Published : 14 Jan 2020 09:27 AM
Last Updated : 14 Jan 2020 09:27 AM
இலங்கையுடனான டி20 தொடரால் மீண்டும் பார்முக்கு திரும்பியிருக்கிறார் தவண், சமீபத்திய தொடர்களில் ரோஹித்தும், ராகுலும் சிறப்பான துவக்கத்தை அளித்து வருவதால் அணித் தேர்வில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
3 துவக்க வீரர்கள் ஒரே நேரத்தில் நல்ல நிலையில் இருப்பது ஒன்றும் கிரிக்கெட்டுக்கு புதிதல்ல. கடந்த காலங்களில் இந்திய அணியிலேயே சச்சின், சவுரவ், சேவாக் ஆகியோரும், சச்சின், சேவாக், கம்பீர் ஆகியோரும் அமர்க்களப்படுத்தியுள்ளனர். அப்போதெல்லாம் ஏதாவது ஒரு வீரர் நடுவரிசையில் ஆடக்கூடிய வழக்கமான முறை பின்பற்றப்படும். சச்சினும், சேவாக்கும் ஆட்டத்தை துவக்கியபோது கங்குலி கூட அதைத்தான் செய்தார். 2011 உலகக்கோப்பையில் கம்பீர் 3-வது வீரராக இறங்கினார். ஆனால் 2012-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. என்னதான் பார்மில் இருந்தாலும் சச்சின், சேவாக், கம்பீர் ஆகிய மூவரில் இருவருக்குத்தான் அணியில் இடம், மற்றொருவர் சுழற்சி முறையில் பெஞ்சில் உட்கார வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த முடிவை எடுத்த தோனியின் அணியில் அப்போது கோலியும் இருந்தார். நடுவரிசையில் ஆடிய ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பளிப்பதற்காக இப்படியொரு முடிவை எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் மெதுவான பீல்டர்கள், 30 வயதைக் கடந்தவர்கள், வரவிருக்கும் உலகக்கோப்பை, இளைஞர்களுக்கு வாய்ப்பு என பல்வேறு காரணங்களை கூறினார். முன்னாள் வீரர்கள் பலரும் இம்முறையை கடுமையாக விமர்சித்தனர். தொடரில் அணி நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்ட பின்பு திட்டத்திலிருந்து பின்வாங்கி மீண்டும் மூவரையும் அணியில் களமிறக்கினார் தோனி. ஆனாலும் தொடரின் இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்ததுடன், நடுவரிசையில் தான் நம்பிய ரோகித் சர்மாவும் சாதிக்க முடியாமல் போனது.
தற்போதும் 3 துவக்கவீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், பெரும்பாலான விஷயங்களில் தோனியின் வழியைப் பின்பற்றும் கோலி இவ்விஷயத்திலும் அதே பாணியிலான சுழற்சி முறையை அமல்படுத்துவாரா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலை வந்தால் 2012-ல் இத்திட்டத்தால் வாய்ப்பு பெற்ற ரோகித் சர்மா தற்போது பெஞ்சில் உட்கார வைக்கப்படக்கூடிய சூழல் உருவாகும். விதிமுறைகள் என்பது அனைவருக்கும் பொருந்தக்கூடியது அல்ல என்பதால் இப்போது பலிகடா ஆகப்போவது கேதர் ஜாதவ் அல்லது மனீஷ்பாண்டே வாகத்தான் இருக்கக்கூடும். 2012-ல் ஏற்பட்ட நிலை மீண்டும் வராது என நம்புவோமாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT