Published : 24 Jan 2020 04:11 PM
Last Updated : 24 Jan 2020 04:11 PM
கேப்டன் கோலி, ராகுல் வலுவான அடித்தளம் , ஸ்ரேயாஸ் அய்யரின் காட்டடி பினிஷிங் ஆகியவற்றால் ஆக்லாந்தில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்தியஅணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 பந்துகள் மீதிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டில் வென்றது.
அதிரடி ஆட்டம் ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் 19வது ஓவரை சவுதி வீச முதல் பந்தை சிக்சருக்குத் தூக்கி பிறகு அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி, கடைசி பந்தை மீண்டும் சிக்சருக்குத் தூக்கியது வின்னிங் ஷாட்டாக அமைந்தது. ஷ்ரேயஸ் அய்யரின் பேட்டிங் மிகவும் புத்திசாலித்தனமாக நியூஸிலாந்துடன் மைண்ட் கேம் ஆடுவது போல் இருந்தது.
இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி (45), ராகுல்(56) ரன்கள் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 58 ரன்களிலும் , மணிஷ் பாண்டே14 ரன்களிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
ஸ்ரேயாஸின் வின்னிங் ஷாட் சிக்ஸர், கோலியின் அற்புத முடிவு, ராகுலின் காட்டடி:
இந்திய அணியின் வெற்றிக்கு ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் ஆகிய இரு இளம் வீரர்களின் பேட்டிங் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தது. ராகுல், கோலி வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுக்க அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு, கடைசி நேர வெற்றியின் அழுத்ததைத் தாங்கி விளையாடிய ஸ்ரேயஸ் அய்யரி்ன் பேட்டிங் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது. என்ன அருமையான பேட்டிங், டைமிங் ஷாட்கள்... ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் அய்யருக்குவழங்கப்பட்டது.
ஆடுகளத்தை புரிந்து கொண்டு விராட் கோலி புத்திசாலித்தனமாக கேப்டன்ஷிப் செய்தது அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
இரு இளைஞர்கள் கூட்டணி
கடந்த 1996-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் கங்குலி, டிராவிட் என்ற இரு இளைஞர்கள் அடித்த சதங்கள் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தன. முகமது கைப், யுவராஜ் சிங் ஆகிய இரு இளைஞர்களின் ஆட்டம் நாட்வெஸ்ட் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது. நியூஸிலாந்தில் 2020-ம் ஆண்டில் ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் இரு இளைஞர்களின் ஆட்டம் முக்கியமாக அமைந்திருக்கிறது.
இந்திய அணியின் பேட்டிங் இந்த போட்டியில் மிகப்பிரமாதமாக இருந்தது. நடுவரிசையில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் என மூன்று வீரர்களும் மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சு சொதப்பல்
ஆனால் பந்துவீச்சைப் பொறுத்தவரை தொடக்கத்தில் கட்டுக்கோப்பாக வீசி பிற்பகுதியில் கோட்டை விட்டனர். ஷமி துல்லியம் தவறி ரன்களை வாரிக் கொடுத்தார்.அதேபோலத்தான் ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே ஆகியோரும். இதில் ஷர்துல், ஷமி இருவரும் தலா 20 ரன்கள் குறைவாக வழங்கி இருந்தால் இதுபோன்ற பதற்றத்தை தவிர்த்திருக்கலாம். இதில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷைனியையும், ஷிவம் துபே, மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக ரிஷப் பந்தை எடுத்திருந்தால் இன்னும் பேட்டிங் வலிமையாக இருந்திருக்கும்.
204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் அடித்த நிலையில் 7 ரன்னில் சான்ட்னர் பந்துவீச்சில் பேட்டில் நுனியில் பந்துபட்டு டெய்லிரிடம் கேட்சாக மாறியது.
அடுத்து கேப்டன் கோலி களம்புகுந்து ராகுலுடன் சேர்ந்தார். இருவரும் சேரந்தபின் இந்திய அணியின் ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குறையாமல் வைத்திருந்தனர். ஓவருக்கு ஒருபவுண்டரி, சிக்ஸர் என இருவரில் ஒருவர் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
பவர்ப்ளேயில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்தது. கோலி ஒருபுறம் நிதானமாக ஆட, மறுபுறம் ராகுல் , நியூஸிலாந்து வீரர்களின் பந்துவீச்சை இடம் பார்த்து சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் தள்ளினார். கோலி டிக்னர் பந்தை லாங் ஆஃபில் அடித்த சிக்ஸ் கிளாசிக் அற்புதம்!
டிக்னர் வீசிய 9-வது ஓவரில் சிக்ஸர் அடித்து ராகுல் 24பந்துகளில் அரைசதம் அடித்தார். ஈஷ் சோதி வீசி 10-வது ஓவரில் லாங்ஆப் திசையில் சவுதியிடம் கேட்ச் கொடுத்து ராகுல் ஆட்டமிழந்தார். ராகுல் 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்.இதில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 99 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி கோலியுடன் சேர்ந்தார். நீண்டநேரம் நிலைக்காத கோலி 45 ரன்னில் டிக்னர் பந்தவீச்சில் கப்தில் கேட்ச்பிடிக்க ஆட்டமிழந்தார். உலகக் கோப்பை அரையிறுதியில் தோனியை ரன் அவுட் செய்து திருப்புமுனையை ஏற்படுத்திய கப்தில் இந்த போட்டியில் கோலிக்கு பிடித்த கேட்சும் திருப்புமுனையானதுதான் என்பதில் மாற்றமில்லை. ஆனால், இந்த வாய்ப்பை அடுத்து நியூஸிலாந்து வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டனர். கோலி 32 பந்துகளில் 45 ரன்களுடன்( ஒருசிக்ஸர், 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். ராகுலுக்கு ஒரு எளிதான ரன் அவுட் வாய்ப்பையும் கோலிக்கு கேட்சையும் விட்டனர் நியூஸிலாந்து அணியினர்.
அடுத்து வந்த ஷிவம் துபே வந்த வேகத்தில் சான்ட்னர் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். ஈஷ் ஷோதி வீசிய 13-வது ஓவரில் துபே 13 ரன்னில் சவுதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 13-வது ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் என்ற வலிமையான நிலையில் இருந்தது.
அடுத்துவந்த மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யருடன் சேர்ந்தார். கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. இதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் தனது பேட்டிங்மூலம் ருத்ரதாண்டவம் ஆடினார். சோதி ஓவரில் ஒருசிக்ஸர், பவுண்டரி, சவுதி ஓவரில் ஒரு சிக்ஸர் என ஸ்ரேயாஸ் அய்யர் விளாசினார்.
இதனால் கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 29ரன்கள் தேவைப்பட்டது. பென்னட் வீசிய 18-வது ஓவரில் 2 பவுண்டரி, சவுதி வீசிய 19ஓவரில் ஒரு சிக்ஸர்,பவுண்டரி அடிக்க இந்திய அணி வெற்றியை நெருங்கியது. அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சவுதி வீசிய கடைசி பந்தில் டீப் மிட்விக்கெட்டில் ஸ்ரேயாஸ் அய்யர் வின்னிங் ஷாட்டாக சிக்ஸருக்குஅடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
ஸ்ரேயாஸ் அய்யர் 29 பந்துகளில் 58 ரன்களிலும்(3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) , மணிஷ் பாண்டே14 ரன்களிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
நியூஸிலாந்து தரப்பில் ஈஷ் சோதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியப் பந்து வீச்சு சொதப்ப, அதிரடி விளாசலில் நியூஸி.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். நியூஸிலாந்து அணியின் கப்தில் , முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினர்.
இருவரும் தொடக்கத்திலிருந்தே இந்திய வீரர்களின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
ஆக்லாந்து மைதானத்தில் ஸ்ட்ரைட் பவுண்டரி மிகவும் குறுகியதாக இருந்ததால் பவுண்டரி . சிக்ஸர் அடிக்க நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு ஏதுவாக இருந்தது. ஆனால், நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடுவதற்கு ஏதுவாக ஸ்ட்ரைட் பவுண்டரி , சிக்ஸர் அடிக்கும் வகையில் ஷமியும் , துபே , ஷர்துல் தாக்கூர் வீசியதால் சிக்ஸர் , பவுண்டரிகள் குவிந்தன.
இரு ஸ்கொயர் பவுண்டரிகளும் மிகவும் நீளமாக இருந்ததால் வேகமாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி எழுப்பியிருந்தால், மிஸ்ஹிட் ஆகியிருக்க வாய்ப்பிருந்திருக்கும், , சிறிது ஷாட் பிட்சாக வீசி இருந்தால், இந்த வீணாக ரன் செல்வதை இந்திய வீரர்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால், பும்ரா மட்டுமே இதைக் கணித்துச் சரியாக வீசினார். பும்ரா தவிர 3 வேகப்பந்துவீச்சாளர்கள் ஃபுல் லெந்த்தில் வீசினர், ஸ்லோ பந்துகளை வீசினர். இதனால் முன்ரோவும் , கப்திலும் அடித்து நொறுக்கியதால் பவர்ப்ளேயில் 68 ரன்களைச் சேர்த்தது நியூஸிலாந்து .
பவர்ப்ளேயில் இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்து அடிக்கும் அதிகபட்சமான ஸ்கோர் இதுவாகும். 6 ஓவர்கள் பவர்ப்ளேயில் இந்திய பந்துவீச்சாளர்கள் 10 ஸ்லோபால் வீசியதால், அவற்றை நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் பதம்பார்த்தனர். மாறாக வேக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசியிருந்தால் கொஞ்சம் மாறுதலாக அமைந்திருக்கும். ஷர்துல் தாக்குர், ஷமியை பிய்த்து உதறினர்.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்தநிலையில், கப்தில் 30 ரன்னில் துபே பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கப்தில் ரன் கணக்கில் ஒரு சிக்ஸர் , 4 பவுண்டரி அடங்கும்
அடுத்துவந்த கேப்டன் வில்லியம்ஸன் , முன்ரோவுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்தபின் ரன் சேர்க்கும் வேகம் கூடியது. வில்லியம்ஸன் ஓவருக்கு பவுண்டரி , சிக்ஸர் விளாசி ஸ்கோரை எகிறச் செய்தார். முன்ரோ 36 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
தாக்கூர் வீசிய 12- வது ஓவரில் ஸ்கொயர் லெக்திசையில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து முன்ரோ 42 பந்துகளில் 59 ரன்களில் வெளியேறினார். இதில் 2 சிக்ஸர் , 6பவுண்டரிகள் அடங்கும். அடுத்து கோலின் டி கிராண்ட்ஹோம் வந்த வேகத்தில் ஜடேஜாபந்துவீச்சில் துபேயிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.
4- வது விக்கெட்டுக்கு வந்த ராஸ் டெய்லர் , வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்துதான் இந்தியப் பந்துவீச்சை பிற்பகுதியில் நொறுக்கி அள்ளினர். 13- வது ஓவர்வரை நியூஸிலாந்து அணி 3 விக்கெட்டுகளுக்கு 117 ரன்களே சேர்த்திருந்தது. ஆனால், இருவரும சேர்ந்து 28 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தனர்.
குறிப்பாக ஷமி வீசிய 16- வது ஓவரில் 2 பவுண்டரி , 2 சிக்ஸர் அடித்து 22 ரன்களைச் சேர்த்து, 25 பந்துகளில் அரைசதம் அடித்தார் ராஸ் டெய்லர். கடந்த 6 ஆண்டுகளில் டி20 போட்டியில் டெய்லர் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். அதைத் தொடர்ந்து வில்லியம்ஸனும் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்ந்து 24 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்தனர்.
சாஹல் வீசிய 17- வது ஓவரில் கோலியின் கேட்சுக்கு விக்கெட்டைப் பறிகொடுத்து 26 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து வில்லியம்ஸன் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 4 பவுண்டரி , 4 சிக்ஸர்கள் அடங்கும். அடுத்து வந்த செய்ஃபர்ட் ஒரு ரன் சேர்த்த நிலையில் பும்ரா பந்தவீச்சில் ஆட்டமிழந்தார்
டெய்லர் 27 பந்துகளில் 54 ரன்களுடனும் ,(3 சிக்ஸர் , 3 பவுண்டரி ) சான்ட்னர் 2ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர் . 20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. கடைசி 3 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததால் 203 உடன் முடிந்தது நியூஸிலாந்து, இல்லையெனில் மேலும் ரன்களை எட்டியிருக்கும்.
இந்தியத் தரப்பில் பும்ரா , சாஹல் , தாக்கூர் , ஜடேஜா , துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
2-வது டி20 போட்டி வரும் 26-ம் தேதி ஆக்லாந்தில் நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT