Published : 02 Feb 2020 08:10 AM
Last Updated : 02 Feb 2020 08:10 AM

மவுண்ட் மவுங்கனுயில் இன்று 5-வது டி 20 ஆட்டம்: ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி

விராட் கோலி

மவுண்ட் மவுங்கனுயி

இந்தியா - நியூஸிலாந்து அணி கள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் ஆட்டம் இன்று பிற்பகலில் மவுண்ட் மவுங்கனுயில் நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை முழுமை யாக 5-0 என கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேவேளையில் நியூஸிலாந்து அணி ஆறுதல் வெற்றியை பெறு வதில் முனைப்பு காட்டக்கூடும்.

ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரு டி 20 ஆட்டங்களிலும் இந்திய அணி முறையே 6 மற்றும் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஹாமில்ட்டனில் நடைபெற்ற 3-வது ஆட்டத்திலும், வெலிங்டனில் நடைபெற்ற 4-வது ஆட்டத்திலும் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி கண்டது. இதனால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 4-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் கடைசி டி 20 ஆட்டம் மவுண்ட் மவுங்கனுயி நகரில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இந்திய அணி மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்துவதில் தீவிரமுனைப்பு காட்டக்கூடும். தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டதால் 4-வது ஆட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் சில பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தது. இதை இன்றைய ஆட்டத்திலும் தொடரச் செய்யக்கூடும்.

அநேகமாக இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பந்த் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் களமிறங்கும் பட்சத்தில் பணிச்சுமை காரணமாக கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். 3-வது ஆட்டத்தில் கடைசி ஓவரை மொகமது ஷமி அபாரமாக வீசிய நிலையில் அந்த பணியை 4-வது ஆட்டத்தில் ஷர்துல் தாக்குர் திறம்பட செய்தார். மொகமது ஷமி 9 ரன்களை பாதுகாத்த நிலையில் ஷர்துல் தாக்குர் நியூஸிலாந்து அணியை 7 ரன்கள் சேர்க்கவிடாமல் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை டையில் முடிக்க உதவியிருந்தார்.

இதேபோன்று சூப்பர் ஓவரில் ஹாமில்ட்டனில் ரோஹித் சர்மா மிரளச் செய்தது போன்று வெலிங்டனில் கே.எல்.ராகுல் மட்டையை விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வெற்றி கண்டிருந்தது.

அதேவேளையில் நியூஸிலாந்து அணியானது வெற்றியை எளிதாக தாரை வார்த்தது. அதிலும் வெலிங்டன் ஆட்டத்தில் கடைசி ஓவரில்4 விக்கெட்களை கொத்தாக பறிகொடுத்தது. இந்த பந்துகளில் ஒரு ரன் சேர்த்திருந்தால் கூட ஆட்டத்தின் நிலைமை நியூஸிலாந்து அணிக்கு சாதகமாக இருந்திருக்கும்.

மேலும் சூப்பர் ஓவரில் இரு ஆட்டத்திலும் டிம் சவுதி பந்து வீச்சில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினார். அனுபவம் இல்லாத மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படாதது ஒட்டுமொத்த அணியையும் பலவீனம் அடையச் செய்துள்ளது.

வில்லியம்சன் இல்லாத நிலையில் வெலிங்டனில் காலின்மன்றோ, டிம் ஷெய்பர்ட் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். அதேவேளையில் கடந்த இரு ஆட்டங்களிலும் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டை எளிதாக பறிகொடுத்த ராஸ் டெய்லர் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் விலகியிருந்த கேப்டன்கேன் வில்லியம்சன் இன்று களமிறங்கக்கூடும். ஆறுதல் வெற்றியை பெற வேண்டுமானால் அனைத்து துறையிலும் நியூஸிலாந்து அணி மேம்பட வேண்டும்.

நியூஸிலாந்து அணியானது சொந்த மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் இதுவரை ஒயிட்வாஷ் பெற்றதில்லை. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரில் ஒரே ஒருமுறை மட்டுமே அனைத்து ஆட்டங்களிலும் நியூஸிலாந்து தோல்வி கண்டது.

அந்தத் தொடர் இரு ஆட்டங்களை கொண்டதாக அமைந்திருந்தது. 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற இரு ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை நியூஸிலாந்து அணி 0-2 என பறிகொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரம்: பிற்பகல் 12.20

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x