Published : 18 Jan 2020 02:16 PM
Last Updated : 18 Jan 2020 02:16 PM
ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 36 ரன்களில் தோல்வியடைந்தது, இதற்குக் காரணம் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததே என்று ஸ்டீவ் ஸ்மித் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் ஒரு மரபான அணுகுமுறையைத்தான் இந்தியா கையாண்டது, முழு ரன் குவிப்புப் பிட்ச், முதலில் பேட் செய்து 300-320 ரன்கள் பிறகு பிட்ச் மெதுவாகவும், தாழ்வாகவும் மாறிவிடும் அப்போது பந்துகள் மட்டைக்கு வராது, இதே வகையான பிட்சில்தான் ஸ்மித் நேற்று பந்து நின்று வந்ததால் குல்தீப் பந்தில் பவுல்டு ஆனார்.
மார்னஸ் லபுஷேன் மிக அருமையாக தன் ஒருநாள் போட்டியை தொடங்கிய நிலையில் 31வது ஓவரில் அவுட் ஆனார், 38வது ஓவரில் அதிரடி வீரர் அலெக்ஸ் கேரி, ஸ்மித் ஆகியோர் குல்தீப்பிடம் விழுந்தனர். இந்த 3 விக்கெட்டுகள் திருப்பு முனை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “30-40ம் ஓவர்களுக்கு இடையே 3 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்குக் காரணமாகும். ஒருவர் தொடக்கம் முதல் இறுதி வரை நிற்க வேண்டும்.
யாராவது ஒருவர் இந்த ஓவர்களின் போது நின்றிருந்தால் விஷயங்கள் வேறு மாதிரி சென்றிருக்கும். இங்குதான் ஆட்டத்தை இழந்தோம்.
முதல் போட்டியில் மார்னஸ் லபுஷேன் அருமையாக ஆடினர். சிறிது நேரம் ஓவருக்கு 6 ரன்கள் விகிதத்தில் அடித்து வந்தோம், நாங்கள் நல்ல கிரிக்கெட் ஷாட்களை ஆடினோம். ரன் விகிதத்தை சமயத்திற்கேற்றார் போல் அதிகரித்து நன்றாக பராமரித்து வந்தோம். 3 விக்கெட்டுகளை 30-40ம் ஓவர்களுக்கு இடையில் இழந்தது விரட்டலை முடக்கியது.
ஒரு இயல்பான ஒருநாள் போட்டித் திட்டம்தான், விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரன் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும், ஆனால் இந்திய அணி நல்ல கூட்டணிகளை அமைத்தது. கோலி, தவன், ராகுல் உண்மையில் நன்றாக ஆடினர். நடுவில் அவர்களால் கூட்டணியை உருவாக்க முடிந்தது.
என்னைப் பொறுத்தவரையில் நான் ரன்கள் எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது, இன்னும் நின்றிருக்க வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக குல்தீப் பந்து நின்று வந்தது, கட் ஷாட் மட்டையில் பட்டு பவுல்டு ஆனது. மிகவும் கெட்ட காலம் அது, கேரியையும் அதே ஓவரில் இழந்திருந்தோம்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை எனக்கு எதிராக முயன்றனர். முதல் 20 பந்துகள் நான் சரியாக ஆடியதாக நினைக்கவில்லை. ஆனால் விக்கெட்டைத் தக்க வைத்தேன். பிறகுதான் கொஞ்சம் ரிதம் கிடைத்தது நான் நல்லபடியாக உணர்ந்தேன். பெங்களூருவில் இன்னும் கூடுதலாக ரன்கள் எடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
ரோஹித் சர்மா காயம் குறித்து, “ரோஹித் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர், அவர் குணமடைய வாழ்த்துக்கள், அவர் ஆட முடியவில்லை எனில் இந்திய அணியில் அது ஓட்டை விழச்செய்யும், ஏனெனில் டாப் ஆர்டரில் அவர் ஒரு அபூர்வ வீரர். அவரது சாதனைகளே பேசும்.
பெங்களூரு பிட்ச் பேட்டிங் பிட்ச்டான், பந்துகள் பறக்கும், சிக்சர்கள் நிறைய வரும் என்று எதிர்பார்க்கிறேன், அவுட் பீல்டும் வேகம் நிறைந்தது. இன்னொரு அதிக ஸ்கோர் ஆட்டமாகவே அது இருக்கும்” இவ்வாறு கூறினார் ஸ்டீவ் ஸ்மித்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT