Published : 02 Feb 2020 06:15 PM
Last Updated : 02 Feb 2020 06:15 PM
பேட்டிங் ஃபார்ம்தான் முக்கியம், டி20 உலகக்கோப்பையைப் பற்றி இப்போது சிந்திக்கவில்லை என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரருமான ராகுல் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறை இந்திய அணி பதிவு செய்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 224 ரன்கள் சேர்த்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் அருமையாக பேட்டிங் செய்த ராகுலின் சராசரி 56 ரன்கள் என்ற வீதத்தில் இருக்கிறது.
தொடர் நாயகன் விருது வென்றது குறித்து ராகுல் அளித்த பேட்டி:
"நான் இந்தத் தொடரில் பேட்டிங் சிறப்பாகச் செய்தேன் என நினைக்கிறேன். எனது பணி சிறப்பாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. டி20 உலகக்கோப்பையைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இப்போது என்னுடைய பேட்டிங் ஃபார்ம்தான் எனக்கு முக்கியம். இதேபோல அனைத்துப் போட்டிகளிலும் பேட்டிங் செய்ய வேண்டும்.
நியூஸிலாந்து மண்ணில் வந்து 5-0 என டி20 தொடரை வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய ஆட்டமும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. நம்பிக்கையுடன் இங்கு வந்து எங்கள் திறமையை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி தொடரை வென்றிருக்கிறோம். ஒவ்வொரு சூழலையும் எதிர்கொண்டு அதற்கான விடையைக் கண்டுபிடித்திருக்கிறோம். எனக்கும், எனது அணிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது.
தொடர்ந்து வெற்றி பெறும் இந்த மனப்போக்கு, பழக்கத்தை நாங்கள் தக்கவைக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் ,நாங்கள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் வெல்ல வேண்டும். உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக சில சோதனைகளைச் செய்து பார்த்திருக்கிறார்கள். இன்னும் நம்பிக்கையுடன் செயல்படுவோம். அடுத்துவரும் ஒருநாள் தொடரையும் இதே உற்சாகத்தில் எதிர்கொள்வோம்".
இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT