Last Updated : 30 Dec, 2019 12:28 PM

 

Published : 30 Dec 2019 12:28 PM
Last Updated : 30 Dec 2019 12:28 PM

10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணி: விஸ்டன் கனவு அணிக்கு கோலி கேப்டனும் இல்லை, தோனி அணியிலும் இல்லை

விராட் கோலி, தோனி : கோப்புப்படம்

லண்டன்

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டி20 அணி குறித்து விஸ்டன் வெளியிட்ட பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் மட்டுமே இடம் அளிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் கூல் என்று கொண்டாடப்பட்ட தோனிக்கும், சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்று வர்ணிக்கப்படும் ரோஹித் சர்மாவுக்கும் விஸ்டன் தனது அணியிலேயே வாய்ப்பு அளிக்காதது உண்மையிலேயே வியப்புக்குரியதாக இருக்கிறது.

அதேசமயம், விஸ்டனின் சிறந்த டி20 அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி குறித்து விஸ்டன் குறிப்பிடுகையில், "உள்நாட்டில் நடந்த டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனைகள் அளப்பரியது. கடந்த 10 ஆண்டுகளில் டி20 போட்டிகளில் 53 ரன்கள் சராசரியாக வைத்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக இருக்கிறது. அவர் தொடர்ந்து தனது ஃபார்மைத் தக்கவைப்பார் என்று நம்புகிறோம்.

சுழற்பந்து வீச்சு, வேகப்பந்துவீச்சு ஆகியவற்றுக்கு எதிராக விராட் கோலி சிறப்பாகச் செயல்படுகிறார். விக்கெட்டுகளுக்கு இடையே ரன்கள் எடுப்பதிலும் வேகமாக இருக்கிறார். நம்பர் 3 பேட்ஸ்மேனாக கோலியைக் களமிறக்குவதில் திறமையாகச் செயல்படுகிறார். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டாலும் களத்தில் நிலைத்து நின்று ஆடும் போராட்ட குணத்தைப் பெற்றுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளது.

விஸ்டனின் கடந்த 10 ஆண்டுகால டெஸ்ட் அணியிலும், ஒருநாள் போட்டிக்கான அணியிலும் விராட் கோலி இடம் பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த தசம ஆண்டில் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித், டேல் ஸ்டெயின், ஏ.பி.டிவில்லியர்ஸ் எல்சி பெரி ஆகியோரோடு விராட் கோலியும் இடம் பெற்றிருந்தார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா குறித்து குறிப்பிடுகையில், "பும்ரா ஒட்டுமொத்தமாக தனது பந்துவீச்சில் எக்கானமி ரேட் 6.71 வைத்துள்ளார். உலகின் 2-வது அதிவேகமான பந்துகளை வீசக்கூடிய பந்துவீச்சாளரில் டேல் ஸ்டெயினுக்கு அடுத்த இடத்தில் பும்ரா இருக்கிறார். பெரும்பாலும் பும்ராவின் ஓவர்கள் அனைத்தும் டெத் ஓவர்களாக பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் விதத்தில்தான் இருந்துள்ளது. தனது அணிக்காக பும்ரா குறைந்தபட்சம் 3 ஓவர்கள் டெத் ஓவர்களாக வீசுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், முகமது நபி ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், வங்கதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரரும் தேர்வு செய்யப்படவில்லை. நியூஸிலாந்து அணியில் இருந்து காலின் முன்ரோ மட்டுமே தொடக்க ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஸ்டனின் கடந்த 10 ஆண்டுக்கால டி20 அணி:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), காலின் முன்ரோ, விராட் கோலி, ஷேன் வாட்ஸன், கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ் பட்லர், முகமது நபி, டேவிட் வில்லே, ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x