Published : 21 Jan 2020 06:46 PM
Last Updated : 21 Jan 2020 06:46 PM
தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஷிகர் தவண் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய நிலையில் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவும் கணுக்கால் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலக உள்ளார்.
ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் டெல்லி அணிக்காக இசாந்த் சர்மா விளையாடினார். விதர்பா அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் பந்துவீசும் போது இசாந்த் சர்மாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து வலி தாங்க முடியாத இசாந்த் சர்மா பாதியிலேயே வெளியேறினார்.
அதன்பின் இசாந்த் சர்மாவுக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டது.இதில் இசாந்த் சர்மாவின் கணுக்கால் தசைநார் கிழிந்துள்ளது. ஆனால் எலும்பு முறிவு ஏதும் ஏற்படவில்லை. இந்த தசைநார் கிழிவு சற்று தீவிரமானது என்பதால், குறைந்தபட்சம் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க இசாந்த் சர்மாவுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
இதனால் நியூஸிலாந்துக்கு எதிராகப் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இசாந்த் சர்மா பங்கேற்க வாய்ப்பில்லை என்று டெல்லி கிரிக்கெட் அமைப்பின் பொதுச்செயலாளர் வினோத் திஹாரா தெரிவித்துள்ளார்.
ஆனால், பிசிசிஐ விதிமுறைப்படி, பிசிசிஐ சார்பில் மருத்துவர்கள் குழு இசாந்த் சர்மாவைப் பரிசோதித்து, ஸ்கேன், எக்ஸ்-ரே போன்ற ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதன்பின் இறுதியாக வாரியம் சார்பில் முடிவு அறிவிக்கப்படும்.
இசாந்த் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக டெஸ்ட் தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் ஷைனி இடம் பெறலாம் எனத் தெரிகிறது.
ஏற்கனவே தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், இசாந்த் சர்மாவும் விளையாட முடியாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT