Published : 05 Feb 2020 09:05 AM
Last Updated : 05 Feb 2020 09:05 AM
ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் கோவை நேரு விளையாட்ட ரங்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சிட்டி - இந்தியன் ஏரோஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான சென்னை சிட்டி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்வி, 2 டிராக்களை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. இந்தியன் ஏரோஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி, 2 வெற்றி, 6 தோல்வி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது.
இந்தியன் ஏரோஸ் அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து சென்னை சிட்டி அணியின் பயிற்சியாளர் அக்பர் நவாஸ் கூறும்போது, “மோகன் பகான் அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி போதிலும், துரதிருஷ்டவசமாக வெற்றி பெற முடியாமல் போனது. இந்தியன் ஏரோஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இளம் வீரர்களைக் கொண்டுள்ள இந்தியன் ஏரோஸ் அணி மிக வேகமாக விளையாடுவார்கள். எங்கள் அணியின் வீரர்களும் அனுபவம், திறனுடன் இருப்பதால் இந்தப் போட்டி கடுமையாக இருக்கும். பயிற்சியில் விளையாடியது போலவே, இந்தியன் ஏரோஸ் அணிக்கு எதிராக எங்களது வீரர்கள் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.
இந்தியன் ஏரோஸ் அணியின் பயிற்சியாளர் வெங்கடேஷ் சண்முகம் கூறும்போது, “ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி உள்ளதால், எங்கள் அணி வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். எனவே சென்னை சிட்டி அணிக்கு மிகுந்த சவால் கொடுப்போம். அந்த அணியிலும் திறமையான வீரர்கள் இருப்பதால், போட்டி கடுமையாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT