Published : 29 Jan 2020 02:58 PM
Last Updated : 29 Jan 2020 02:58 PM
ஹாமில்டனில் நடைபெறும் 3வது டி20 போட்டி நியூஸிலாந்து அணிக்கு வாழ்வா சாவா போட்டி, இந்திய அணி வென்றால் அது தொடர் வெற்றியைச் சாதிக்கும். இந்நிலையில்தான் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. முதல் 2 போட்டிகளில் சொதப்பிய ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் நிச்சயம் விளாசப்போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு இணங்க அவர் விளாசினார். சவுத்தி பந்தில் முதல் ஓவரில் பாயிண்ட் பவுண்டரியைத் தெறிக்கவிட்டார் ரோஹித், அடுத்த ஹாமிஷ் பென்னட் ஓவரில் ராகுல், அப்பர் கட் செய்ய தேர்ட் மேன் பீல்டர் இருந்தும் கையில் சிக்காமல் சிக்ஸ் ஆனது, தைரியமான ஷாட்.
குக்கலீன் பந்து ஒன்றில் ரோஹித் ஏமாந்தார் பந்து ஸ்லிப் இருந்திருந்தால் கேட்ச் ஆகியிருக்கும் போல் சென்றது. ஆனால் இது அதிர்ஷ்ட பவுண்டரி ஆனது. 5வது ஓவரில் சாண்ட்னர் வந்தவுடன் மீண்டும் ஒரு பவுண்டரி விளாசினார் ரோஹித் சர்மா. 5 ஓவர் முடிவில் 42/0 என்று இருந்தது இந்திய அணி.
இந்நிலையில் மீண்டும் ஹாமிஷ் பென்னட் வீச வர, பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் ரோஹித் சர்மா விஸ்வரூபம் எடுத்தார். முதல் பந்து விரலிலிருந்து வீசப்பட்ட வேகம் குறைந்த பந்து ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ். 3வது பந்து மீண்டும் ஒரு சொத்தைப் பந்தாக நேராகத் தூக்கினார் சிக்ஸ். அடுத்த பந்தை கட் செய்து நான்கு ரன்களுக்கு அனுப்பினார், இது ஷார்ட் மற்றும் வைடு. அடுத்த பந்து வைடு யார்க்கர் பாயிண்டில் பவுண்டரி, அடுத்த பந்து அடி அடி என்ற ஓவர் பிட்ச் பந்து ஒரே தூக்கு தூக்கினார் நேராக சிக்ஸ், ரோஹித் சர்மா அரைசதம், இந்த ஓவரி 27 ரன்களை 3 சிக்ஸ் 2 பவுண்டரி என்று வெளுத்து வாங்கி ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரைசதம் கண்டார். இந்த ஓவரின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா 24 ரன்களில் இருந்தார், ஒரே ஓவர் அரைசதத்தை 23 பந்துகளில் சாதித்தார்.
6 ஓவர்களில் 69 என்று அதிரடி தொடக்கம் கண்ட இந்திய அணிக்கு ஸ்பின் செக் வந்தது, ஆனால் இஷ் சோதியின் முதல் ஓவரில் 8 ரன்கள் கிடைக்க 7 ஓவர்கள் 77 ரன்க்ள் என்று இந்திய அணி பெரிய தொடக்கத்தைக் கண்டது. 8வது ஓவரில் ரன் முடங்க, 9வது ஓவரில் ராகுல் 27 ரன்களில் கொலின் டி கிராண்ட் ஹோம் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். 27 ரன்களுக்கு ராகுல் 19 பந்துகளையே எடுத்துக் கொண்டார்.
கோலி இறங்குவதற்குப்பதிலாக தேவையில்லாமல் ஷிவம் துபேயை இறக்க ஷிவம் துபேயை முடக்கியது நியூஸிலாந்து, முதல் 4 பந்துகளில் அவர் தன் எண்ணிக்கையைத் தொடங்கவில்லை. 10 ஓவர்கள் முடிவில் 92/1 என்று இருந்தது, அதாவது 7-77லிருந்து 10-92 என்று முடக்கப்பட்டது, ஸ்பின்னர்கள் அருமையாக வீசினர்.
பிரஷர் ஆன ரோஹித் சர்மா 11ஆவது ஓவரில் ஹாமிஷ் பென்னட்டின் ஸ்லோ பந்தை நேராக லாங் ஆனில் கேட்ச் கொடுத்து 65 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 23 பந்துகளில் அரைசதம் கண்ட ரோஹித் சர்மா 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என்று 65 ரன்களில் காலியானார். கடைசி 17 பந்துகளில் 15 ரன்கள்தான். அந்த அளவுக்கு பவுலிங் டைட். இதே ஓவரில் ஷிவன் துபே 3 ரன்களில் காலை நகர்த்தாமல் சொதப்பி ஆடி கேட்ச் ஆகி வெளியேறினார்.
திடீரென கிரீசில் 2 புது வீரர்கள், கோலி மற்றும் அய்யர். கோலி, அய்யர் ஆகியோரும் கட்டுப்படுத்தப்பட்டனர், ஆனால் 15வது ஓவரில் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார் கோலி. இடது கை ஸ்பின்னர் சாண்ட்னரை ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் அடித்தார். 17வது ஓவரில் அய்யர் 17 ரன்களில் சாண்ட்னர் பந்து ஒன்று ஆக மந்தமாக வர இன்சைட் அவுட் ஷாட் சரியாகச் சிக்காமல் காலியானார். இதே ஓவரில்தான் முதல் பந்தை நேராக சிக்ஸுக்கு அனுப்பியிருந்தார்.
விராட் கோலியும் கட்டுப்படுத்தப்பட அவரும் 27 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் ஹாமிஷ் பென்னட்டின் 3வது விக்கெட்டாக வெளியேறினார். ஸ்லோ பந்து பிட்சில் நின்று வந்தது, இதற்கு முதல் 2 பவுண்டரி பந்துகளை கோலி பவுண்டடி அடிக்காமல் விரயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
20வது ஓவரில் பாண்டே ஒரு சிக்ஸ், ஜடேஜா ஒரு சிக்ஸ் அடித்து 18 ரன்கள் அந்த ஓவரில் வரவில்லையெனில் இந்திய அணி 179 ரன்களை எட்டியிருக்க முடியாது, இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. தேவையில்லாமல் கோலி தன் டவுன் ஆர்டரையும் மாற்றி அய்யரையும் மாற்றியதால் குழப்பம் நேரிட்டது ஒழுங்காக அய்யரை இறக்கியிருந்தால் ஸ்பின்னைப் பதம் பார்த்திருப்பார்.
நியூஸிலாந்து அணி தற்போது கப்தில் (31) விக்கெட்டை இழந்து 6.2 ஓவர்களில் 52/1 என்று ஆடி வருகிறது. மன்ரோ, வில்லியம்சன் ஆடி வருகின்றனர். பிட்ச் மெதுவான பிட்ச், ஸ்லோ பந்துகள் கைகொடுக்கின்றன. நியூஸிலாந்து தரப்பில் ஹாமிஷ் பென்னட் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவர் அனாலிசிஸ் காலியானது ரோஹித் சர்மாவினால். சோதி, சாண்ட்னர், டைட்டாக வீசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT