Published : 13 Aug 2015 10:04 AM
Last Updated : 13 Aug 2015 10:04 AM
கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வரும் மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியை வெற்றியோடு தொடங்கியுள்ளார் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச். இதன்மூலம் அவர் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் 250-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்தப் போட்டியின் முதல் சுற்றில் ‘பை’ பெற்றிருந்ததால் நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்கிய ஜோகோவிச் 6-3, 7-6 (4) என்ற நேர் செட்களில் பிரேசிலின் தாமஸ் பெலூச்சியைத் தோற்கடித்தார். இதன்மூலம் பெலூச்சியை 4-வது முறையாக தோற்கடித்திருக்கும் ஜோகோவிச், அவருக்கு எதிராக ஹார்ட் கோர்ட்டில் முதல் வெற்றியை சுவைத்துள்ளார்.
வெற்றி குறித்துப் பேசிய ஜோகோவிச், “எங்கள் இருவருக்குமே இந்த ஆட்டம் கடும் சவால் நிறைந்த ஆட்டமாகும். உயர்தரமான இந்த ஆட்டம், விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் அமைந்தது. எனினும் என்னை அமைதியாக வைத்துக் கொண்டதோடு, உறுதியான மனநிலையோடும் இருந்தேன். அதுதான் கடினமான தருணத்திலும் என்னை வெற்றி பெற வைத்தது” என்றார்.
கடந்த மாதம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு மான்ட்ரியால் மாஸ்டர்ஸில் களமிறங்கியிருக்கும் ஜோகோவிச், மாஸ்டர்ஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக 27-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இதுதவிர கடைசியாக விளையாடிய 5 மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் சாம்பியின் பட்டம் வென்றுள்ளார்.
ரயோனிச் அதிர்ச்சி தோல்வி
மற்றொரு 2-வது சுற்றில் குரேஷியாவின் இவோ கார்லோவிச் 7-6 (1), 7-6 (1) என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த கனடாவின் மிலஸ் ரயோனிச்சை தோற்கடித்தார். 2010-க்குப் பிறகு மான்ட்ரியாஸ் மாஸ்டர்ஸில் ஆரம்ப சுற்றோடு ரயோனிச் வெளியேறுவது இதுவே முதல்முறையாகும். இந்த ஆட்டத் தில் 22 ஏஸ் சர்வீஸ்களை விளாசிய கார்லோவிச், தனது டென்னிஸ் வாழ்க்கையில் 10 ஆயிரம் ஏஸ் சர்வீஸ்களை கடந்தார்.
ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்களில் பிரான்ஸின் ஜோ-வில்பிரைட் சோங்கா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரேசிலின் போர்னா கோரிக்கையும், செக்.குடியரசின் லூகாஸ் ரசூல் 7-6 (2), 7-6 (4) என்ற நேர் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனையும் தோற்கடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT