Published : 22 Jan 2020 02:52 PM
Last Updated : 22 Jan 2020 02:52 PM
உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் என்பது இந்திய அணிக்கு ஒரு பீடிப்பு போன்று ஆகிவிட்டது என்று கூறிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியூஸி. மற்றும் தெ.ஆ அணிகளுக்கு எதிரான 6 போட்டிகளையும் அக்டோபரில் ஆஸி.யில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான தயாரிப்பாக, களமாகப் பயன்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.
பொதுவாக இந்திய கிரிக்கெட் தற்போது வெற்றி என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் புதுமையை நோக்கி அடியெடுத்து வைத்தாலும் இன்னும் பழைய மனோநிலையையே பிட்ச் உள்ளிட்டவற்றில் கடைபிடிக்கிறது, குறிப்பாக தோனி, கோலி தலைமையில் இங்கு டெஸ்ட் போட்டிகளுக்கும் சிலபல ஒருநாள் போட்டிகளுக்கும் போடப்படும் பிட்ச் ஒரு டெம்ப்ளேட் தன்மையை கொண்டிருக்கிறது. இதனால்தான் டாஸ் பற்றி கவலையில்லை விரட்டினாலும் இலக்கை நிர்ணயித்தாலும் கவலையில்லை என்ற பேச்சு கோலியிடமிருந்தும் ரவிசாஸ்திரியிடமிருந்தும் புறப்படுகிறது.
உதாரணமாக சமீபத்தில் ஆஸி.க்கு எதிராக போடப்பட்ட பிட்சில் முதல் போட்டியில் பந்துகள் கொஞ்சம் ஸ்விங் ஆகி, கொஞ்சம் எழும்பி, சற்றே நின்று வந்த மும்பை பிட்சில் இந்திய பேட்டிங் சரிவு கண்டு 10 விக்கெட்டுகளில் தோற்றதைக் கண்டோம். ஆனால் அடுத்த 2 போட்டிகளில் 1990-2000ம்களில் கடைப்பிடிக்கப்பட்ட அதே பழைய முறை பிட்சுக்கு இந்திய அணி நிர்வாகம் திரும்பியது, அதாவது முதலில் யார் பேட் செய்தாலும் எவ்வளவு ரன் எடுத்தாலும் பின்னால் இறங்கும் அணி டிபிக்கல் இந்தியப் பிட்சில் எதிரணியினர் ஆட முடியாதவாறு அமைக்கப்பட்டது, அதாவது பந்துகள் மந்தமாக தாழ்வாக வரும் பிட்ச்கள் அவை. ஆனால் இவ்வகை பிட்ச்களில் இந்திய அணி விரட்டும் போது மந்தமாக, தாழ்வாக வருவது ஒரு பிரச்சினையில்லை ஏனெனில் இப்படிப்பட்ட பிட்ச்களில் ஆடியே பழக்கப்பட்ட அணியாகும் இந்திய அணி. ஆகவேதான் அடுத்த 2 போட்டிகளில் டாஸ் ஒரு பிரச்சினையில்லாமல் வெற்றி பெற முடிந்தது, பந்துகள் மெதுவாகவும் இடுப்புக் கீழே வரும் போது இந்திய பேட்டிங் ஸ்டார்கள் ’கத்தி’ வீச முடிந்தது.
ஆனால் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்தில் பிட்ச்கள் உண்மைத்தன்மை கொண்டவையாக இருக்கும், அங்கு டாஸ், பிட்ச், சூழ்நிலை, அணிச்சேர்க்கைப் பற்றிய கவலையில்லாமல் ஆடுவது கடினம்.
இந்நிலையில் ரவிசாஸ்திரி கூறியதாவது:
டாஸ் என்ற விவகாரத்தை சமன்பாட்டிலிருந்து நீக்கி விட்டோம். என்ன சூழ்நிலைகளாக இருந்தாலும் விளையாடுவோம். எந்த எதிரணியினராக இருந்தாலும் அந்த மண்ணிலேயே வெற்றி பெற தயாராகி வருகிறோம் இந்தச் சவாலை நோக்கித்தான் பயணிக்கிறோம். ஆம் உலகக்கோப்பை வெல்ல வேண்டுமென்பது அணியில் ஒரு பீடிப்பு மனநிலையாகவே மாறியுள்ளது, நிச்சயம் அந்தக் குறிக்கோலை அடைவோம்.
ஒரு அணியாக பிட்ச்கள் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. நாம் தரவுகளைப் பார்க்கிறோம் அதைத்தான் பேசுகிறோம். நாங்கள் கடந்த காலத்தையோ, வரலாற்றையோ பார்ப்பதில்லை.
நான் என்பதே இந்த அணியின் அகராதியிலேயே இல்லை, நானை மறந்து நாம் என்பதை எய்தி விட்டோம். ஒவ்வொருவரின் சாதனைகளையும் மற்றவர்கள் கொண்டாடும் ஒரு அணியாக இருக்கிறோம்.
அணியின் மனோபலம் மற்றும் திறமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடும் அழுத்தச் சூழ்நிலைகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகியுள்ளது. வான்கெடேயில் செம உதை வாங்கிய பிறகு மீண்டெழுந்து இந்த மாதிரி தொடரை வென்றது நிரம்பப் பாராட்டுதலுக்குரியது.
இது தைரியத்தைக் காட்டுகிறது, விராட் கோலி ‘பிரேவ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். தீவிரத் தன்மையுடன் தைரியமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம்.
ஆஸி. வெற்றி இப்போது வரலாறு, இப்போது இந்தக் கணம் நியூஸிலாந்து தொடர்தான், நல்ல பார்மில் இருக்கும் ஷிகர் தவண் காயமடைந்திருப்பது ஒட்டுமொத்த அணியையே காயப்படுத்துகிறது. தவன் ஒரு மூத்த வீரர், மேட்ச் வின்னர்.
கேதார் ஜாதவ் அணியின் ஒருங்கிணைந்த ஒரு அங்கம், நியூஸிலாந்தில் அவர் விளையாடுவார். ஒவ்வொரு வீரரையும் எப்படி நடத்துகிறோமோ அதே போன்றுதான் அவரும் நடத்தப்படுவார்.
சாஹல், குல்தீப் இருவரும் சேர்ந்து ஆடுவது பற்றி அந்தந்த கணத்தின் தேவை பொறுத்து தீர்மானிப்போம். சூரியகுமார் யாதவ்வை அணியில் தேர்வு செய்வது தேர்வுக்குழுவின் வேலை நான் அதில் தலையிடுவதில்லை, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT