Published : 08 Aug 2015 05:59 PM
Last Updated : 08 Aug 2015 05:59 PM
நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 என்று கைப்பற்றியது. இதன் மூலம் இழந்த ஆஷஸ் கலசத்தை மீண்டும் கைப்பற்றியது இங்கிலாந்து.
ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் 3-ம் நாளான இன்று 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ் மிக அருமையாக வீசி 21 ஓவர்களில் 8 மெய்டன்களுடன் 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் உட் 3 விக்கெட்டுகளையும், பிராட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
241/7 என்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஆடம் வோஜஸ் 51 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். நேற்று ஆட்டம் முடிந்தவுடன் சேனலில் “ஆட்டம் இன்னமும் முடிந்துவிடவில்லை” என்று சவால் விட்ட மிட்செல் ஸ்டார்க் 17 பந்துகளில் ரன் எடுக்காமல் பென் ஸ்டோக்ஸ் பந்தில் பெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, ஹேசில்வுட், நேதன் லயன் ஆகியோர் மார்க் உட்டின் துல்லியமான பந்துக்கு பவுல்டு ஆகி வெளியேறினர். 72.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா 253 ரன்களுக்குச் சுருண்டது. மொத்தமே இந்த டெஸ்ட் போட்டியில் 90 ஓவர்களையே ஆடியுள்ளது ஆஸ்திரேலியா. ஆட்ட நாயகனாக ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி மூலம் உள்நாட்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து தொடர்ச்சியாக 4-வது தொடர் வெற்றியை ஈட்டியுள்ளது.
தோல்வி மற்றும் ஓய்வு குறித்து மைக்கேல் கிளார்க்:
பந்தை எப்படி கையாள வேண்டும் என்பதை இந்தத் தொடரில் இங்கிலாந்து எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. அவர்கள் எங்களை துவம்சம் செய்தனர் என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எனது கிரிக்கேட் வாழ்வில் இன்னும் ஒரு டெஸ்ட் உள்ளது அதன் பிறகு ஓய்வு பெறுகிறேன். ஆட்டத்திலிருந்து விலகி ஓடுவது யாருக்கும் விருப்பம் இல்லாததுதான், ஆனால் எனது ஆட்டம் எனக்கே விருப்பமுடையதாக இல்லை.
எங்கள் அணியை சிறந்த இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்துக்கு ‘மொமெண்டம்’ கிடைத்துவிட்டால் அவர்களை அடக்கியாள்வது கடினம். இந்த சூழ்நிலையில் எப்படி வீச வேண்டும் என்பதை ஆண்டர்சன், பிராட், ஸ்டோக்ஸ் ஆகியோர் நிரூபித்தனர்.
நான் எப்படி ஆடவேண்டுமோ அப்படியாடவில்லை. என்னுடைய இலக்குக்கு ஏற்ப எனது ஆட்டம் அமையவில்லை, அணியை முன்னின்று வழிநடத்தவில்லை. நாம் சரியாக ஆடாத போது ஓய்வு பெறும் முடிவு அவ்வளவு கடினமான முடிவாக இருப்பதில்லை. 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதே அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இந்த அணியில் நிறைய திறமைகள் உள்ளன, இவர்கள் மீண்டெழுவார்கள். அதற்கான திறன் இங்கு உள்ளது” என்றார் கிளார்க்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT