Published : 09 Jan 2020 05:50 PM
Last Updated : 09 Jan 2020 05:50 PM
வெள்ளிக்கிழமை (10-1-20) அன்று புனேயில் இலங்கை அணிக்கு எதிராக முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் இந்திய அணி 3வது, இறுதி டி20 போட்டியில் விளையாடுகிறது.
விராட் கோலி மீதுள்ள ஒரே விமர்சனம் என்னவெனில் அணிச்சேர்க்கையில் அவரது தடுமாற்றம் தான். உலகக்கோப்பைக்காக ஒரு பிரமாத அணியைத் தயார்ப்படுத்த வேண்டுமெனில் ஷமி, உமேஷ் யாதவ் ஏன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது, அல்லது உலகக்கோப்பையில் ஷமி அல்லது உமேஷ் அணியில் இடம்பெறுவார்கள் என்றால் இப்போது நன்றாக வீசும் நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் அப்போது பெஞ்சில் அமர வேண்டுமா? அதே போல் ஜடேஜாவின் தேர்வும், ஷிகர் தவண் தொடர்ந்து தடுமாற்றத்துடன் ஆடினாலும் வாய்ப்புகள் வழங்கப்படுவதும் கிரிக்கெட்டைத் தாண்டிய ஐயங்களை சிலருக்கு எழுப்பி வருகிறது.
எனவே வெற்றி பெறும் அணியை மாற்றக்கூடாது என்ற சென்ட்டிமெண்ட் பாதுகாக்கப்படுமா அல்லது ஒவ்வொரு போட்டியிலும் வாய்ப்புக் கிடைக்கும், கிடைக்கும் என்று எதிர்பார்த்து வெறுப்பில் இருக்கும் மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? ஒருநாள் போட்டிகளில் மணீஷ் பாண்டேயின் ஸ்ட்ரைக் ரேட் குறை சொல்ல முடியாத 91.85 ஆகும் டி20 போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட் 123 ஆகும்.
மணீஷ் பாண்டே ஒழிக்கப் படுகிறாரா?
17 டிசம்பர் 2017-ல் இலங்கைக்கு எதிராக விசாகப்பட்டிணத்தில் மணீஷ் பாண்டேஒருநாள் போட்டியில் ஆடினர், ஷிகர் தவண் சதமெடுக்க, அய்யர் அரைசதம் எடுக்க இந்திய அணி 8 விக்கெட்டுகளில் வென்றது. பாண்டே இறங்க வாய்ப்பில்லாமல் போனது, இப்படியிருக்கையில் அடுத்த போட்டியில் அவர் ஆடியிருக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் அடுத்த ஒருநாள் போட்டி வாய்ப்பு 25 செப்.2018-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு வாய்ப்பு வழங்கி ‘டை’ ஆன அந்த போட்டியில் பாண்டே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இன்னும் ஒரு போட்டியைக் கூட ஆடவில்லை, ஆனால் உள்நாட்டுக் கிரிக்கெட்டில் ரஞ்சி, துலீப் டிராபி, விஜய் ஹசாரே ட்ராபி, சையத் முஷ்டாக் அலி ட்ராபி என்று அனைத்திலும் நன்றாக ஆடிவருகிறார். ஆனால் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வெறுப்படைந்த மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சனுக்கு வெள்ளியன்று வாய்ப்பு கிடைக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது.
அதே போல் ஷிகர் தவன் காயத்திலிருந்து மீண்டு 2வது டி20-யில் ஆடினாலும் அவர் சரளமாக ஆடவில்லை, எனவே ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவுடன் நிச்சயம் ராகுல்தான் களமிறங்க அதிக வாய்ப்பு. மேலும் ஷிகர் தவணுக்கு பெரிய அச்சுறுத்தல் மயங்க் அகர்வால்தான்.
2வது போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அப்போதுதான் வந்துள்ளார் என்பதால் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வீசவில்லை, நிச்சயம் நாளை இழந்த தன் பந்து வீச்சை முழு மூச்சுடன் இறக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
தாக்கூர் இறுதி ஓவர்களை பிரமாதமாக வீச, நவ்தீப் சைனி தன் வேகம் மற்றும் எகிறு பந்துகளினால் பேட்ஸ்மென்களை திணறடித்தார்.
இடது கை வீரர்கள் அதிகமிருப்பதால் குல்தீப் யாதவ், (2/38), வாஷிங்டன் சுந்தர் (1/29) தங்கள் இடத்தை நாளை தக்கவைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாஹல், ஜடேஜா உட்கார வைக்கப்படலாம் என்று தெரிகிறது.
மாறாக இலங்கை அணி தன் பேட்டிங், பவுலிங்கில் இன்னும் கொஞ்சம் முயன்று ஆட வேண்டியுள்ளதோடு, இந்த இந்திய அணியை வீழ்த்த கொஞ்சம் கற்பனைவளம் மிக்க கேப்டன்சி மலிங்காவுக்குத் தேவை என்பதை அறிவுறுத்துகிறது. ராகுல் பிரமாதமான ஷாட்களை ஆடினாலும் அவரது பலவீனத்தை இலங்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, டீப் தேர்ட்மேன் வைத்துக் கொண்டு ஆஃப் ஸ்டம்ப் லைனில் கொஞ்சம் அதிக பவுன்ஸ் பந்தை வீசினால் அவர் எட்ஜ் ஆகவோ அல்லது அடித்தால் தேர்ட்மேனிலோ சிக்க வாய்ப்புள்ளது, எனவே வித்தியாசமாக யோசிக்க வேண்டும், கோலியை வீழ்த்த லெக் ஸ்பின்னரை நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக இந்திய பந்து வீச்சைக் கண்டு அஞ்சாமல் இலங்கை அணி அடித்து ஆட வேண்டும், மே.இ.தீவுகள் அதைத்தான் செய்தது.
இந்நிலையில் நாளை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT