Last Updated : 30 Jan, 2020 09:06 PM

1  

Published : 30 Jan 2020 09:06 PM
Last Updated : 30 Jan 2020 09:06 PM

புதிய சாதனை காத்திருக்கு: மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி; நியூஸி.யின் கோட்டையில் நாளை 4-வது டி20 போட்டி

வெலிங்டன்

வெலிங்டனில் நாளை நடைபெறும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் வென்று 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முதல் முறையாக வென்று கோலி படை சாதனை படைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஹேமில்டனில் நடந்த 3-வது ஆட்டத்தில் ஷமியின் ஆர்ப்பரிப்பான பந்துவீச்சும், ரோஹித் சர்மாவின் டைமிங் 2 சிக்ஸர்களும் வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பியது.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடக்க உள்ள நிலையில் இந்திய அணிக்கு இந்த வெற்றி மிகப்பெரிய உற்சாகமாக அமையும்.

நாளை நடக்கும் வெலிங்டன் வெஸ்ட் பேக் மைதானம் நியூஸிலாந்தின் கோட்டையாகப் பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த 6 டி20 போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி வென்றுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இந்த மைதானத்தில் நியூஸிலாந்து விளையாடித் தோற்கவில்லை.

இதில் முக்கியமாக இந்திய அணி தொடர்ந்து 6 டி20 போட்டிகளை வென்றுள்ளது. கடந்த ஆண்டு மே.இ.தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் வென்று, நியூஸியையும் 3 போட்டிகளில் வென்றுள்ளது. நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி வென்றால், இதற்கு முன் இந்திய வைத்திருந்த சாதனையை முறியடிக்கும். கடந்த 2012, 2014, 2016 ஆண்டுகளில் தொடர்ந்து 6 போட்டிகளில் இந்திய அணி வென்றிருந்தது. 5-0 என்ற கணக்கில் டி20 தொடரை இந்திய அணி வென்றால் அது மிகப்பெரிய சாதனையாக அமையும். இதுவரை ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து 12 டி20 போட்டிகளில் வென்று முத்திரை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன், ஷைனி, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்கவில்லை. ஆதலால், இவர்களுக்கு நாளை வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை வழக்கம்போல தொடர்வார். ஆனால், நாளை ஆட்டத்தில் ரோஹித் சர்மா அல்லது கேப்டன் கோலி இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் களமிறங்குவர். அதேபோல மணிஷ் பாண்டே, ஷிவம் துபேக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், சாம்ஸன் ஆகியோர் களமிறங்கலாம். சாஹலுக்குப் பதிலாக குல்தீப்பும், ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக ஷைனியும் வாய்ப்பு பெறலாம் எனத் தெரிகிறது.

தற்போது விளையாடாமல் வெளியே அமரவைக்கப்பட்டு இருக்கும் வீரர்களும் சாதாரண வீரர்கள் இல்லை. சாம்ஸன், ரிஷப் பந்த் களத்தில் நிலைத்துவிட்டால் சிக்ஸர், பவுண்டரிகள் பறக்கும். அதேபோல, வாஷிங்டன் சுந்தர் கடைசி வரிசையில் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர், தொடக்க ஓவர்களும் கட்டுக்கோப்பாக வீசும் திறமை பெற்றவர்.

நியூஸிலாந்து ஆடுகளத்தில் இன்னும் ஷைனியின் வேகப்பந்துவீச்சு சோதித்துப் பார்க்கப்படவில்லை. கடந்த முறை குல்தீப் நியூஸிலாந்து மண்ணில் சிறப்பாகப் பந்து வீசியுள்ளதாலும், சினா மேன் பந்துவீச்சாளர்களுக்கு நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறுவதால், குல்தீப் பந்துவீச்சு நிச்சயம் எடுக்கும். ஆதலால் காத்திருக்கும் வீரர்கள் வாயப்பு பெற்றாலும் இந்திய அணியின் முழு வலிமையில் எந்தக் குறையும் வராது.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை போராடித் தோற்று தொடரை இழந்துள்ளது. நியூஸிலாந்து கேப்டன் தொடக்க ஆட்டக்காரராகவும், கிராண்ட் டி ஹோம் கடைசி வரிசையில் களமிறங்கக் கோரி தொடர்ந்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டியில் கிராண்ட் டி ஹோம் பதிலாக, டாம் புரூஸ் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

மார்டின் கப்தில் அல்லது முன்ரோவுடன் வில்லியம்ஸன் ஆட்டத்தைத் தொடங்கினால் கப்தில், முன்ரோ இருவரில் ஒருவர் கீழ் வரிசையில் களமிறங்கி அதிரடியை வெளிப்படுத்தலாம். ஆனால், இந்த யோசனையை வில்லியம்ஸன் செயல்படுத்தத் தயங்குகிறார்.

ஏற்கெனவே இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், இந்த இரு ஆட்டங்களும் காத்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாகவே இருக்கும். இருப்பினும் அடுத்துவரும் இரு போட்டிகளிலும் வென்று, வொயிட்வாஷ் செய்யவே இந்திய அணி தீவிரமாக முயலும். அதேசமயம், நம்பிக்கை இழந்திருக்கும் நியூஸிலாந்து அணி இழந்த நம்பிக்கையைப் பெறத் தீவிரமாகப் போராடும்.

இந்திய நேரப் படி பிற்பகல் 12.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x