்றிப் பாதுகாப்பது அவசியம். அதனால்தான் டெஸ்ட் போட்டிக்கு அவரை முழு உடல் தகுதி மற்றும் தன்னம்பிக்கையுடன் தக்க வைக்க நாளை அவருக்கு ஓய்வு அளித்து ஷமி அணிக்குள் வருவார் என்று தெரிகிறது.
வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டியதும் அவசியமாகிறது.
ஷர்துல் தாக்கூர் நாளைய போட்டி பற்றி கூறும்போது, “ஒவ்வொரு போட்டியும்தான் முக்கியம். 0-2 தோல்வியில் இருக்கிறோம் என்பதால் இறுதிப் போட்டி முக்கியமில்லாது போய் விடாது. எல்லா சர்வதேச போட்டியுமே திறவுகோல்தான். நாளை 0-2 என்பதால் எங்களை ஆக்ரோஷமாக வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு” என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.
நியூஸிலாந்தைப் பொறுத்தவரை டெய்லரின் பார்ம், நிகோலஸ், கப்தில், ஆகியோரின் பார்முடன் கேன் வில்லியம்சன் வருகிறார், பவுலிங்கில் சவுதி, ஹாமிஷ் பென்னட், அனைத்துக்கும் மேலாக இங்கிலாந்தின் ஆக்ரோஷ பிளிண்டாஃப் பந்து வீச்சை நினைவூட்டும் கைல் ஜேமிசன் பவுலிங்கும் இந்திய அணியை திணறடித்தது.
இந்திய அணி வருமாறு: மயங்க் அகர்வால், பிரிதிவி ஷா, விராட் கோலி, ராகுல், அய்யர், பாண்டே/ ஜாதவ்/ ஷிவம் துபே, ஜடேஜா, சைனி, ஷமி, சாஹல், ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர்
நியூஸிலாந்து அணி: மார்டின் கப்தில், நிகோல்ஸ், டெய்லர், டாம் லேதம், கேன் வில்லியம்சன், கொலின் டி கிராண்ட் ஹோம், சாண்ட்னர், சவுதி, பென்னட், இஷ் சோதி, கைல் ஜேமிசன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT