Published : 14 Jan 2020 08:49 PM
Last Updated : 14 Jan 2020 08:49 PM

பும்ரா, ஷமி, ஜடேஜா, குல்தீப்... என்ன பயன்? ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற முடியவில்லை: பிஞ்ச், வார்னர் சதத்தில் ஆஸி. மிகப்பெரிய வெற்றி

மும்பை நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 255 ரன்களுக்கு நசுக்கிய ஆஸ்திரேலிய அணி பிறகு இலக்கை விரட்டி 258/0 என்று ஒரு விக்கெட்டைக் கூட விடாமல் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 112 பந்துகளில் 128 ரன்கள் இதில் 17 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடங்கும். ஏரோன் பிஞ்ச் 114 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்ஸுடன் 110 நாட் அவுட். மொத்தம் 37.4 ஓவர்களில் 258 ரன்களை விக்கெட் இழப்பின்றி நோ-லாஸில் ஊதியது ஆஸ்திரேலியா. சமீபகாலங்களாக சொத்தை அணிகளைக் கூப்பிட்டு உதைத்து மகிழ்ந்த இந்திய அணிக்கு சிந்திக்க நிறைய விஷயங்களைக் கொடுத்தது ஆஸ்திரேலியா. அடுத்த போட்டியே கூட இந்தியா வெல்லலாம் ஆனால் இந்த படுதோல்வி நினைவிலிருந்து அகல்வது சற்றுக் கடினமே. ஏனெனில் விரட்டலை உலகின் நம்பார் 1 அணிக்கு எதிராக கேலி செய்து விட்டனர் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள்.

ஏனெனில் இந்திய அணி 100 ரன்களைக் குறைவாக எடுத்தது.

பும்ரா காயத்திலிருந்து வந்த பிறகு பந்து வீச்சு சுகமில்லை என்று அன்றே குறிப்பிட்டோம், ஷமி வந்தால் சரியாகி விடும் என்றும் கூறப்பட்டது, ஷமியின் அபார பார்ம் வேறு நமது நம்பிக்கையை அதிகப்படுத்தியது ஆனால் அவரோ 7.4 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்தார், அதைவிட இதில் 10 பவுண்டரிகளை வாரி வழங்கினார்.

பும்ரா 7 ஓவர்களில் 50 ரன்கள், கொடுத்த பவுண்டரிகள் 9. இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இவரை சுழற்சி முறையில் சாஹலுடன் மாற்றி மாற்றி எடுக்கப்பட்டதில் தன்னம்பிக்கை இழந்தார், பெரிய அணிகளுக்கு எதிராக நிரூபிக்கும் இவரும் சுழற்சி முறை எனும் தவறினால் இன்று 10 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்து அதில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசப்பட்டார். ஷர்துல் தாக்கூர் உயர்மட்ட அணிகளுக்கு எதிரான பவுலர் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக 5 ஓவர் 41 ரன்களைக் கொடுத்தார் இதில் 5 பவுண்டரிகள் 1 சிக்சர் அடங்கும். ஜடேஜா மட்டும் 8 ஓவர் 41 என்று சிக்கனம் காட்டினார், ஆனால் விக்கெட் லபிக்கவில்லை.

டாஸ் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது முதல் கச்சிதமான பந்து வீச்சு மாற்றம், களவியூகம், சரியான நேரத்தில் பந்து வீச்சில் மாற்றங்கள் என்று மிகவும் கவனமாக கேப்டன்சியைக் கையாண்டார் ஏரோன் பிஞ்ச்.

இந்திய அணியின் தோல்விக்குப் பிரதான காரணம் விராட் கோலி தான் 9,000 ரன்களுக்கும் மேல் எடுத்த 3ம் நிலையில் இறங்காமல் ராகுலுக்காக 4ம் நிலையில் இறங்கியது ஆஸ்திரேலியாவின் திட்டங்களுக்கு மிகச்சரிவர பொருந்திப் போனது. பந்து வீச்சில் பிரமாதமான திட்டங்களுடன் துல்லியம் காட்டிய ஆஸ்திரேலியா பேட்டிங்கில் இந்திய அணியை வதைத்து எடுத்தனர்.

விராட் கோலியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஓரிருமுறை நடுவரிடம் நாட் அவுட்டுக்கு அவுட் கேட்டு கோபமடைந்ததைத் தவிர.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 250 ரன்களுக்கும் மேலான இலக்கை ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் ஒரு அணி வெற்றி பெறுவது இது 3வது முறையாகும். மூன்று முறையும் எதிரணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அனைத்தும் ஆசிய அணிகள் என்பது கூடுதல் தகவல்.

டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணி அவ்வளவு சரளமாக ஆடவில்லை என்றாலும் ராகுலும், ஷிகர் தவணும் தொடக்க ரோஹித் சர்மா விக்கெட்டுக்குப் பிறகு ஸ்கோரை 27 ஓவர்களில் 134/1 என்று கொண்டு சென்றனர், ஆனால் அங்கிருந்து அடுத்த 121 ரன்களி 9 விக்கெட்டுகளை இழந்தது. ராகுல், ஷிகர் தவண் பேட் செய்தபோது கூட நல்ல பேட்டிங் பிட்சில் ரன் விகிதம் ஓவருக்கு 5 ரன்களைத் தொடவில்லை. பிறகு தொட்டது ஆனால் உடனே விழுந்தது இப்படிச் சென்று கொண்டேயிருந்தது இந்திய பேட்டிங் வரிசைக்கு இவ்வளவு தரமான உயர்தர பந்து வீச்சை கையாளும் திறமை மீது ஐயத்தை கிளப்புகிறது. பிரதான காரணம் விராட் கோலி 3ம் நிலையில் இறங்கி அணியை வழிநடத்தியிருக்க வேண்டும், அந்த டவுன் தான் மிக மிக முக்கியமானது என்பதை அவர் எப்படி உணராதிருக்க முடியும்? சச்சின் டெண்டுல்கர் தொடக்க இடத்திலிருந்து 4ம் நிலைக்கு இறக்கப்பட்ட போதெல்லாம் இந்திய அணி கடுமையாகத் திணறித் தோற்றது, இதனால் 2007 உலகக்கோப்பையிலிருந்து மிக இழிவாக முதல் சுற்றிலேயே வெளியேறியது என்பதெல்லாம் மிகப்பெரிய பாடங்கள்.

வார்னரும், ஏரோன் பிஞ்சும் இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்காகவும் இல்லாத அளவில் பெரிய கூட்டணியை அமைத்து சாதனை படைத்துள்ளனர்.

விளக்கு வெளிச்சத்தில் லேசான இரவுப்பனிப்பொழிவில் ஸ்விங் இருந்தாலும் பிட்சில் பந்துகள் இறுகப் பற்றி நின்று வராது, அப்படியிருந்தால்தான் ஸ்விங்குக்கு விக்கெட்டுகள் கிடைக்கும் அதனால்தான் பும்ரா, ஷமி ஸ்விங் செய்தாலும் பந்துகள் மிக அழகாக மட்டைக்கு அடிக்க வாகாக வந்தன.

பிஞ்ச் அனாயசமாக ஆடினார் இவர் 5 பவுண்டரிகளை அடிக்கும் போது வார்னர் ஒரு பவுண்டரியை மட்டுமே அடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு பந்து வீச்சில் ஒன்றுமில்லை என்று தெரிந்த பிறகு ஷர்துல் தாக்கூர் பந்தை தூக்கி மிட் ஆஃப் மீது சிக்ஸுக்கு அனுப்பினார். தாக்குர் தன் வேகத்தைக் கூட்ட வேண்டும் என்று தோனி எப்போதோ அட்வைஸ் செய்தார், ஆனால் அவர் அதைக் கேட்டது போல் தெரியவில்லை, குறைந்த வேகம் வார்னரை வாழ வைத்தது. தாக்குர் போலவே குல்தீப்பும் சிக்சரில் வரவேற்கப்பட்டார் 13 வது ஓவரில் ஸ்கோர் 100 ரன்களை எட்டியது, இதில் சுமார் 70 ரன்கள் பவுண்டரிகளிலேயே வந்தது.

விக்கெட் வீழ்த்த முடியாத வெறுப்பு தலைக்கேற பந்து வீச்சு ஸ்பின்னர்களிடமிருந்து ஷார்ட் பிட்ச் ஆக மாறியது. ஒரு ரிவியூ வேஸ்ட் ஆனது, நடுவரிடம் கோலி நாட் அவுட்டுக்கு வாதாடினார். ஆனால் 31வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது நோ-லாஸ் கூட்டணி. ஒருகட்டத்தில் போட்டியை வார்னரும் பிஞ்சும் விரைவில் முடிக்க இந்திய வீரர்கள் காத்திருந்தனர் என்றே கூற வேண்டும்.

மாறாக ஆஸ்திரேலியா பவுலிங்கின் போது இப்படியில்லை, முழு எனர்ஜி, அருமையான தொழில்நேர்த்தியான ஆல்ரவுண்ட் கிரிக்கெட்டின் மூலம் இந்திய அணிக்கு மறக்க முடியாத மிகப்பெரிய தோல்வியை ஆஸ்திரேலியா அளித்து விட்டது.

எப்போதும் ஏதோ செட்டில்டு அணி போல் சுழற்சி முறையில் தேர்வு செய்வது, அணிச்சேர்க்கை அணிச்சேர்க்கை என்றும் 4ம் இடம் என்றும் 5,6,7ம் இடமென்றும் பேசிப்பேசியே வாழ்ந்தனர். ஆனால் தீர்வுகளைக் கண்டுபிடிக்கவில்லை, தோனிக்கு மாற்று பினிஷர் இன்னும் வரவில்லை, பாண்டியா போன்ற ஆல்ரவுண்டருக்கு மாற்று இன்னும் இல்லை, முதலில் அணியில் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் தேவை என்பதை உணர வேண்டும், கேதார் ஜாதவையெல்லாம் ஆல்ரவுண்டர் என்று கூறிக்கொள்வது தமாஷ்தான். அதனால்தான் உண்மையான ஆல்ரவுண்டர் என்று கிரிக்கெட்டில் குறிப்பிடுவார்கள். ஷிவம் துபே, விஜய் சங்கர் யாரையாவது இந்நேரம் உருவாக்கியிருக்க வேண்டும், அல்லது யாரையாவது முன்னால் இறக்கி துல்லியப் பந்து வீச்சின் மீது துல்லியத் தாக்குதல் நடத்த வேண்டும், ஆனால் கோலி ஏதோ எண்ணெய் மழை பெய்வது போல் கற்பனைவளமற்று கேப்டன்சி செய்கிறார். நிறைய விஷயங்களைச் சிந்தித்து அணியின் உண்மையான பிரச்சினைகளை பேசி அலச வேண்டும் மாறாக சிறிய அணிகளிடம் பெற்ற வெற்றிகளில் திளைத்துக் கொண்டிருப்பதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x