Published : 05 Feb 2020 06:14 PM
Last Updated : 05 Feb 2020 06:14 PM
ராஸ் டெய்லரின் அபாரமான சதம், லாதம், நிகோலஸ் அரை சதங்கள் ஆகியவற்றால் ஹேமில்டனில் இன்று பகலிரவாக நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது. 348 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 348 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக சதம் அடித்த ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.
அதிரடியாக ஆடிய டெய்லர் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் உள்பட 84 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக 281 ரன்கள் சேஸிங் செய்ததே நியூஸிலாந்து அணியின் அதிகபட்ச ரன்கள். இப்போது 347 ரன்கள் சேஸிங் செய்ததே நியூஸிலாந்து அணியின் அதிகபட்ச சேஸிங்காக அமைந்துள்ளது.
இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமே நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெய்லரின் அபாரமான சதம் மட்டுமே என்றால் மிகையாகாது. அவருக்குத் துணையாக ஆடிய நிகோலஸ், விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஆகியோரும் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தனர்.
347 ரன்கள் எடுத்துவிட்டோம், இந்த ஸ்கோரை எவ்வாறு நியூஸிலாந்து வீரர்கள் சேஸிங் செய்யப்போகிறார்கள் என்று இந்தியப் பந்துவீச்சாளர்கள் மெத்தனமாகப் பந்து வீசியதே தோல்விக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஒருநாள் போட்டியில் 347 ரன்கள் என்பது மிகப்பெரிய ஸ்கோராகும். இந்த ஸ்கோரைச் சேர்த்துவிட்டு வெற்றிக் கயிற்றை இந்திய அணி வீரர்கள் இழுத்துப் பிடிக்க முடியாவிட்டால் பந்துவீச்சின் தரத்தை என்னவென்று சொல்வது?
இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங் துறையில் எந்தவிதமான குறைபாடும் இல்லாத அளவுக்கு விளையாடியதால் மிகப் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது.
ஆனால், பந்துவீச்சில் இந்தப் போட்டியில் மிக மோசமாகவே செயல்பட்டார்கள். பும்ரா ஒருவரைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல்தான் வழங்கினர்.
அதிலும் குறிப்பாக ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் இருவரும் 80 ரன்களுக்கும் அதிகமாக வாரி வழங்கினர். குல்தீப் பந்துவீச்சில் முன்பு இருந்த ஒரு சுழல், பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் கூக்ளி முறை இல்லை என்பதை பேட்ஸ்மேன்கள் எளிதாகக் கணித்து விளையாடுகிறார்கள். குல்தீப்புக்கு பதிலாக சஹலைச் சேர்த்திருக்கலாம்.
அதேபோல ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் நியூஸிலாந்து ஆடுகளத்தில் ஷைனிக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். பரிசோதனை முயற்சியும், அணித் தேர்வில் தவறும்தான் இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாகிவிட்டன.
நியூஸிலாந்து அணி 30 ஓவர்கள் வரை 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் என்று 6 ரன் ரேட்டுக்கும் குறைவாகவே வைத்திருந்தார்கள். ஆனால், அடுத்த 18 ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சை நொறுக்கி எடுத்த டெய்லர், லாதம், நிகோலஸ் ஆகியோர் சேர்ந்து 178 ரன்கள் சேர்த்துள்ளார்கள். 30 ஓவர்களுக்கு மேல் இந்திய அணியின் பந்துவீச்சு மிக மோசமாகவே அமைந்துவிட்டது.
ஃபீல்டிங்கில் நியூஸிலாந்து வீரர் நிகோலஸை கோலி ரன் அவுட் செய்தவிதம் "அந்தக் காலத்து ஜான்டி ரோட்ஸை" நினைவுபடுத்தியது. ஒட்டுமொத்தத்தில் இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் அறிமுக தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார்கள்.
அவசரப்பட்டு அடிக்கடி மோசான ஷாட்களை ஆடும் பிரித்வி ஷா இந்த முறையும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. 20 ரன்களில் கிராண்ட்ஹோம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 50 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இந்திய அணி இழந்தது.
அடுத்து விராட் கோலி களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 34 ரன்களில் சவுதியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் கூட்டணி இணைந்தனர். இந்தக் கூட்டணி 102 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. கோலி 51 ரன்கள் சேர்த்திருந்தபோது சோதி பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ராகுல், ஸ்ரேயாஸ் அய்யருடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். ராகுல் வந்தபின் இந்திய அணியின் ஸ்கோர் வேகமெடுத்தது.
அதிரடியாக ஆடிய ராகுல் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு 41 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 101 பந்துகளில் சதம் அடித்து 103 ரன்னில் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகள் அடங்கும். இந்தக் கூட்டணி 136 ரன்கள் சேர்த்தது.
ராகுலுடன் சேர்ந்த கேதார் ஜாதவ் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியாக ஷாட்களை ஆடி ரன்களைக் குவித்தார். ராகுல் 64 பந்துகளில் 88 ரன்களுடன் (6 சிக்ஸர்,3 பவுண்டரி), கேதார் ஜாதவ் 26 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சவுதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
348 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. மார்டின் கப்தில், நிகோலஸ் மிகவும் எச்சரிக்கையாகவே தொடங்கி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். கப்தில் 2 பவுண்டரிகள் உள்பட 32 ரன்கள் சேர்த்த நிலையில், தாக்கூர் பந்துவீச்சில் வெளியேறினார்.
அடுத்து வந்த பிளன்டெல் 9 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் ராகுலால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். 3-வது விக்கெட்டுக்கு வந்த டெய்லர், நிகோலஸுடன் சேர்ந்தார். இருவரின் பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.
இந்தக் கூட்டணி 62 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். நிகோலஸுக்கு 78 ரன்கள் சேர்த்திருந்தபோது அவரை பிரமாதமாக ரன் அவுட் செய்து கோலி ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து லாதம் களமிறங்கி, டெய்லருடன் சேர்ந்தார்.
நியூஸிலாந்து அணி குறுகிய இடைவெளியில் இரு விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியதாக உணரப்பட்டது. ஆனால், 4-வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் லாதம், டெய்லருடன் சேர்ந்தார். டெய்லரின் அனுபவம், அணியை மெல்ல வெற்றிக்கு நகர்த்த உதவியது.
30 ஓவர்களுக்கு மேல் இருவரும் சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். ஓவருக்கு 10 ரன்களுக்குக் குறைவில்லாமல் எடுத்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினர்.
டெய்லர் 45 பந்துகளில் அரை சதத்தையும், லாதம் 38 பந்துகளில் அரை சதத்தையும் எட்டினர். இந்தக் கூட்டணி 138 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். லாதம் 69 ரன்னில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நீஷம் 9, கிராண்ட்ஹோம் 1 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோதும் டெய்லர் தூணாக ஒருபுறம் பேட் செய்தார். அதிரடியாக ஆடிய டெய்லர் 73 பந்துகளில் சதம் அடித்தார். டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்களுடனும்(4 சிக்ஸர், 10 பவுண்டரி), சான்ட்னர் 12 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் சேர்த்து நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்திய அணித் தரப்பி்ல குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT