Published : 29 Dec 2019 12:15 PM
Last Updated : 29 Dec 2019 12:15 PM
மகேந்திர சிங் தோனி தலைமையில் இஷாந்த் சர்மா அதிகம் விளையாடியுள்ளார். அப்போது 6-7 வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்சி முறையில் அணியில் இடம்பெற்றனர் இதனால் தன் பந்து வீச்சில் சீரான தன்மை இல்லாமல் இருந்தது என்று இஷாந்த் சர்மா தெரிவித்தார்.
ரஞ்சி டிராபியில் விளையாடி வரும் இஷாந்த் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் தன் பந்து வீச்சில் மாற்றத்தைக் கொண்டு வந்து தீர்வளித்தவர் ஜேசன் கில்லஸ்பி என்று தெரிவித்ததோடு, மிக முக்கியமான ஒப்பீடாக தோனி தலைமையில் இந்திய வேகப்பந்து வீச்சுக் கூட்டணி, விராட் தலைமையில் இந்திய வேகப்பந்து கூட்டணி பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:
“தோனியின் தலைமையில் எங்களில் சிலருக்கு அனுபவம் அவ்வளவாக அனுபவம் இல்லாமல் இருந்த சமயம். வேகப்பந்து வீச்சாளர்களை மாற்றிக் கொண்டேயிருப்பார், சுழற்சி முறையில் அதிகம் தேர்வு செய்யப்பட்டனர், இதனால்தான் ஒரு பந்து வீச்சுக் குழுவாக சீரான தன்மையை எட்ட முடியாமல் இருந்தது.
இப்போது போல் பும்ரா உட்பட 3-4 பவுலர்கள் இருப்பதால் பவுலர்களிடயே உரையாடல், கலந்தாலோசனை இருந்து வருகிறது. தொடர்பு கொள்ள முடிகிறது. முன்பு (தோனி கேப்டன்சியில்) 6-7 பவுலர்கள் இருந்ததால் தொடர்பு கொள்ளுதல் இல்லை.
ஆனால் விராட் கோலி கேப்டன்சிக்கு வந்த பிறகு நாங்கள் கொஞ்சம் அனுபவம் பெற்றிருந்தோம்.இப்போது அதிகம் விளையாடுகிறோம், ஓய்வறையில் அதிக நேரம் செலவிடுகிறோம். குடும்பத்தில் அதிக நேரம் செலவிடுவதை விட அணியுடன் அதிக நேரம் செலவிடுகிறோம். விவாதங்கள் சுதந்திரமாகவும் காத்திரமாகவும் நடைபெறுகின்றன. அதனால் களத்தில் மகிழ்ச்சியாக ஆடி வருகிறோம். இது வேறு ஒரு அனுபவமாக உள்ளது.
முன்பு என்னை ‘ஒர்க் ஹார்ஸ்’ என்று ஒரு முத்திரை குத்தியதால் மூத்த வீரர்கள் என்னிடம் 20 ஓவர்கள் வீச வேண்டும் என்று எதிர்பார்த்தனர், 60 ரன்கள் கொடுத்தாலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பேன் என்றார்கள். அது என் மனதில் புகுந்து கொண்டது. 20 ஓவர்கள் வீச வேண்டும் என்பது. இதனால் பேக் ஆஃப் லெந்தில் பந்தை வீசும் போது முதலில் பேட்ஸ்மென்கள் பந்தை ஆடாமல் விடுவார்கள் பிறகு வந்து ரன்கள் அடிக்கத் தொடங்குவார்கள், 20 ஒவர்களில் 80 ரன்களை கொடுப்பதில்தான் அது முடிந்தது.” என்றார்.
தற்போது விராட் கோலி இவரை மிட்செல் ஜான்சனை மைக்கேல் கிளார்க் பயன்படுத்தியது போல் பயன்படுத்துகிறார், சிறு சிறு ஸ்பெல்களில் வீச அழைக்கப்படுவதால் வேகம் குறையாமல் வீச முடிகிறது என்கிறார் இஷாந்த் சர்மா.
இவையனைத்தையும் சொல்வது போக தோனி வேகப்பந்து வீச்சுக்கு நல்ல கேப்டன் கிடையாது, ஸ்பின் பவுலிங்கில்தான் அவர் நல்ல கேப்டன் என்பதே கிரிக்கெட் நிபுணர்களின் கருத்தாகவும் அமைந்தது, வேகப்பந்து வீச்சில் தோனியின் கேப்டன்சி தவறுகளினால், சில வேளைகளில் ஆர்வமற்ற கேப்டன்சியினால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் படுமோசமான தோல்விகளை இந்திய அணி வாங்கியதை மறக்க முடியாது.
அதுவும் ஒருமுறை தென் ஆப்பிரிக்காவில் எளிதில் வெற்றி பெற வேண்டிய டெஸ்ட் ஒன்று ட்ரா ஆனதற்குக் காரணம். 80 ஓவர்கள் முடிந்து புதிய பந்தை எடுக்காமல் பந்தின் சணல் கண்டு வெளியே தெரியும் வரை 146 ஓவர்கள் வரை பழைய பந்தையே பயன்படுத்தியதில் ஆட்டம் ட்ரா ஆனது நினைவிருக்கலாம்.
- பிடிஐ தகவல்களுடன் இரா.முத்துக்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT