Published : 31 Dec 2019 09:46 AM
Last Updated : 31 Dec 2019 09:46 AM
சர்வதேச டென்னிஸ் போட்டிக்கு மீண்டும் திரும்புவதற்காக 26 கிலோ எடையை குறைத்துள்ளதாக 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.
குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை பிறப்பு ஆகியவற்றால் சுமார் 2 ஆண்டுகள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் மீண்டும் களமிறங்க முடிவுசெய்து கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சிகளில் சானியாமிர்சா ஈடுபட்டுள்ளார்.
ஜன. 11-ம்தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஹோபர்ட் சர்வதேசடென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் இணைந்து களமிறங்க உள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் இணைந்து விளையாட உள்ளார் 33 வயதான சானியா மிர்சா. இதையொட்டி சாகேத் மைனேனி, பிரார்த்தனா தாம்ப்ரே, சாய் கார்டீக் ரெட்டி ஆகியோருடன் இணைந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் சுமார் 3 மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார் சானியா.
இதன் பின்னர் சானியா மிர்சா கூறியதாவது:
டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகி எனது காலணிகளை எளிதாக தொங்கவிட்டிருக்க முடியும், சூரியனுக்கு கீழே பல மணி நேரம் விளையாடுவதை தவிர்த்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்திருக்க முடியும். ஆனால், நேர்மையாக நான் இந்த மாதிரியான நிலைக்கு திரும்பி வந்து போட்டியிட முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது எது வந்தாலும் அது போனஸாகவே இருக்கும்.
குழந்தை பிறந்தபோது தெரியாத விஷயங்கள் பல இருக்கும். அது உங்களுக்கு எவ்வளவு சவால் விடுப்பதாகவும், உணர்ச்சிபூர்வமானதாகவும் இருக்கும் என்பது உங்கள் உடல் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பொறுத்தே இருக்கும்.
டென்னிஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். என்னிடம் இன்னும் அதிக அளவிலான டென்னிஸ் எஞ்சியிருப்பதாகவே உணர்கிறேன். பெரிய அளவிலான சவால்கள் அதிகம் உள்ளது.
அதிர்ஷ்டவசமாக எனது பெற்றோர்கள், சகோதரி சனம் ஆகியோரின் உறுதியான ஆதரவு உள்ளது. இதுவரையிலும் எனது பயணத்தில் எளிதான பகுதி இதுதான். 4 முதல் 5 மாதங்களில் 26 கிலோ எடையை குறைத்தேன், எதிர்மறையான எண்ணங்களில் இருந்து தொடங்குவது, உடல் முழுவதும் மாற்றம் அடைவது, அனைத்து தசைகளையும் இழப்பது என்பது எளிதானது அல்ல. எந்த ஒரு பட்டத்தையும் வெல்ல வேண்டும் என்ற இலக்கை நான் நிர்ணயிக்கவில்லை.
மிக உயர்ந்த மட்டத்தில் என்னால் போட்டியிட முடியுமா? இல்லையா? என்பதை பார்க்க விரும்புகிறேன். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நிச்சயமாக என் மனதில்உள்ளது. ஆனால் அது, எனதுஉடனடி குறிக்கோள் இல்லை.போட்டிகளில் விளையாடத் தொடங்கிய பிறகு எனது உடல்எப்படி வினையாற்றுகிறது என்பதை பார்க்க வேண்டும். அதனால்முதல் இலக்கு ஆரோக்கியமாக இருப்பதுதான், வெற்றியோ, தோல்வியோ இல்லை.
2 வருட இடைவெளிக்குப் பிறகு களமிறங்குவதால் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்துவதற்கு குறைந்தது இரு மாதங்கள் மற்றும் இரு தொடர்கள் தேவை. ராஜீவ் ராமுடன் ஒருபோதும் இணைந்து விளையாடியது இல்லை. ஆனால் நான் 12 வயது இருக்கும் போதே அவர் எனக்கு நெருங்கிய நண்பர்.
உலக தரவரிசையில் 38-வதுஇடத்தில் உள்ள நாடியா கிச்செனோக் மிகவும் உறுதியானவர். ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்வதற்காக செல்கிறேன் என்று நான் கூறவில்லை. ஆனால் ஒவ்வொரு கணத்தையும் ரசிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு சானியா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT