Published : 19 Jan 2020 10:18 AM
Last Updated : 19 Jan 2020 10:18 AM

பெங்களூருவில் இன்று கடைசி ஆட்டம்: ஒருநாள் போட்டித் தொடரை வெல்வது யார்?; இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை

பெங்களூரு

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெற உள்ளது.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பதிலடி கொடுத்த இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

இதன் மூலம் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று கடைசி ஆட்டம் நடைபெறுகிறது. தொடரை வெல்வது யார்?என்பதை தீர்மானிக்கும் வகையில்அமைந்துள்ள இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் ரசிகர்கள் மத்தியில் ஒருவித அச்சம் எழுந்த நிலையில் 2-வது போட்டியில் இந்திய அணி அனைத்து துறையிலும் ஆதிக்கம் செலுத்தியது. முக்கியமாக பேட்டிங் வரிசை அற்புதமாக அமைந்திருந்தது. முதன்முறையாக 5-வது இடத்தில் களமிறங்கிய கே.எல்.ராகுல் பெரிய அளவிலான பங்களிப்பு செய்தார்.

52 பந்துகளில் 80 ரன்கள் விளாசிய கே.எல்.ராகுலின் அசாத்தியமான பேட்டிங்தான் இரு அணிகளுக்கு இடையே பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருந்தது. டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். இதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.

ரிஷப் பந்த் இல்லாத நிலையில்கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் பணியிலும் நேர்த்தியாக செயல்பட்டார். ஆரோன் பின்ச்சை ஸ்டெம்பிங் செய்ததுடன் இரு கேட்ச்களையும் எடுத்து கவனத்தை ஈர்த்தார். அவரிடம் இருந்து நிறைவான செயல் திறன் மீண்டும் ஒரு முறை வெளிப்படக்கூடும். ராஜ்கோட் போட்டியில் காயம் அடைந்த ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் போட்டியில் விளையாடுவதற்கான உடற் தகுதியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு ஆட்டங்களிலும் ஸ்ரேயஸ் ஐயர் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினார். அதேபோன்று கடந்த ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்பை மணீஷ் பாண்டே சரியாக கைப்பற்றிக் கொள்ளவில்லை. இதனால் இவர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அநேகமாக இன்றைய ஆட்டத்தில் மணீஷ் பாண்டேவுக்கு பதிலாக கேதார் ஜாதவ் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சில் அதிக மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. ராஜ்கோட்டில் முக்கியமான கட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் காரே ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து பெரிய அளவில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த குல்தீப் யாதவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான பந்து வீச்சு வெளிப்படக்கூடும்.

ஜஸ்பிரித் பும்ராவும் நேர்த்தியாக வீசத் தொடங்கியுள்ளது அணியின்பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ராஜ்கோட்டில் பும்ரா 9.1 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 32 ரன்களை விட்டுக்கொடுத்து ஒருவிக்கெட் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் தொடக்க ஓவர்களில் ஷமியும், சைனியும் ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும் இறுதிக்கட்ட ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு முறை ஒருங்கிணைந்த செயல்திறன் வெளிப்படக்கூடும்.

முதல் ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி ராஜ்கோட்டில் முக்கியமான தருணங்களை வென்றெடுக்க தவறியது. ஸ்டீவ் ஸ்மித் களத்தில் நிலைப் பெற்றிருந்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அவரை குல்தீப் யாதவ் வெளியேற்றியதும் ஒட்டுமொத்த அணியும் ஆட்டம் கண்டது.

பார்மில் உள்ள லபுஷான் சிறப்பாக விளையாடிய போதிலும் முக்கியமான தருணத்தில் தனது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேவேளையில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஆஷ்டன் அகர் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

முன்னணி பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், ராஜ்கோட்டில் 78 ரன்களை தாரை வார்த்திருந்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாகஜோஸ் ஹசல்வுட் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் களமிறங்கும் பட்சத்தில் ஆஷ்டன் அகர் அல்லது மிட்செல் ஸ்டார்க் நீக்கப்படலாம். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆடம் ஸம்பா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு மீண்டும் ஒரு முறை ஆடம் ஸம்பா அழுத்தம் கொடுக்கக்கூடும்.

நேரம்: பிற்பகல் 1.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x