Last Updated : 06 Feb, 2020 02:40 PM

4  

Published : 06 Feb 2020 02:40 PM
Last Updated : 06 Feb 2020 02:40 PM

பானி பூரி விற்று, பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் வாழ்க்கை: உலகக் கோப்பையில் சதம் அடித்து திரும்பிப் பார்க்க வைத்த 17 வயது இளம் வீரர்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால்.

புதுடெல்லி

பானி பூரி விற்று, பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் தங்கி வாழ்க்கை நடத்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்று சதம் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஜெய்ஸ்வாலை ஐபிஎல் ஏலத்தில் ரூ.2.40 கோடிக்கு விலைக்கு வாங்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாழ்வு கொடுத்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 113 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்கார்களான ஜெய்ஸ்வால், சக்சேனா (59) இருவரும் சேர்ந்து 176 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய அணியில் இடம் பிடிக்க ஜெய்ஸ்வால் தனது வாழ்வில் கடந்து வந்த பாதைகள் எளிமையானவை அல்ல. வறுமையிலும், போதுமான விளையாட்டு வசதிகள் இல்லாத சூழலில் பானி பூரி விற்றுக்கொண்டும், பிளாஸ்டிக் டென்ட் குடிசையில் தங்கியும் கிரிக்கெட் பயிற்சி எடுத்து, இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், பதோகி அருகே சூர்யா நகரைச் சேர்ந்தவர் யாஷ்வி ஜெய்ஸ்வால். இவரின் தந்தை சிறிய கடை நடத்தி வருகிறார். தன்னுடைய 11-வது வயதில் பிழைப்புத் தேடியும், கிரிக்கெட்டில் லட்சிய வீரராக மாற வேண்டும் என்ற நோக்கிலும் ஜெய்ஸ்வால் மும்பைக்கு வந்துள்ளார்.

ஆனால், அவருடைய ஏழ்மை காரணமாக மும்பையில் உள்ள முஸ்லிம் யுனைடெட் மைதானம் அருகே பிளாஸ்டிக் தார்ப்பாயில் ஒரு குடிசை அமைத்து ஜெய்ஷ்வால் தங்கியுள்ளார். பானி பூரி தயாரிக்கும் ஒருகடையில் வேலை பார்த்த நேரம் போக மீதி நேரத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

ஜெய்ஸ்வால் பேட்டிங், பந்துவீச்சு திறமையைப் பார்த்த பயிற்சியாளர் அவருக்குப் பயிற்சி அளித்துள்ளார். அதன்பின் மும்பையில் கடந்த 2015-ம் ஆண்டு கில்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 319 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார்.

அதன்பின், செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் நடந்த விஜய் ஹசாரே போட்டியில் (லிஸ்ட் ஏ) ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ரன்கள் சேர்த்து அனைவரின் கவனத்தையும் ஜெய்ஸ்வால் ஈர்த்துள்ளார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால்

இதையடுத்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்தது. இதுவரை அரையிறுதி வரை இந்திய அணியில் விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் உள்பட 312 ரன்கள் குவித்து அனைவரையும் ஈர்த்துள்ளார்.

ஜெய்ஸ்வாலின் அபாரமான ஆட்டத்தைப் பார்த்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் கூறுகையில், "என்னுடைய வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் ஜெய்ஸ்வால் அனைத்து உயரத்துக்கும் செல்வார். கிரிக்கெட் மீதான ஈர்ப்பு, சக்தி, அர்ப்பணிப்பு இவை மூன்றும் ஜெய்ஸ்வாலிடம் இருக்கிறது. நிச்சயம் இந்திய சீனியர் அணியில் ஜெய்ஸ்வால் இடம் பெறுவார். பாகிஸ்தான் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் ஆட்டத்தைப் பார்த்தும், அவரின் வாழ்க்கையைப் பார்த்தும் கற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பாக ஜெய்ஸ்வால் தொடர்ந்து விளையாடினால், அவரைத் தேடி பணம் வந்துகொண்டே இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்திய வீரர் ஜெய்ஸ்வால் கடந்த டிசம்பர் மாதம் அளித்த பேட்டியில், "நான் எனது தந்தையுடன் மும்பைக்கு வந்தபோது ஆசாத் மைதானத்தைப் பார்த்து அங்கு கிரிக்கெட் விளையாட விரும்பினேன். பயிற்சியும் எடுத்தேன், ஆனால், குடும்பச் சூழல் கருதி என்னை எனது தந்தை மீண்டும் உத்தரப் பிரதேசத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். நான் அவருடன் செல்ல மறுத்துவிட்டேன்.

அப்போது எனது திறமையைப் பார்த்த பயிற்சியாளர் பப்பு சார், நான் சிறப்பாக விளையாடினால், மைதானத்தில் தங்கிக்கொள்ள ஒரு டென்ட் குடிசைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். நான் சிறப்பாக விளையாடியதால், நான் தங்கிக்கொள்ள இடம் கிடைத்தது. ஆனால், எனது குடிசையில் கழிவறை இல்லை, விளக்கு கூட இல்லை. கடினமான வாழ்க்கையைத்தான் நடத்தினேன்.

சாப்பாட்டுக்கு வழியில்லாத சூழலில் பானி பூரி விற்பனை செய்தேன். அப்போது என்னைப் பார்த்த மற்ற சக வீரர்கள் கிண்டல் செய்தார்கள். அந்த நேரம் எனக்கு அவமானமாக இருந்தது. இருப்பினும் கிரிக்கெட்டில் சிறந்த இடத்துக்கு வர வேண்டும் என்ற உறுதியான மனதுடன் நான் பானி பூரி விற்று அதில் கிடைத்த பணத்தை குடும்பத்துக்கும், எனது பயிற்சிக்கும் பயன்படுத்தினேன்.

சில நேரங்களில் காலை நேரத்தில் போட்டியில் சதம் அடித்திருப்பேன். மாலையில் பானி பூரி விற்பேன். இதை நினைக்கும்போது கண்ணீர் வரும். ஆனாலும் கிரிக்கெட் மீது மட்டும் கவனமாக இருந்து இந்திய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது" என ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

தவறவிடாதீர்..

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அமைதித் திட்டம் குறித்து பாலஸ்தீன அதிபர் பேச முடிவு

விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகரின் வீட்டில் ஏன் ஐடி ரெய்டு இல்லை? - சீமான் கேள்வி

சபரிமலை வழக்கில் சட்டம் சார்ந்த கேள்விகள் பெரிய அமர்வுக்கு மாற்றப்படுமா? - உத்தரவு ஒத்திவைப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x