Last Updated : 04 Jan, 2020 05:52 PM

 

Published : 04 Jan 2020 05:52 PM
Last Updated : 04 Jan 2020 05:52 PM

12 ஆண்டுகள் வரலாற்றை தக்கவைக்குமா இந்தியா? கவுகாத்தியில் நாளை இலங்கையுடன் மோதல்: சாம்ஸனுக்கு இந்தமுறையாவது வாய்ப்பு கிடைக்குமா?

வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் பும்ரா : படம் உதவி ட்விட்டர்

கவுகாத்தி

கவுகாத்தியில் நாளை நடக்கும் முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 12 ஆண்டு கால சாதனையைத் தக்கவைக்கும் முயற்சியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் ஆகியோர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல இலங்கை அணியில் லசித் மலிங்கா, அனுபவ வீரர் மாத்யூஸ் போன்றோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 ஆண்டுகளாக

கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்திய அணியை அனைத்து விதமான போட்டிகளிலும்(ஒருநாள்,டி20 டெஸ்ட்) இலங்கை வென்றதே கிடையாது. கடந்த 12 ஆண்டுகளாக இருதரப்பு போட்டிகளில் இந்திய அணியை வெல்ல முடியாமல் இலங்கை அணி திணறி வருகிறது.

இரு அணிகளும் அனைத்துவிதங்களிலும் 59 போட்டிகளில் மோதியுள்ளன, இதில் இந்திய அணி 44 வெற்றிகளைப் பெற்றுள்ளது, 10 ஆட்டங்களில் தோல் அடைந்துள்ளது. சில தோல்விகள் இந்திய அணிக்கு மறக்கமுடியாதவை, 2014,டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2017 சாம்பியன்ஸ் கோப்பை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

அணில் கும்ப்ளே தலைமையில் இந்திய அணி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டது. அப்போதுதான் கடைசியாக இந்திய அணியை இலங்கை இருதரப்பு தொடரில் வீழ்த்தியது. அதன்பின் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றபின், 7 தொடர்களில் இலங்கையுடன் இந்திய அணி மோதி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

கோலி தலைமை,..

அதாவது விராட் கோலி தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக எந்தத் தொடரையும் இழந்தது இல்லை. டி20 போட்டிகளை எடுத்துக்கொண்டால் இலங்கை, இந்திய அணிகள் இதுவரை 6 டி20 தொடர்களில் மோதியுள்ளன. இதில் 5 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது, ஒரு தொடர் சமனில் முடிந்துள்ளது.

வலிமையான வரலாற்றுடன் இந்திய அணி நாளை களம் காண்பதால், பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகக் கடுமையான பணிச்சுமை காரணமாகத் துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணாக ஓய்வில் இருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் ஆகியோர் நாளை களமிறங்குவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷிகர் தவண் ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் சதம் அடித்து தனது இழந்த ஃபர்மை மீட்டுள்ளார். பும்ரா ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் விளையாட முயன்றாலும், கங்குலியின் அறிவுரையால் தவிர்த்தார்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடக்க இருப்பதால் அதற்கான முழுமையான தயாரிப்பில் இந்திய அணி இறங்கியுள்ளது. இந்த ஆண்டில் இந்திய அணி மொத்தம் 15 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதால், ஒவ்வொரு போட்டியும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. வீரர்களைப் பரிசோதித்துப் பார்ப்பதிலும், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதிலும் குறுகிய அளவே வாய்ப்புகள் உள்ளன.

சாம்ஸன் நிலை என்ன

தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் நாளை ஷிகர் தவண், கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 6 தொடர்களில் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டு பெஞ்சிலேயே சாம்ஸன் அமரவைக்கப்பட்டுள்ளார். இந்த முறையாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த்தை தயார் செய்கிறோம் என்று நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவித்தாலும், சாம்ஸனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுப்பது ஏன் எனத் தெரியவில்லை. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக ரிஷப்பந்த் டி20 தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட வில்லை. இருப்பினும் நாளை அவருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவரிசையில் ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்புவதற்கு ஷிவம் துபே தேர்வு செய்வதைக் காட்டிலும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜடேஜாவின் ஆட்டம் வெற்றிக்கு உதவியாக இருந்ததால், அவருக்கு அதிகமான முன்னுரிமை வழங்கப்படலாம். கடந்த டி20 தொடரில் ஷிவன் துபேயின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால், அவருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது.

சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல் இருவரில் சாஹலுக்குதான் அதிக வாய்ப்பு உண்டு என்றபோதிலும், கடந்த டி20 தொடரில் ஹாட்ரிக்விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவையும் வாய்ப்பு வழங்காமல் இருக்க முடியாது

தாக்கூருக்கு வாய்ப்பு

பந்துவீச்சில் பும்ராவுடன் சேர்ந்து டெத் ஓவர் வீசுவதில் நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் இருவரில் தாக்கூருக்குதான் அதிக வாய்ப்பு கிடைக்கும். கடைசி வரிசை வரை பேட்டிங் செய்யலாம் என்ற எண்ணத்தில் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.கவுகாத்தி ஆடுகளம் பேட்டிங்கிற்கும், சுழற்பந்துவீச்சுக்கும் அதிகமாக ஒத்துழைக்கும் என்பதால், இரு வேகப்பந்துவீச்சாளர்கள், 3 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற அளவில்தான் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

மலிங்கா தலைமை

இலங்கை அணியைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி அந்த தொடரை இழந்தது. அந்த அணி அனுபவ வீரர் லசித் மலிங்கா தலைமையில் களமிறங்குவது கூடுதல் பலமாகும்.

இளம் வீரர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து அணி தேர்வு அமைக்கப்பட்டுள்ளது. மேத்யூஸ், பெரேரா, ராஜபக்சா, பெர்னான்டோ, குணதிலகா ஆகியோர் நம்பிக்கைக்குரிய வகையில் கடந்த கால போட்டிகளில் பேட்டிங் செய்துள்ளார்கள். இந்த 4 பேட்ஸ்மேன்களும் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பின் மீண்டும் டி20 போட்டியில் விளையாடுவதற்கு முன்னாள் கேப்டன் மேத்யூஸ் அணிக்குத் திரும்பியுள்ளது ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கும்.

மேலும் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹசரங்கா, உதானாவும் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள். இதில் ஹசரங்கா கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.

இந்திய அணிக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சவால் விடுக்கும் வகையில் இலங்கையின் இளம் அணி தயாராகியுள்ளது. நாளை மாலை மணிக்கு போட்டி தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x