Published : 30 May 2014 09:52 PM
Last Updated : 30 May 2014 09:52 PM
முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பஞ்சாபை பேட்டிங் செய்ய அழைத்தது. துவக்க வீரர்களான சேவாக் மற்றும் வோஹ்ரா இருவரும் சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். குறிப்பாக ஈஷ்வர் பாண்டே வீசிய 4-வது ஓவரில் 24 ரன்கள் குவிக்கப்பட்டது. முதல் 6 ஓவர்களுக்குள் 70 ரன்களை இந்த துவக்க இணை எடுத்தது. இதில் 8 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடக்கம். சேவாக் 21 பந்துகளில் அரை சதம் தொட்டார்.
11-வது ஓவரில் வோஹ்ரா 34 ரன்களுக்கு பாண்டேவின் பந்தில் வீழ்ந்தார் (31 பந்துகள், 1 பவுண்டரி, 2 சிக்ஸர்). அடுத்து மேக்ஸ்வெல் களமிறகினாலும் சேவாக் தனது விளாசலைத் தொடர்ந்தார்.
அஸ்வின் வீசிய 13-வது ஓவரின் 2-வது பந்தில் சேவாக் ஒரு சிக்ஸர் அடிக்க, 5-வது பந்தை மேக்ஸ்வெல்லும் சிக்ஸருக்கு சுழற்றினார். ஆனால் அடுத்த பந்திலும் சிக்ஸர் அடிக்க முயன்ற அவர் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த ஆட்டத்திற்கு முன்னால், "அடுத்தப் போட்டியில் நான் அதிகம் ஓவர் தி விக்கெட்டில் வீசுவேன் என்பதை மேக்ஸ்வெல் எதிர்பார்க்கலாம்" என அஸ்வின் சவால் விட்டிருந்தார். அந்த முறையிலேயே இன்று பந்துவீசி முதல் பந்தில் ஆறு ரன்கள் கொடுத்தாலும், அடுத்த பந்தில் மேக்ஸ்வெல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
16-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்த சேவாக் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 50 பந்துகளில் விரைவாக சதம் எட்டிய சேவாக், அதில் 10 பவுண்டரிகளும், 6 சிக்ஸரும் அடித்திருந்தார். மறுமுனையில் இருந்த மில்லரும், தன் பங்கிற்கு பந்துவீச்சாளர்களைக் கலங்கடித்தார். 17.2 ஓவர்களிலேயே பஞ்சாப் 200 ரன்களை எட்டியது.
நேரா வீசிய 19-வது ஓவரில் சேவாக் ஒரு 122 ரன்களுக்கு (57 பந்துகள், 12 பவுண்டரி, 8 சிக்ஸர்) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்தக் கட்டத்தில் பஞ்சாப் 211 ரன்களை எட்டியிருந்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் பெய்லி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மில்லர் 38 ரன்களுக்கு (19 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) ரன் அவுட் ஆனார். அதே ஓவரின் கடைசி பந்தில் சாஹாவும் 6 ரன்களுக்கு வீழ்ந்தார்.
இறுதியில், பஞ்சாப் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
சென்னையின் பரிதாபப் பந்துவீச்சு
சென்னையின் பந்துவீச்சு இன்றைய போட்டியில் மிகவும் மோசமாக இருந்தது. வீரர்களின் உடல் மொழியும் தளர்ந்தே காணப்பட்டது. சேவாக், வோஹ்ரா, மில்லர் என அடுத்தடுத்து அதிரடி ஆட்டத்தால் சென்னை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பாண்டேவைத் தவிர பந்து வீசிய அனைவரும் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கும் அதிமாகவே கொடுத்திருந்தனர். தனக்கான 4 ஓவர்களில் நேரா 51 ரன்களும், ஜடேஜா 48 ரன்களும், சர்மா 46 ரன்களும், அஸ்வின் 44 ரன்களும் அளித்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT