Published : 21 Aug 2015 07:32 PM
Last Updated : 21 Aug 2015 07:32 PM
கொழும்பு டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இந்தியாவின் 393 ரன்களுக்கு எதிராக இலங்கை தனது முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
ஆட்டத்தின் இந்த நிலையில் இந்தியா ஆரோக்கியாமன 253 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முக்கியமான விஷயம் என்னவெனில் இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்புடன் வீசியதே, குறிப்பாக பேட்டிங்கில் சொதப்பிய ஸ்டூவர்ட் பின்னி 11 ஓவர்கள் 3 மெய்டன்களுடன் 24 ரன்களை விட்டுக் கொடுத்தார், விக்கெட்டையும் கைப்பற்றியிருக்க வேண்டும் ஆனால் அது நோபாலாக அமைந்தது.
சில்வா அப்போது 14 ரன்களில் இருந்தார், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சற்றே குத்தி எழுப்பிய பின்னியின் பந்து சில்வாவின் மட்டை விளிம்பைத் தொட்டு சென்றது சஹா கேட்ச் பிடித்தார், பின்னி முதல் விக்கெட்டை வீழ்த்தியதாக வாழ்த்துக்கள் வரத் தொடங்கிய நிலையில் நோ-பாலுக்காக சரிபார்க்கப்பட்டது, இதில் பின்னி நோ-பால் வீசியது தெள்ளத் தெளிவானது. ஆனால் தொடர்ந்து அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சில பிரச்சினைகளைக் கொடுத்தபடியே இருந்தார். பவுண்டரி பந்துகள் அதிகம் வீசவில்லை.
முன்னதாக உமேஷ் யாதவ் இடது கை தொடக்க வீரர் கருண ரத்னேவுக்கு இன்ஸ்விங் வீசி எல்.பி. செய்தார். சங்கக்காரா இறங்கி கொஞ்சம் தடுமாறி பிறகு செட்டில் ஆனார். அவர் 87 பந்துகளில் 32 ரன்களை எடுத்து அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய ஆஃப் ஸ்டம்ப்புக்கு நேராக வந்த பந்தை முன்னால் வந்து தடுத்தாடினார் பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு ரஹானேயிடம் சென்றது இடது புறம் பாய்ந்து பிடித்தார், அருமையான கேட்ச். முன்னர் கடினமான கேட்சை சங்கக்காராவுக்கு விட்டதை ஈடு செய்தார்.
சங்கக்காரா வீழ்ந்ததற்குக் காரணம், அஸ்வினின் பந்து ஸ்பின் ஆகி வெளியே செல்லுமா அல்லது ஸ்டம்புக்கு நேராக வந்து கால்காப்பைத் தாக்கி எல்.பி. ஆகிவிடுமா, அல்லது பவுல்டு ஆகி விடுமா என்ற சந்தேகமே. அந்த சந்தேகத்தை சங்கா மனதில் ஏற்படுத்தினார் அஸ்வின். அதனால்தான் பார்ப்பதற்கு அது ஏதோ மிகவும் சாதாரணமாக வீழ்த்தியது போல் தெரிந்தாலும் அதன் பின்னணியில் நிறைய மனோவியல் நாடகங்கள் நடைபெற்றதை அவ்வளவு சுலபமாக மேலோட்டமாக பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியாது. சங்காவை ஓரளவுக்கு ‘ஒர்க் அவுட்’ செய்தார் அஸ்வின் என்றே கூற வேண்டும்.
நடுவில் சங்ககாரா, சில்வா 2-வது விக்கெட்டுக்காக 74 ரன்களைச் சேர்த்தாலும் அஸ்வினும், பின்னியும் இருவரையும் சோதனைக்குள்ளாக்கினர் என்றால் மிகையாகாது. சில்வா தனது அரைசதத்தை எடுத்து முடித்தவுடன் 51 ரன்களில் அமித் மிஸ்ராவின் லெக் ஸ்பின் பந்தை திரும்பும் திசைக்கு நேர் எதிராக ஸ்வீப் செய்தார் சில்வா ஆனால் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு இதற்காகவென்றே ஷார்ட் ஃபைன் லெக்கில் நிறுத்தப்பட்டிருந்த அஸ்வின் கையில் கேட்ச் ஆனது.
ஆட்ட முடிவில் திரிமானே 28 ரன்களுடனும், அஞ்சேலோ மேத்யூஸ் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 53 ஓவர்களில் இலங்கை 140 ரன்களையே எடுக்க முடிந்தது. பிட்சில் சில பந்துகள் திடீரென திரும்புகின்றன, சில பந்துகள் திடீரென குட் லெந்திலிருந்து எழும்புகின்றன.
உமேஷ் யாதவ், சில பந்துகளில் மேத்யூஸை ஆட்டிப்படைத்தார், ஆனால் விக்கெட்டைக் கைப்பற்ற முடியவில்லை. கடந்த டெஸ்ட் போட்டியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டது போல் தெரிகிறார் கோலி, பீல்டிங் நிலை சரியாக இருந்தது, பவுண்டரிகளை அடிக்க இலங்கை பேட்ஸ்மென்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.
சுலப பவுண்டரிகளை பவுலர்களும் அனுமதிக்கவில்லை. நாளை 3-ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்தியா முன்னிலை பெறுமா என்பதை பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT