Published : 01 Jan 2020 10:36 AM
Last Updated : 01 Jan 2020 10:36 AM
2019-ம் ஆண்டு இந்திய விளையாட்டுகளில் நினைவில் கொள்ள வேண்டிய வருடமாக அமைந்தது.
2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பெரும் ஏமாற்றத்தை அளித்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் 2019-ல் நடைபெற்ற ரைபிள்-பிஸ்டல் உலகக் கோப்பையில் 21 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை குவித்து அசத்தினர். இந்த பயணத்தில் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு 15 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து அதிகம் பேர் தகுதி பெறுவது இதுவே முதன்முறை என்ற சிறப்பையும் பெற்றனர். இளம் பட்டாளங்களான மனு பாகர், சவுரப் சவுத்ரி, திவ்யானேஷ் சிங் பன்வார், இளவேனில் வாளறிவன் ஆகியோர் உலகின் சிறந்த வீரர், வீராங்கனைகளை எந்தவித அச்சமும் இல்லாமல் எதிர்கொண்டு பதக்கங்களை வென்றனர்.
மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு வெள்ளி, 4 வெண்கலத்துடன் ஒலிம்பிக்கில் பங்கேற்க 4 பேர் தகுதி பெற்றுள்ளனர். குத்துச்சண்டையில் அமித் பங்கால் சர்வதேச போட்டிகளில் 3 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதில் வெள்ளிப் பதக்கமானது உலக சாம்பியன்ஷிப்பில் கிடைத்திருந்தது. இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார் 23 வயதான அமித் பங்கால். இதற்கு முன்னர் இந்தத் தொடரில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்திருந்தது.
மகளிர் பிரிவில் மேரி கோம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தத் தொடரில் 8 முறை பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார் 33 வயதான மேரி கோம்.
பில்லியர்ட்ஸ் போட்டியில் பங்கஜ் அத்வானி 23-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
கிரிக்கெட்டில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்தது. இதில் முக்கியமானது ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றது. அதேவேளையில் உலகக் கோப்பை தொடரில் பட்டம் வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில் நியூஸிலாந்திடம் அரை இறுதியில் தோல்வி அடைந்தது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
அந்த ஆட்டத்தில்‘சூப்பர் மேனாக’ மாறி தோனியை மார்ட்டின் கப்தில் ரன் அவுட் செய்து இந்திய அணியின் உலகக் கோப்பை கனவை கலைத்ததோடு கண்ணீர் சிந்தவும் வைத்தார். இந்த ரன் அவுட், தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் உலா வருவதற்கும் வழி வகுத்தது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி தேர்வானதும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டது. பொறுப்பேற்ற முதல் வாரத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியை ஈடன் கார்டனில் நடத்தி உலக கிரிக்கெட்டின் பார்வையை தன் பக்கம் இழுத்தார் கங்குலி.
பாட்மிண்டனில் பி.வி.சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிய அளவில் பதக்கங்களை வெல்லவில்லை. மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால் காயத்தால் அவதிக்குள்ளானார்.
ஆடவர் பிரிவில் சாய் பிரணீத், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 36 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவின் பதக்க வேட்கை தாகத்தை சாய் பிரணீத் தணித்திருந்தார்.
ஹாக்கியில் ஆடவர், மகளிர் அணியினர் பெரிய அளவிலான சவால்களை எதிர்கொள்ளவில்லை என்றாலும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன.
செயல் திறன் அடிப்படையில் டென்னிஸில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் இந்தியர்கள் சாதிக்கவில்லை. அதிகபட்சமாக அமெரிக்க ஓபன் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை, சுமித் நாகல் எதிர்கொண்டார். அதேவேளையில் டேவிஸ் கோப்பையில் பலம் குறைந்த பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் லியாண்டர் பயஸ் இரட்டையர் பிரிவில் தனது 44-வது வெற்றியை பதிவு செய்து பெயரளவில் சாதனை நிகழ்த்தினார். தடகளத்தில் நட்சத்திரங்களான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஒட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் ஆகியோர் காயங்களால் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் தடகளத்தில் பெரிய அளவிலான செயல்பாடுகள் நிகழவில்லை. ஊக்க மருந்து, வயது சான்றிதழ் விவகாரமும் இந்திய தடகளத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது.
நேர்மறையான விஷயமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 4x400 மீட்டர் கலப்பு அணிகள் பிரிவு தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றது. மேலும் ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ் பிரிவில் கலந்து கொள்ள அவினாஷ் சேபிள் தகுதி பெற்றுள்ளார்.
கால்பந்திலும் இந்திய அணிக்கு பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. உலக கோப்பை, ஆசிய கோப்பை தகுதி சுற்றில் எந்தவித தாக்கத்தையும் இந்திய அணி ஏற்படுத்தவில்லை. இதனால் தரவரிசையில் 97-வது இடத்தில் இருந்து 108-வது இடத்துக்கு தள்ளப்பட்டது இந்திய அணி.
இந்திய வில்வித்தை சங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியர்கள் இருவர் தகுதி பெற்றுள்ளனர். அதேபோன்று டேபிள் டென்னிஸில் இந்திய அணிக்கு பயிற்சியாளர் நியமிக்கப்படாத சூழ்நிலையிலும் உலக தரவரிசையில் ஜி.சத்யன் 24-வது இடம் பிடித்து சாதனை படைத்தார்.
இந்திய பாரா தடகள வீரர்களுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டு நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டிக்கு 22 பேர் தகுதி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு 19 பேர் தகுதி பெற்ற நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
அதிவிரைவு செஸ் போட்டியில் கொனேரு ஹம்பி உலக சாம்பியன் பட்டம் வென்று ஆண்டின் இறுதிப் பகுதியில் பெருமை சேர்த்தார். டோக்கியோ ஒலிம்பிக் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் 2019-ம் ஆண்டை சில நினைவுகூறத் தக்க நிகழ்வுகளுடன் இந்திய வீரர், வீராங்கனைகள் நிறைவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT