Published : 27 Aug 2015 03:05 PM
Last Updated : 27 Aug 2015 03:05 PM
3-வது, இறுதி ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து 221 ரன்கள் எடுத்து 49.2 ஓவர்களில் ஆட்டமிழந்து தோல்வியைச் சந்தித்தது.
31-வது ஓவரில் 141/3 என்று இருந்த நியூஸிலாந்து அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் சரிய 35-வது ஓவர் முடிவில் 156/6 என்று ஆனது.
முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்த போது நியூஸிலாந்தின் இலக்கற்ற பந்து வீச்சினால் வான் விக் 58 ரன்களை எடுக்க, கேப்டன் டிவில்லியர்ஸ் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழந்தார்.
அப்போதுதான் அதிவேக பவுலர் மில்னவின் ஒரே ஓவரில் 3 அதிரடி பவுண்டரிகளை விளாசி தன் பாணி ஆட்டத்துக்கு வந்து கொண்டிருந்தார். ஆனால் பிரேஸ்வெல் அவரை பவுல்டு செய்தார்.
ஹஷிம் ஆம்லா 44 ரன்களை விரைவு கதியில் எடுத்தார். பிஹார்டியன் 28 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சர் அடித்து 40 ரன்களை கடைசியில் விளாச 40வது ஓவரில் ஸ்கோர் 220/4 என்ற நிலையிலிருந்து 283 ரன்களுக்கு அதிகரித்தது. டேவிட் மில்லர் 37 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
நியூஸிலாந்து தரப்பில் வீலர் 10 ஓவர்களில் 71 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிராண்ட் எலியட் 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் தலைவலியாக திகழ்ந்த மார்டின் கப்தில் 10 ரன்களில் ஸ்டெய்னிடம் ஆட்டமிழந்தார்.
வில்லியம்சன், லாதம் இணைந்து ஸ்கோரை 18/1-லிருந்து 102 வரை உயர்த்தினர். வில்லியம்சன் மீண்டும் ஒரு நல்ல இன்னிங்ஸுக்கு அடித்தளம் அமைத்து 39 ரன்களில் இம்ரான் தாஹிரிடம் பவுல்டு ஆனார். லாதம் 54 ரன்கள் எடுத்து மில்லரின் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.
அதன் பிறகுதான் தென் ஆப்பிரிக்க மிதவேகப்பந்து வீச்சாளர் வீஸ, வொர்க்கர் மற்றும் கிராண்ட் எலியட் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோன்க்கி 1 ரன்னில் ரபாதாவிடம் வீழ்ந்தார் நியூஸிலாந்து 156/6 என்று சரிவு கண்டது. அதன் பிறகு 49.2 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது. தென் ஆப்பிரிக்க தரப்பில் வீஸ 3 விக்கெட்டுகளையும், தாஹிர், ரபாதா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, ஸ்டெய்ன் 41 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸும், தொடர் நாயகனாக ஹஷிம் ஆம்லாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT