Published : 10 Feb 2020 09:45 AM
Last Updated : 10 Feb 2020 09:45 AM
தென் ஆப்பிரிக்கா போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்ற யு-19 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய இளையோர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி யு-19 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபாரமான 122 பந்து 88 ரன்களில் 156/3 என்று வலுவாக இருந்த நிலையில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தவுடன் 21 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணி இலக்கை விரட்டும் மழையினால் தடங்கல் ஏற்பட்ட போது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி மாற்றியமைத்த இலக்கான 170 ரன்களை 42.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக யு-19 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது வங்கதேசம்.
இரண்டு விஷயங்கள் இந்திய அணிக்கு எதிராகச் சென்றது, ஒன்று பேட்டிங்கில் 21 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கோட்டை விட்டது, இன்னொன்று பவுலிங்கின் போது 33 ரன்களை எக்ஸ்ட்ராஸ் வகையில் கொடுத்தது. இதில் 19 வைடுகள் என்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது.
தங்கள் நாட்டு கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகத்தில் வங்கதேசம் இந்த உலகக்கோப்பையின் மூலம் பொன் எழுத்துக்களால் தங்கள் வெற்றியை எழுதியுள்ளது.
இரு அணி வீரர்களுக்கும் இடையே உறவுகள் நட்பு ரீதியாக இல்லை, கிட்டத்தட்ட சண்டை மூள்வது போல்தான் இருந்தது, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் இந்திய வீரர்கள் மீது வசைமாரி பொழிந்தது காமிராவில் பதிவாகியுள்ளது.
18 வயதான வங்கதேச கேப்டன் அக்பர் அலி மிகவும் பதற்றமான தருணங்களில் தன் மன உறுதியை நிரூபித்து 77 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக வெற்றி பெறச் செய்து கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார்.
வங்கதேச விரட்டல் நன்றாகத் தொடங்கியது பர்வேஸ் ஹுசைன் இமான் (47 ரன்கள் 79 பந்துகள்), மற்றும் தன்சித் ஹசன் (17 இணைந்து 9 ஓவர்களில் 50 ரன்கள் என்று பிரமாதத் தொடக்கம் அளித்தனர்.
அதன் பிறகு லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் பந்து வீச வந்தவுடன் வங்கதேசம் ஆட்டம் கண்டது, அவர் 10 ஓவர்களில் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரது கூக்ளிக்களை வங்கதேச பேட்டிங்கினால் புரிந்து கொள்ள முடியவில்லை.
முதலில் தன்ஸித் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேற, மஹ்முதுல் ஹசன் ஜாய் (8) கூக்ளியில் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். தவ்ஹித் ஹிருதய் கூக்ளியை கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஷஹாதத் ஹுசைனுக்கு விக்கெட் கீப்பர் ஜூரல் அருமையாக ஸ்டம்பிங் செய்ய 50/0 என்று இருந்த வங்கதேச 65/4 என்று கலங்கிப்போனது.
ரவி பிஷ்னாயை அடுத்து அபாரமாக வீசிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் (2/25), ஷமிம் ஹுசைன் , அவிஷேக் தாஸ் இருவரையும் காலி செய்ய வங்கதேசம் 102/6 என்று ஆனது. இந்தச் சமயத்தில்தான் அக்பர் அலி பிஷ்னாயின் கூக்ளி ஒன்றை சிக்சருக்குத் தூக்கினார், பிஷ்னாயின் பிரச்சினை என்னவெனில் கூக்ளி அளவுக்கு அவரிடம் லெக்ஸ்பின் திறம்பட இல்லை என்பதே. அக்பர் அலி பிரமாதமாக ஆடினார். இவருடன் 13வது ஓவரில் 25 ரன்களில் ரிட்டையர்டு ஆன தொடக்க வீரர் பர்வேஸ் ஹுசைன் இமான் சேர இருவரும் 41 ரன்கள் கூட்டணி அமைத்தனர் இதனால் ஸ்கோர் 143 ரன்களை எட்டியது. அப்போது மேன் வித் கோல்டன் ஆர்ம் ஜெய்ஸ்வால் பந்து வீச இமான் வெளியேறினார்.
விடப்பட்ட கேட்ச்கள், பீல்டிங்கில் ஓவர் த்ரோ, வீசிய 19 வைடுகள், இரு அணி வீரர்களுக்கு இடையேயான உஷ்ணங்கள் என்று இந்தியா பதற்றத்தில் சொதப்பியது, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்ட போது மறு இலக்கு 170 ஆக மாற்றப்பட்டது அப்போது வங்கதேசத்துக்கு 30 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது, வெகு சுலபமாக முடிந்தது. உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது வங்கதேசம். கேப்டன் அக்பர் அலி 43 ரன்களையும் அவருடன் ராகிபுல் ஹசன் 9 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.
ஆட்ட நாயகனாக அக்பர் அலியும் தொடர் நாயகனாக யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்புடையவை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT