Last Updated : 19 Jan, 2020 01:22 PM

 

Published : 19 Jan 2020 01:22 PM
Last Updated : 19 Jan 2020 01:22 PM

3-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்று ஆஸி. முதலில் பேட்டிங்; ஆடுகளம் எப்படி?

பெங்களூரு

பெங்களூருவில் இன்று பகலிரவாக நடக்கும் இந்திய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 36 ரன்களில் தோற்கடித்தது இந்திய அணி. இதனால் இரு அணிகளும் தலா ஒருவெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று பகலிரவாக நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட்ஸனுக்கு பதிலாக ஹேசன்வுட் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் 2-வது போட்டியில் ஆடிய அதே அணி வீரர்கள் இதிலும் விளையாடுகின்றனர்.காயத்தில் அவதிப்பட்ட ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இருவரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மைதானம் எப்படி

சின்னச்சாமி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாகும். கடந்த இரு ஒருநாள் போட்டிகளில் இந்தியா-ஆஸி அணிகள் சேர்ந்து 709, 647 ரன்கள் குவித்துள்ளதால் ரன்மழை பொழிவது நிச்சயம்.

இந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து அதிகமான ஸ்கோர் செய்தால், பந்துவீசும்போது நெருக்கடியில்லாமல் இருக்கும். சேஸிங்கின் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், பந்துவீசும் அணிக்குச் சற்று பின்னடைவு இருக்கும், அதேசமயம் பேட்ஸ்மேன்களை நோக்கி நன்றாக பந்து எழும்பி வரும் என்பதால், ரசிகர்கள் சிக்ஸர், பவுண்டரி மழையை எதிர்பார்க்கலாம்.

இதுவரை பெங்களூரு மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x