Published : 31 Jan 2020 05:16 PM
Last Updated : 31 Jan 2020 05:16 PM

அன்று ஷமி, இன்று ஷர்துல்: சமனுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஓவர் ‘சோக்கர்ஸ்’ ஆன நியூஸி. : ஒயிட்வாஷை நோக்கி இந்தியா 4-0 வெற்றி

வெலிங்டனில் நடைபெற்ற 4வது டி20 போட்டியிலும் கடைசி ஓவர் ட்ராமா நடந்தேறியது, அன்று ஷமியினால் மேட்ச் ‘டை’ ஆக இன்று ஷர்துல் தாக்கூரின் கடைசி ஓவரில் ஆட்டம் மீண்டும் டை ஆனது. ஆனால் சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து 13 ரன்களை எடுக்க இந்திய அணி 14/1 என்று எடுத்து அபார வெற்றி பெற்று தொடரில் 4-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இந்த மைதானத்தில் கடைசி 5 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றது என்ற வரலாறு ஒருபுறமிருக்க, சவுத்தி முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைக்க இந்திய அணி திக்கித் திணறி கடைசியில் மணீஷ் பாண்டேயின் அபார அரைசதத்தினால் 165/8 என்று முடிந்தது, ஷர்துல் தாக்கூர் 20, சைனி 11 ரன்கள் என்று பங்களிப்பு செய்ததால் ஓரளவுக்கு சவாலான ஸ்கோரை இந்திய அணி எட்டியது.

இந்நிலையில் நியூஸிலாந்து இலக்கை விரட்டும் போது 159/4 என்ற நிலையில் கடைசி ஒவரில் 7 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்தை கையில் எடுத்தார், நியூஸி. அணியில் ராஸ் டெய்லர், செய்ஃபர்ட் களத்தில் இருந்தனர்.

‘சூப்பர் ஓவருக்கு; இட்டுச் சென்ற ஷர்துல் தாக்கூரின் கடைசி ‘சூப்பர்’ ஓவர்:

வெற்றிக்கு 7 ரன்களே தேவை என்ற நிலையில் 24 ரன்கள் சேர்த்து ஆடிவந்த டெய்லர் முதல் பந்தை எதிர்கொண்டார். ஷர்துல் தாக்குரின் இந்தப் பந்தை டெய்லர் நினைத்திருந்தால் கிரவுண்டுக்கு வெளியே அனுப்பியிருக்கலாம், ஆனால் அவர் ஷாட் சரியாக அமையாமல் தூக்கி அடிக்க டீப் மிட்விக்கெட்டில் அய்யர் அருமையாக கேட்ச் எடுக்க டெய்லர் வெளியேறினார்.

2வது பந்தை டி.ஜே.மிட்செல் மிட் ஆஃப் மேல் தூக்கி அடிக்க பந்து பவுண்டரிக்குச் சென்றது 4 ரன்கள். 4 பந்துகளில் 3 ரன்கள், இதை விட வெற்றிக்கு என்ன தேவை?

3வது பந்தை தாக்கூர் மெதுவான ஷாட் பாலாக வீச மிட்செல் பந்தை கோட்டை விட்டார், ஆனால் எதிர்முனையில் செய்ஃபர்ட் 57 ரன்களில் ஆடி வந்ததால் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுப்போம் என்று அபத்தமாக ஒரு ‘பை’ ரன் எடுக்க முயல ராகுல் த்ரோ ஸ்டம்பைத் தாக்க செய்பர்ட் ரன் அவுட் ஆனார். பை ரன் முடிவு மிக மோசமானது, மிட்செலே வெற்றிக்கான ரன்களை அடித்திருக்க முடியும், அபத்தமான முடிவு. யோசனையற்ற விதத்தில் அவுட்.

3 பந்துகளில் 3 ரன்கள் சாண்ட்னர் இறங்கினார். ஷார்ட் பிட்ச் பந்தை வீச சாண்ட்னர் மிட்விக்கெட்டில் தட்டி விட்டு 1 ரன் ஓடினார். 2 பந்துகளில் 2 ரன்கள், கோலி, தாக்கூரிடம் ஏதோ கூறினார். மிட்செலுக்கு விரல் பந்து ஒன்றை மெதுவாக வீச மிட்செல் அதனை கொடியேற்ற ஷிவம் துபே கேட்ச் ஆக்கினார்.

கடைசி பந்தை சாண்ட்னர் ஒரு ரன்னுக்கு அடித்தார், அங்கு இரண்டு ரன்கள் இல்லை ஆனால் வெற்றி வெறியில் 2வது ரன்னுக்காக முயற்சித்ததில் சாண்ட்னர் ஃபிரேமிலேயே இல்லை. ரன் அவுட். ஸ்கோர் 165/7 என்று இரு அணிகளூம் சமன் செய்தன. கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்தது நியூஸிலாந்து, சவுதி ஒரு கேப்டனாக இறங்கியிருக்க வேண்டும்.


சூப்பர் ஓவர்: சவுதியின் மோசமான பவுலிங்

சூப்பர் ஓவரில் முதலில் நியூஸிலாந்து பேட் செய்தது, பும்ரா வீசினார். கப்தில் இறங்கவில்லை, காரணம் தெரியவில்லை, செய்ஃபர்ட், மன்ரோ இறங்கினர்.

முதல் பந்தே செய்பர்ட் கொடுத்த கடினமான வாய்ப்பை அய்யர் தவற விட 2 ரன்கள் வந்தது. அடுத்த பந்தை செய்ஃபர்ட் கவர் மேல் தூக்கி அடித்து 4 ரன்கள் சேர்த்தார். அடுத்த ஷார்ட் பிட்ச் பந்தை செய்பர்ட் புல் ஷாட் ஆட கொடியேற்றினார், இம்முறை ராகுல் கடினமான வாய்ப்பை பின்னால் ஓடிச்சென்று நழுவ விட்டார். மீண்டும் 2 ரன்கள். 4வது பந்தில் செய்பர்ட் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5வது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே குத்தி பும்ரா காட்ட மன்ரோ முறையாக 4 ரன்களுக்கு அனுப்பினார். கடைசி பந்தை ஃபைன் லெக் பவுண்டரிக்கு அனுப்ப முயற்சித்தார் ஆனால் பீல்டர் சைனியின் கைக்குச் செல்ல ஒரு ரன் கிடைத்தது, நியூஸிலாந்து 13 ரன்கள் எடுத்தது.

சவுத்தியின் படுமோசமான பந்து வீச்சு:

14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரோஹித் இல்லாததால் ராகுலும், கோலியுமே இறங்கினர். சவுதி முதல் பந்தை வந்து குழந்தை போல லெந்தில் வீச ராகுல் ஒரே தூக்கு தூக்கினார். லெக் திசையில் சிக்ஸர். அடுத்த பந்தை தன் காலின் கீழேயே மோசமாகக் குத்தி எழுப்ப முயன்றார் மோசமான ஷார்ட் பிட்ச் பந்து பவுண்டரிக்குப் பறந்தது. அடுத்த பந்தே ராகுல் ஆட்டத்தை முடித்திருப்பார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார், ஆனால் பந்து டீப்புக்குச் சென்றதால் கோலி கிராஸ் செய்து விட்டு ஸ்ட்ரைக்குக்குத் தயாரானார்.

கோலி மிக நிதானமாக லெந்த் பந்தை மிட் ஆனில் தட்டி விட்டு வெகு வேகமாக 2 ரன்களை எடுத்தார். அடுத்த பந்தும் நல்ல பந்து அல்ல கோலி பவுண்டரிக்கு விரட்ட இந்தியா அபார வெற்றி பெற்றது. நியூஸிலாந்து அணி மீண்டும் சூப்பர் ஓவர் ‘சோக்கர்ஸ்’ ஆகி பரிதாபமாகத் தோற்று 0-4 என்று ஒயிட்வாஷை எதிர்நோக்குகின்றனர்.

ஆட்ட நாயகனாக கடைசி ஓவரை அற்புதமாக வீசிய ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.

மணீஷ் பாண்டேயின் கடின உழைப்பு அரைசதம்:

டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைக்கப்பட, சஞ்சு சாம்சனும், ராகுலும் இறங்கினர், சஞ்சு சாம்சன் மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது, அவரும் ஒரு ஸ்டன்னிங்ஸ் சிக்ஸ் அடித்தார், ஆனால் அதன் பிறகு 8 ரன்களில் அவசரக்குடுக்கை ஷாட்டினால் கொடியேற்றி ஆட்டமிழந்தார் கிடைத்த அரிய வாய்ப்பு, அதுவும் தொடக்க வீரராக, இது எவ்வளவு பெரிய பேறு, ஆனால் விரயம் செய்தார் சாம்சன்.

கே.எல்.ராகுல் தன் வாழ்நாளின் சிறந்த வெள்ளைப்பந்து பார்மில் இருக்கிறார், ஒரு விக்கெட் விரைவில் விழுந்தாலும் அவர் பிரமாதமான 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 26 பந்துகளில் 39 ரன்களை விளாசி அபாரமாக வீசிய இஷ் சோதியிடம் வெளியேறினார்.

முன்னதாக கேப்டன் விராட் கோலி 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஹாமிஷ் பென்னட் வீசிய சற்றே கூடுதலாக எழும்பிய லென்த் பந்து லீடிங் எட்ஜ் எடுக்க சாண்ட்னரின் 3வது கேட்சாக வெளியேறினார். அய்யர் 7 பந்துகளில் 1 ரன் தான் எடுத்தார், சோதி அவரை கட்டிப்போட்டார், இதனால் பிரஷர் ஆக சோதி பந்தை ஒதுங்கிக் கொண்டு கட் ஆட முயல எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரின் மிக அருமையான கேட்ச் ஆனது, இத்தகைய கேட்ச்களைப் பிடிப்பது கடினம்.

ஷிவம் துபேயும் கொடுத்த வாய்ப்பை வீணடித்தார் 12 ரன்களில் சோதியிடம் வீழ்ந்தார், பந்தின் வேகத்தைக் கணிக்காமல் ஸ்லாக் ஸ்வீப் போய் ஆட்டமிழந்தார். இந்தியா 10.2 ஓவர்களில் 84/5 என்று தடுமாறியது. வாஷிங்டன் சுந்தர் டக் அவுட் ஆகி சாண்ட்னரிடம் வெளியேறினார்.

ஆனால் அதன் பிறகு மணிஷ் பாண்டே தன்னை ஏன் ஒதுக்க முடியாது என்பதற்கான இன்னிங்ஸை ஆடினார். 36 பந்துகளில் 50 ரன்களை எட்டிய மணீஷ் பாண்டே, அதில் 3 பவுண்டரிகளை மட்டுமே அடித்தார், லெக், ஆஃப் திசையில் ஷார்ட் பவுண்டரிக்கு அனுப்புமாறு அவருக்குப் பந்துகள் வரவில்லை, லாங் பவுண்டரிக்கான பந்துகளே வந்ததால் 12 ரன்களை பவுண்டரியில் எடுத்த அவர் மீதி 38 ரன்களை ஒன்று, இரனடு, மூன்று என்று கடினமாக ஓடி எடுத்தார். நல்ல பிளேஸ்மெண்ட், இவருக்கு உறுதுணையாக ஷர்துல் தாக்குர் 20 ரன்களையும், சைனி 11 ரன்களையும் எடுக்க இந்திய அணி 165/8 என்று பந்து வீச ஏதுவாக ஒரு ஸ்கோரை எட்டியது.

இஷ் சோதி மிகப்பிரமாதமாக வீசி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சாண்ட்னர் 26 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். சவுதி முதல் இன்னிங்சில் டைட்டாக வீசினார். 4 ஒவர் 28 ரன்கள். பென்னட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் அதிகபட்சமாக 41 ரன்களை விட்டுக் கொடுத்தார், குக்கெலின் 39 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

விரட்டலில் மன்ரோ, செய்ஃபர்ட் அதிரடி, பும்ராவின் டைட், தாக்கூரின் கடைசி ஓவர்:

விரட்டலைத் தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு பும்ரா அதிர்ச்சியளித்தார் கப்தில் 4 ரன்களில் பும்ரா பந்தை சரியாக ஆடாமல் ராகுலிடம் கேட்ச் ஆனது. ஆனால் மன்ரோ தன் கணக்குக்கு 2 பவுண்டரி 1 சிக்சரை அடித்து அபாரமாக ஆட, இவரும் செய்ஃபர்ட்டும் சேர்ந்து ஸ்கோரை 12வது ஓவரில் 96 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

மன்ரோ 47 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 64 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார், கவரில் ஒரு பந்தை அடித்தார், 2வது ரன்னுக்காக ஓடியபோது பவுண்டரியிலிருந்து தாக்கூர் பந்தை கோலிக்கு த்ரோ செய்ய கோலி நேராக ஸ்டம்பைப் பெயர்த்தார். அடுத்ததாக டாம் புரூசை டக் அவுட் ஆக்கினார் சாஹல். லெக் ஸ்டம்ப் பெயர்ந்தது.

12.1 ஓவர்களில் 97/3 என்ற நிலையிலிருந்து ராஸ் டெய்லர் (24), செய்ஃபர்ட் இணைந்து ஸ்கோரை 19வது ஓவர் முடிவில் 159/3 என்று கொண்டு சென்றனர், அதன் பிறகுதான் கடைசி ஓவரில் 6 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து ஆட்டம் சமன் ஆனது. இந்தியத் தரப்பில் பும்ரா 4 ஒவர் 20 ரன் ஒரு விக்கெட் என அசத்தினார், சுந்தர் சுகமில்லை. சாஹல் 4 -38-1 என்று கொஞ்சம் ரன்களை கொடுத்தார். சைனி 4-29 சுமார். ஷர்துல் தாக்குர் 4-33-2 என்று ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

அடுத்த போட்டியில் நியூஸிலாந்து ஒயிட்வாஷைத் தடுப்பதோடு ஒரு ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டிப் போராட வேண்டியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x