Published : 03 Jan 2020 03:52 PM
Last Updated : 03 Jan 2020 03:52 PM

39 பந்துகள் 46 நிமிடங்கள்... ஸ்மித்தின் மிக மந்தமான தொடக்கம், 2020-ன் முதல் சதம் லபுஷேன்: ஆஸ்திரேலியா 283/3

சிட்னி

சிட்னியில் இன்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது.

2020-ம் முதல் சதத்தை எடுத்த லபுஷேன் 130 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ இன்னொரு முனையில் மேத்யூ வேட் 22 ரன்களுடனும் இருந்தார். வார்னர் 45 ரன்களுக்கும், ஜோ பர்ன்ஸ் 18 ரன்களுக்கும் ஸ்டீவ் ஸ்மித் 63 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து தரப்பில் கொலின் டி கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டுகளையும் நீல் வாக்னர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணிக்கு ஒருவிதத்தில் பின்னடைவு கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட முடியாமல் போனது, இதனால் டாம் லேதம்தான் கேப்டன்சி பொறுப்பைக் கையாண்டார்.

ஸ்டீவ் ஸ்மித்தின் ஆக மந்தமான தொடக்கம்:

ஸ்டீவ் ஸ்மித் பொதுவாக ரன் அடிக்கும் வாய்ப்புகளிலிருந்து பின் வாங்கி நிற்பதற்காகவே நிற்பது என்ற கொள்கையுடையவர் அல்ல, ஆனால் அவருக்கு இன்று சில நல்ல பந்து வீச்சுகளை நியூஸிலாந்தினர் மேற்கொண்டனர். நல்ல களவியூகம், திட்டமிடுதல் இருந்தது.

இதனால் ஸ்டீவ் ஸ்மித் தன் முதல் ரன்னை எடுக்க தன் வாழ்நாளில் இத்தனை சிரமப்பட்டிருக்க மாட்டார், 46 நிமிடங்கள், 39 பந்துகள் ஆயிற்று அவர் தன் முதல் ரன்னை எடுக்க. வாக்னர், ஆஸ்ட்ல் ஆகியோரை சுமார் ஒருமணி நேரம் தடுத்தாடியிருப்பார், 143 பந்துகளில் 50 ரன்கள் என்பது ஸ்மித்தின் தரநிலைக்கு மந்தமான இன்னிங்ஸே.

நியூஸிலாந்து பந்து வீச்சு மோசம் என்றோ, தவறு என்றோ சொல்ல முடியாது, ஆனால் ஆஸி. பேட்டிங் வரிசையை ஊடுருவும் தன்மையினதாக இல்லை.

லபுஷேன் ரன்களை மிகவும் சீரான முறையில் எடுத்தார், அறுக்கவில்லை. 7 டெஸ்ட் இன்னிங்ஸில் 6 வது முறையாக அரைசதம் கடப்பது அவருக்கு சிரமமாக இருக்கவில்லை. ஸ்மித் 143 பந்துகளில் அரைசதம் எடுக்க லபுஷேன் 163 பந்துகளில் சதம் கண்டார். இதில் 8 பவுண்டரிகள் 1 சிக்ஸ் அடங்கும்.

வார்னர், ஜோ பர்ன்ஸ் தொடங்கும் போது வானம் மேகமூட்டமாக இருந்தது, பிட்சில் புற்களும், புற்கள் இல்லாத பகுதி இரண்டுமே இருந்தன. இதனால் ஆட்டம் போகப்போக ஸ்பின் எடுக்க வாய்ப்புள்ளது. அணியில் பல மாற்றங்கள், ஜீத் ராவல், கிளென் பிலிப்ஸ், டாட் ஆஸ்ட்ல், வில் சோமர்வில்லே, மேட் ஹென்றி ஆகியோர் ஆடுகின்றனர்.

அதிசயமாக ஹென்றியுடன் வாக்னர் தொடங்காமல் கொலின் டி கிராண்ட் ஹோம் தொடங்கினார், இங்கிலாந்தில் சரி, ஆஸ்திரேலியாவில் மீடியம் பேஸ் பவுலிங்கை நொறுக்கி விடுவார்கள், இதனால் முதல் 1 மணி நேரத்தில் இருவருமே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கொலின் முனையை மாற்றி வீச வைக்கப்பட்டவுடன் ஜோ பர்ன்ஸ் 18 ரன்களில் அவரது பந்து ஒன்று உள்ளே வந்து லேட் ஸ்விங் ஆகி வெளியே எடுக்க பர்ன்ஸ் நிலையே திரும்பியது பந்து எட்ஜ் ஆகி முதல் ஸ்லிப்பில் டெய்லரிடம் கேட்ச் ஆனது.

வார்னர் 80 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து வாக்னர் பந்தில் வெளியிறினார். இதுவும் ஷார்ட் லெந்த் பந்துதான். லெக் கல்லியில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகுதான் ஸ்மித் இறங்கி அறுத்து விட்டார், 39 பந்துகள், 46 நிமிடத்தில் தன் முதல் ரன்னை எடுத்தார். பிறகு 143 பந்துகளில் அரைசதம் கண்டு 182 பந்துகளில் 63 ரன்களை எடுத்தார். அப்போது கொலின் டி கிராண்ட் ஹோம் பந்தில் எட்ஜ் ஆகி டெய்லரிடம் கேட்ச் ஆனார். இவரும் லபுஷேனும் இணைந்து 156 ரன்களைச் சேர்த்தனர்.

லபுஷேன் ஆட்ட முடிவில் 130 ரன்களுடனும் வேட் 22 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். சனிக்கிழமையன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x