Published : 13 May 2014 07:27 PM
Last Updated : 13 May 2014 07:27 PM
ராஞ்சியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேட்டிங்கிற்கு சாதகமில்லாத களத்தில் 149 ரன்கள் இலக்கை விரட்ட சென்னையின் துவக்க வீரர்கள் ஸ்மித் மற்றும் மெக்கல்லம் களமிறங்கினர். முதல் இரண்டு ஓவர்களில் 3 சிக்ஸர்கள் உட்பட 20 ரன்கள் வந்தாலும் 3-வது ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த ரெய்னாவும் வந்த வேகத்திலேயே 2 ரன்களுக்கு வெளியேறினார்.
தொடர்ந்த ஸ்மித் - ப்ளெஸ்ஸிஸ் ஜோடி தேவைக்கேற்ற ரன்களை ஒவ்வொரு ஓவரும் அடித்து இலக்கை நோக்கி முன்னேறியது. 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்மித் கூப்பரின் பந்தில் வீழ்ந்தார். அடுத்து ரவீந்திர ஜடேஜா அல்லது கேப்டன் தோனி களமிறங்குவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அஸ்வின் களமிறங்கி ஆச்சரியமளித்தார்.
ராஜஸ்தானின் பந்துவீச்சை சமாளித்து ஆட முயற்சி செய்தாலும் 14 ரன்களுக்கு அஸ்வின் ஆட்டமிழந்தார். இதனையடுத்து தனது சொந்த மண்ணில் களமிறங்கினார் கேப்டன் தோனி. மறுமுனையில் ப்ளெஸ்ஸிஸ் சிறப்பாக ஆடி வர, இந்த இணை அணியை வெற்றிக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
காலில் சிறிய காயத்துடன் விளையாடியதால் ப்ளெஸ்ஸிஸின் ஓட்டத்தில் தடுமாற்றம் தெரிந்தது. 17-வது ஓவரில் 38 ரன்களுக்கு அவர் ஆட்டமிழக்க ஆட்டத்தின் வெற்றிவாய்ப்பு ராஜஸ்தான் பக்கம் சாய்ந்தது. 15 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் ரவீந்திர ஜடேஜா தோனியுடன் களத்தில் இணைந்தார்.
ராஜஸ்தானின் சிறப்பான பந்துவீச்சு சென்னையின் ஸ்கோரைக் கட்டுப்படுத்த கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் வந்தது. முதல் பந்தில் ஜடேஜா 1 ரன் எடுக்க, வழக்கம் போல தோனி இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். அடுத்து 2 பந்துகளில் 5 ரன்கள் வர, சென்னை 5 விக்கெட்டுகளில் ஆட்டத்தை வென்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கும் சென்னை அணி தகுதி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ராஜஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 84 ரன்களை எடுத்தது. தொடர்ந்து பந்துவீசிய சென்னை வீரர்கள் அந்த அணியின் ஸ்கோரைக் கட்டுப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 148 ரன்களை எடுத்தது.
அந்த அணியின் கேப்டன் வாட்சன் அதிகபட்சமாக 36 பந்துகளில் 51 ரன்களை எடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT