Published : 03 Aug 2015 02:56 PM
Last Updated : 03 Aug 2015 02:56 PM

கிரெய்க் எர்வின் 130 நாட் அவுட்: நியூஸிலாந்தின் 303 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய ஜிம்பாப்வே

ஹராரேயில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணியை ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வேயினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட நியூஸிலாந்து முதலில் பேட் செய்து வில்லியம்ன்சன் (97), ராஸ் டெய்லர் (112), கிராண்ட் எலியட் (43) ஆகியோரது பங்களிப்பின் மூலம் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி மசகாட்ஸா (84), சிபாபா (42), கிரெய்க் எர்வின் (130) ஆகியோரது அபார ஆட்டத்தினால் 49 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே 1-0 என்று முன்னிலை பெற்றது. மணிக்கு 150 கிமீ வீசும் ஹென்றி, மெக்லினாகன், ஜேம்ஸ் நீஷம், நேதன் மெக்கல்லம் போன்ற பவுலர்கள் இருந்தும் ஜிம்பாப்வேயின் அதிரடியைத் தடுக்க முடியவில்லை. நியூஸிலாந்து அணியில் பிரெண்டன் மெக்கல்லம் இல்லை அவருக்குப் பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தகக்து.

மசகாட்ஸா, சிபாபா தொடக்கத்தில் ரன்களை விரைவு கதியில் எடுக்க முடியவில்லை. 10 ஓவர்களில் 43/0 என்றே இருந்தது. ஆனால் அடுத்த 5 ஓவர்களில் கொஞ்சம் வேகம் கூட்டப்பட்டு 31 ரன்கள் வந்தது ஆனால் சிபாபா 42 ரன்களில் நேதன் மெக்கல்லமின் அபாரமான ஆஃப் ஸ்பின் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி கடுமையாக உள்ளே திரும்ப அவர் கால்களைப் போட்டு கவர் டிரைவ் ஆட எத்தனித்தார் ஆனால் பந்து உள்ளே புகுந்து பவுல்டு ஆனது.

ஆனால் 15 ஓவர்களில் 74 என்ற நல்ல அடித்தளம் அமைக்கப்பட்டது.

உடனேயே கிரெய்க் எர்வின் களமிறங்கினார். 25 ஓவர்களில் ஸ்கோர் 128 ரன்களை எட்டியது. மசகாட்ஸா 69 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 54 ரன்களுடனும் எர்வின் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 பந்துகளில் 30 ரன்களுடனும் இருந்தனர்.

மெக்கல்லம் மற்றும் லெக் ஸ்பின்னர் சோதி ஆகியோரை எதிர்த்து எர்வின் மற்றும் மசகாட்சா சிறப்பாக விளையாடினர். ஸ்வீப்பை திறம்பட பயன்படுத்தினர்.

மசகாட்ஸா அதிரடி புல் ஷாட்களை ஆடினார். எர்வின் துடுப்பு ஸ்வீப் ஷாட்களை அதிகம் பயன்படுத்தினார். 35-வது ஓவரில் 99 பந்துகளில் 84 ரன்கள் எடுத்த மசகாட்சாவை நேதன் மெக்கல்லம் வீழ்த்தினார். ஆனால் இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 121 பந்துகளில் 120 ரன்களை விளாசினர்.

இப்போது நியூஸிலாந்துக்கு லேசான நம்பிக்கை வந்தது, ஆனால் கேப்டன் சிகும்பரா, எர்வின் இணைந்து மேலும் 66 ரன்களைச் சேர்த்தது நியூஸி.யின் முயற்சிகளை வெறுப்பேற்றியது. இதுவும் அதிரடி பார்ட்னர்ஷிப். சிகும்பரா 31 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சர் அடித்து 26 ரன்கள் எடுத்தார். நேதன் மெக்கல்லம் பந்தில் லாங் ஆனில் கேட்ச் ஆனார். ஆனால் இதே ஓவரில்தான் சிகும்பரா ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு எர்வின் மேலும் பழுதில்லாமல் வெற்றியை உறுதி செய்தார். 58 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் அரைசதம் கடந்த எர்வின் 47-வது ஓவரில் மெக்லினாகன்னை ஒரு சுழற்றி சுழற்றி பவுண்டரி அடித்து தனது முதல் ஒருநாள் சதத்தை எட்டினார். 99 பந்துகளில் சதம் கண்டார் எர்வின் இதில் 8 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும்.

48-வது ஓவர் தொடக்கத்தில் 270/3 என்ற நிலையில் வெற்றிக்கு 3 ஓவர்களில் 34 ரன்கள் தேவை. அப்போது ஹென்றி வீசிய 48-வது ஓவரில் விளாசித் தள்ளினார் எர்வின். ஹென்றியின் பந்தை சற்றே லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு முன்னங்காலை இடப்புறமாக ஒதுக்கிக் கொண்டு லாங் ஆஃபில் அருமையாக சிக்ஸ் ஒன்றை அடித்தார் எர்வின். பிறகு ஸ்கொயர்லெக், தேர்ட்மென் திசைகளில் 2 பவுண்டரிகள் அடிக்க அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது.

49-வது ஓவரை ஜேம்ஸ் நீஷம் வீச 5-வது தாழ்வான புல்டாஸை ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்த எர்வின் அடுத்த ஆஃப் ஸ்டம்ப் வெளியே பிட்ச் ஆன பந்தை மிட்விக்கெட்டில் ஒரு சுழற்று சுழற்ற பந்து 6 ரன்கள். ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. அதிர்ச்சிகரமான ஒரு ஆட்டத்தை ஆடி அபாரமான ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார் கிரெய்க் எர்வின். 49 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்து வென்றது ஜிம்பாப்வே. கிரெய்க் எர்வின் 108 பந்துகளில் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 130 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

முன்னதாக நியூஸிலாந்து இன்னிங்ஸில் 97 ரன்களை எடுத்த கேப்டன் வில்லியம்சன் தொடர்ந்து 5-வது அரைசத ஸ்கோரை அடித்தார். 102 பந்துகளில் 97 எடுத்த வில்லியம்சன், பன்யாங்கரா பந்தில் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். ஜிம்பாப்வே நல்ல பீல்டிங்கும் செய்தது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

ராஸ் டெய்லர் தனது 15-வது ஒருநாள் சதத்தை எடுத்தார். இந்த ஆண்டில் 4-வது சதம். நிதானமாக ஆடிய டெய்லர் 89 பந்துகளில் அரைசதம் கண்டார். அதில் 2 பவுண்டரிகள்தான், அதன் பிறகு வேகம் கூட்டி 122 பந்துகளில் 112 ரன்களை 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் எடுத்தார். கிராண்ட் எலியட் 32 பந்துகளில் அதிரடி 43 ரன்களை எடுக்க நியூஸிலாந்து 303 ரன்களை எட்டியது.

ஆட்ட நாயகனாக கிரெய்க் எர்வின் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x