Last Updated : 18 Jan, 2020 07:52 PM

 

Published : 18 Jan 2020 07:52 PM
Last Updated : 18 Jan 2020 07:52 PM

ரோஹித், தவண் பங்கேற்பார்களா? ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியா-ஆஸி. பலப்பரிட்சை: பெங்களூரு மைதானம் யாருக்கு சாதகம்

கே.எல்.ராகுல் : கோப்புப்படம்

பெங்களூரு

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நாளை பகலிரவாக நடக்கும் கடைசி மற்றும் 3-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வெல்லும் முனைப்பில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

பெங்களூரு மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்க புரி, ரன் வேட்டையாடுபவர்களுக்கு நல்ல களம் என்பதால் நாளை ரசிகர்களுக்குப் போட்டி விருந்தாக அமையும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 4 ஒருநாள் ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி ராஜ்கோட் போட்டியில் வென்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த முறை தொடரை இழந்ததற்கு இந்த முறை பழிதீர்க்க இந்திய அணி முயலும்.

இந்திய அணியைப் பொறுத்தவரை ,மார்பு விலா எலும்பில் காயம் பட்டுள்ள ஷிகர் தவண், தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் ரோஹித் சர்மா இருவரும் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்களா என்று பிசிசிஐ இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை. கடைசி நேரத்துக்கு மாறுதலுக்கு உட்பட்டது, இருவரின் உடல்நிலையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், ரோஹித் சர்மா பங்கேற்பது பெரும்பாலும் சந்தேகமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தவண் பேட்டிங் மட்டும் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. மும்பையில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

ஆனால், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை தனது பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் 36 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்து இந்திய அணி பதிலடி கொடுத்தது.

இந்திய அணி பேட்டிங்கில் வலிமையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. நாளை ரோஹித் சர்மா அல்லது தவண் இருவரில் ஒருவர் களமிறங்காத பட்சத்தில் ராகுல் தொடக்க ஆட்டகரராக களமிறங்குவார். நெடுவரிசைக்குக் கூடுதல் ஆல்ரவுண்டராக கேதார் ஜாதவ், அல்லது ஷிவம் துபே சேர்க்கப்படலாம்.
ரிஷப் பந்துக்கு ஏற்பட்ட காயம் முழுமையாகக் குணமடையாததால், அவருக்குப் பதிலாக நாளைய போட்டியிலும் ராகுலே கீப்பிங் செய்வார் எனத் தெரிகிறது. ராஜ்கோட் போட்டியில் ஒரு ஸ்டெம்பிங், கேட்ச் என ராகுல் விக்கெட் கீப்பிங் ப ணியையும் சிறப்பாகச் செய்தார்.

முதல் போட்டியில் பேட்டிங் வரிசையை மாற்றி கையைச் சுட்டுக்கொண்ட கேப்டன் கோலி 2-வது போட்டியில் வழக்கமான வரிசையில் களமிறங்கி தனது பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதனால் இந்த ஆட்டத்திலும் கோலி தனது இடத்தை மாற்ற வாய்ப்பில்லை. தவண் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.


ரோஹித் சர்மா இதே சின்னச்சாமி மைதானத்தில்தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2013-ம் ஆண்டில் இரட்டை சதம் அடித்துள்ளார். ஆதலால், ரோஹித் சர்மா விளையாடினால் அது அவருக்குச் சாதகமானதாகவே இருக்கும்.

ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே கடந்த போட்டியில் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தபோதிலும், இருவரும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள் என்பதால், இறுதி ஆட்டத்தில் இவர்கள் ஜொலிப்பார்கள் என நம்பலாம்.

கே.எல்.ராகுல் கடந்த போட்டியில் நடு வரிசையில் களமிறங்கி அடித்து நொறுக்கியுள்ளார். அவரின் சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் மலைக்க வைக்கும் வகையில் இருப்பதால் நாளை எந்த வரிசையில் களமிறங்கினாலும் ராகுலின் விளாசலை எதிர்பார்க்கலாம்.

பந்துவீச்சில் இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை பும்ரா, ஷமி, ஷைனி ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவும் இடம்பெறவே அதிகமான வாய்ப்புள்ளது. ராஜ்கோட் போட்டியில் அருமையான பந்துவீச்சை குல்தீப் வெளிப்படுத்தி திருப்புமுனையான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். ஆதலால், சாஹலுக்கு பதிலாக குல்தீப்புக்கு வாய்ப்பு உறுதியாகும்.

ரோஹித் அல்லது தவண் இல்லாத பட்சத்தில் கூடுதல் ஆல்ரவுண்டர் தேவைக்காக கேதார் ஜாதவ் இடம் பெறவே அதிகமான வாய்ப்புள்ளது


ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங் வரிசையில் பெரும்பாலும் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.பெங்களூரு மைதானத்தில்தான் கடந்த 2017-ம் ஆண்டு வார்னர் சதம் அடிக்க, ஆரோன் பிஞ்ச் 94 ரன்கள் சேர்த்த இருவரும் 200 ரன்களுக்கு மேல் முதல்விக்கெட்டுக்கு சேர்த்தனர். இதை இந்திய வீரர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இவர்களின் அதிரடி கூட்டணி நாளையும் தொடர்வது ஆபத்துதான்.

இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி தருவதுதான் பாதுகாப்பானதாகும். ஸ்மித், லாபுஷேன், காரே, டர்னர் என அடுத்தடுத்து பேட்டிங் வரிசை பலமாக இருப்பதால் இந்திய அணி பந்துவீச்சில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
கடந்த ஆட்டத்தில் ரிச்சார்ட்ஸன் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்ததால் இந்த ஆட்டத்தில் ஹேசல்வுட் களமிறங்க வாய்ப்புள்ளது.

மைதானம் எப்படி

சின்னச்சாமி ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாகும். கடந்த இரு ஒருநாள் போட்டிகளில் இந்தியா-ஆஸி அணிகள் சேர்ந்து 709, 647 ரன்கள்குவித்துள்ளதால் ரன்மழை பொழிவது நிச்சயம்.

இந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து அதிகமான ஸ்கோர் செய்வது பந்துவீசும்போது நெருக்கடியில்லாமல் இருக்கும். சேஸிங்கின் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், பந்துவீசும் அணிக்குச் சற்று பின்னடைவு இருக்கும் அதேசமயம் பேட்ஸ்மேன்களை நோக்கி நன்றாக பந்து எழும்பி வரும் என்பதால், ரசிகர்கள் சிக்ஸர், பவுண்டரி மழையை எதிர்பார்க்கலாம்.

இதுவரை பெங்களூரு மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x