Published : 13 Jan 2020 04:16 PM
Last Updated : 13 Jan 2020 04:16 PM

ரோஹித், தவண், ராகுல் மூவருமே ஆட வாய்ப்புள்ளது: தோனியின் வழியில் பின்வரிசையில் களமிறங்குகிறார் கோலி?

படம். | ஏ.பி.

மும்பையில் நாளை (செவ்வாய்க் கிழமை, 14-1-20) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் தவண், ராகுல் இருவருமே ரோஹித் சர்மாவுடன் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியை முன்னிட்டு இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கூறியதாவது:

அனைவரும் பார்மில் இருப்பது ஒரு அணிக்கு எப்பவுமே நல்லது. ஃபார்மில் இல்லாததால் ஒருவர் ஆட முடியாமல் போவது விரும்பத் தகாதது. சிறந்த வீரர்களை களமிறக்க விரும்புவது இயல்பானதுதான், அணிச்சேர்க்கை பற்றி நாங்கள் முடிவெடுப்போம், ஆகவே தவண், ரோஹித், ராகுல் மூவருமே ஆடும் வாய்ப்புள்ளது, என்றார் கோலி,

ரோஹித், தவண், ராகுல் இறங்கிய பிறகு கோலி 4ம் நிலையில் இறங்க வாய்ப்புள்ளது, ஷ்ரேயஸ் அய்யர் 5ம் நிலையில் இறங்குவார.

இந்நிலையில் கோலி கூறும்போது, “ஆம் நான் பின்னால் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். என் இடத்தில்தான் இறங்குவேன் என்ற உரிமைகோரல் எனக்கு இல்லை, வெறு இடத்தில் இறங்கினால் எனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதெல்லாம் ஒரு போதும் நினைத்தது கிடையாது. ஒரு அணியின் கேப்டனாக அடுத்த செட் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதும் என் வேலைதான்.

ஒரு கேப்டனின் வேலை கையிலிருக்கும் அணியின் ஆட்டம் பற்றியது மட்டுமல்ல, எதிர்கால அணியையும் உறுதி செய்வதாகும். அதாவது வேறு ஒருவரிடம் அணி செல்லும் போது அடுத்த அணியைத் தயார் படுத்துவதும் நடப்பு கேப்டனின் பணியே என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

எனவே இந்தக் காலக்கட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வேண்டும், என்னுடைய நலத்தில் யோசித்து ‘ஆம் நான் ரன்கள் எடுக்க வேண்டும்’ என்று யோசிப்பது நிகழ்ந்து விடக்கூடாது. இப்படிப்பட்ட அணுகுமுறை வேலைக்கு ஆகாது. பெரிய பின்புலத்தில் வைத்து இந்த வீரர்கள் மேலும் நம்பிக்கை பெற உதவ வேண்டும். யாராவது பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது நானாகவே இருக்கும், மற்ற வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும். நான் இதில் திறந்த மனதுடன் இருக்கிறேன். வீரர்கள் வளர்ந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ள முன் வரவேண்டும் என்பதே என் விருப்பம்.

வீரர்கள் பார்மை கண்டுபிடித்துக் கொள்வதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் கேப்டனாக இருக்கும் போதே வீரர்கள் தங்கள் சக்தி என்னவென்பதை உணர்வதைப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு கேப்டனாக இதுதான் திருப்தி தரக்கூடியதாகும்” என்று விராட் கோலி மற்றவர்களுக்காக தான் பின் வரிசையில் களமிறங்குவதிலும் ஒரு சிக்கலும் இல்லை என்று பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x