Published : 25 Jan 2020 08:02 PM
Last Updated : 25 Jan 2020 08:02 PM

பந்துவீச்சில் மாற்று அணுகுமுறை அவசியம்;கோலி படையின் வெற்றி தொடருமா? நாளை நியூஸி.யுடன் 2-வது டி20 ஆட்டம்

ஸ்ரேயாஸ் அய்யர் பந்தை பவுண்டரிக்கு விளாசியகாட்சி : படம் உதவி ட்விட்டர்

ஆக்லாந்து

ஆக்லாந்தில் நாளை நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கும்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணியில் இருப்பதால் நாளை நடக்கும் ஆட்டத்தில் வென்றால், தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகும். முதல் ஆட்டம் நடந்த அதே மைதானத்தில்தான் 2-வது ஆட்டமும் நடக்கிறது.

ஆக்லாந்தில் நேற்று நடந்த முதலாவது ஆட்டத்தில் 203 எனும் இமாலய இலக்கை நியூஸிலாந்து அணி நிர்ணயித்தபோதிலும் அதை இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களின் அதிரடி ஆட்டத்தாலும், நெருக்கடியைச் எளிதாகக் கையாண்டும் அணியை வெற்றி பெற வைத்தனர்.

முதலாவது ஆட்டத்தில் இரு அணியினருமே ஆடுகளம், மைதானத்தின் தன்மையைக் கணித்துப் பந்துவீசத் தவறிவிட்டனர். இதனால்தான் நியூஸிலாந்து அணி மிகப்பெரிய ஸ்கோர் செய்தும், அதைத் தக்கவைத்துக் கொள்ளமுடியாமல் போனது.

அதேபோலவே வலிமையான பந்துவீச்சு வரிசையை இந்திய அணி வைத்திருந்தும், சரியாகக் கணித்துப் பந்துவீச முடியாமல் 203 ரன்களைக் வாரிக்கொடுத்தது. இரு அணிகளிலும் பும்ரா மட்டுமே சிறப்பாகப் பந்துவீசினார். நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களால் அவரின் பந்தைக் கணித்து ஆடமுடியவில்லை.

ஆக்லாந்து மைதானத்தில் ஸ்ட்ரைட் பவுண்டரி மிகவும் குறுகியதாகவும், இரு ஸ்கொயர் பவுண்டரிகளும் மிகவும் நீளமாக இருக்கிறது. இதற்கு ஏற்றார்போல் வேகமாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி எழுப்பியிருந்தால், மிஸ்ஹிட் ஆகியிருக்க வாய்ப்பிருந்திருக்கும். நாளை ஆட்டத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு நேராகப் பந்துவீசாமல் அணுகுமுறையை மாற்றி, ஷாட் பிட்சாகவும், ஸ்குயர் லெக் திசையில்அடிக்குமாறு பவுன்ஸர்களை வீசினால் அவர்களை கட்டுப்படுத்தலாம்.

சிறிது ஷாட் பிட்சாக வீசி இருந்தால், வீணாக ரன் செல்வதை இந்திய வீரர்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால் பந்தை பேட்ஸ்மேன்களுக்கு நேராக வீசி, பவுண்டரி, சிக்ஸர்களாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். இதைத் தவறைத்தான் நியூஸிலாந்து வீரர்களும் செய்தார்கள்.

நாளை ஆட்டத்தில் இந்திய அணியில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஷர்துல் தாக்கூர் அதிகமான ரன்களை கொடுத்ததால், அவருக்கு பதிலாக ஷைனி வரவாய்ப்புண்டு. ஷைனியின் அதிவேகம் இந்த மைதானத்தில் நன்கு கைகொடுக்கும்.

அதேபோல யஜூவேந்திர சாஹல், குல்தீப் இருவரும் உலகக்கோப்பைப் போட்டிக்குப்பின் ஒன்றாக இணைந்து விளையாடவில்லை.இருவரும் தனித்தனியே சிறப்பாகவே பந்துவீசுகிறார்கள். ஜடேஜாவும் தன்னுடைய பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆதலால், வாஷிங்டன் சுந்தருக்கு நாளை வேலை இருக்காது எனத் தெரிகிறது.

கூடுதலாக சுழற்பந்துவீ்ச்சு ஆல்ரவுண்டர் தேவை எனும்பட்சத்தில் ஷிவம் துபேவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கப்படலாம்.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா கடந்த போட்டியில் ஏமாற்றினாலும், அவர் மேட்ச் வின்னர் என்பதால் நாளைய போட்டியில் அவரின் அதிரடியை எதிர்பார்க்கலாம். கேப்டன் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் மூவரும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களின் அதிரடி ஆட்டம் நாளையும் தொடர்ந்து வெற்றி உறுதி. மணிஷ் பாண்டே, ஷிவம் வாய்ப்பு பெறுவதிலும் நாளை மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை மிகப்பெரிய ஸ்கோர் அடித்தும் அதைத் தக்கவைக்கும் அளவுக்கு வலிமையான பந்துவீச்சு இல்லை. முக்கிய பந்துவீச்சாளர்களான போல்ட், ஹென்றி காயத்தால் அவதிப்படுவதால், இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்க முடியவில்லை.

பேட்டிங் வரிசையில் மன்ரோ, கப்தில் கேப்டன் வில்லியம்ஸன், டெய்லர் நேற்றைய ஆட்டத்தில் வலுவான ஸ்கோரைப் பெற உதவினர். கிராண்ட் ஹோம், செய்ஃபர்ட் ஆட்டம் நேற்றைய ஆட்டத்தில் எடுபடவில்லை என்றபோதிலும் இருவருமே ஆபத்தானவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

நியூஸிலாந்து அணியிலும் பெரும்பாலும் எந்த விதமான மாற்றமும் இருக்கவாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

உள்ளூர் மைதானம், உள்ளூர் ரசிகர்கள், ஆடுகளத்தை பற்றி நன்கு அறிந்திருந்த நிலையிலும் இந்திய அணியின் வெற்றி நியூஸிலாந்து அணியைச் சற்று உலுக்கியிருக்கும்.நிச்சயம் நாளைய ஆட்டத்தில் இந்திய அணிக்குப் பதிலடி கொடுக்க முயல்வார்கள். ஆதலால் ஆட்டத்தில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 12.20மணிக்குத் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x