Published : 29 Dec 2019 11:37 AM
Last Updated : 29 Dec 2019 11:37 AM
இஷாந்த் சர்மா 2.0 என்று கூறும் அளவுக்கு அவர் இன்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக் கூட்டணியில் முக்கியமான டெஸ்ட் பவுலராக வளர்ச்சியடைந்ததற்கு ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பிதான் காரணம் என்று மனம் திறந்துள்ளார்.
தன்னுடைய பிரச்சினை என்னவென்று பலரும் தன்னிடம் கூறினாலும் ஒருவரும் தீர்வு காணவில்லை, ஆனால் கில்லஸ்பிதான் தீர்வு கண்டார் என்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார் இஷாந்த் சர்மா.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
இந்தியாவில் பெரிய பிரச்சினை என்னவெனில் அனைவரும் பிரச்சினைகளையே கூறுவார்கள் ஆனால் தீர்வு தர மாட்டார்கள். இப்போது தீர்வுதான் என் பவுலிங்கில் திருப்பு முனை ஏற்படுத்தியது.
ஏதோ ஓரிருவர் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர்கள் என்பதை நான் இப்போது உணர்கிறேன், தீர்வு சொல்பவர்தான் சிறந்த பயிற்சியாளராக இருக்க முடியும்.
எனவே தீர்வு என்ன? என் பிரச்சினை என்ன? என்று பார்த்தால் என்னுடைய ஃபுல் லெந்த் பந்துகளுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகம் தேவை என்பதுதான். ஆனால் வேகத்தைக் கூட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவரும் தெரிவிக்கவில்லை. நான் இங்கிலாந்து சென்றிருந்த போது சசெக்ஸ் அணிக்காக ஆடியபோது, பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பிதான் தீர்வை முதன் முதலாகக் கூறினார்.
கில்லஸ்பி கொடுத்த அரிய தீர்வு என்னவெனில், ஃபுல் லெந்த் பந்தில் வேகம் கூட்ட பந்தை வெறுமனே வேகமாக வீசினால் போதாது, பந்தின் தையல் தரையில் படுமாறு வீச வேண்டும் என்றார். அப்போதுதான் பந்து பேட்ஸ்மேனின் முழங்காலைக் குறிவைக்கும் என்றார்.
எனவே ஆரம்பக்கட்டம் போல் நான் களத்தில் பயிற்சியின் போது குட் லெந்த் இடத்தில் கூம்புகளை வைத்துப் பயிற்சி செய்தேன். ஆரம்பக்கட்ட வீரருக்கு இது சரி, ஆனால் அனுபவ வீரரான எனக்குமே இதுதான் கைகொடுத்தது, கில்லஸ்பியின் அறிவுரை இதுதான். ஃபுல் லெந்த் பந்துகள் எங்குபிட்ச் ஆகின்றன என்பது முக்கியமல்ல பந்து எங்கு முடிகிறது என்பதுதான் முக்கியம், பயிற்சி ஒன்றுதான் ஆனால் முடிவுகள் வித்தியாசமானது.
எனவே என் முழு லெந்த் பந்துகளில் வேகம் கூடுவதை உறுதி செய்தவர் ஜேசன் கில்லஸ்பி, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT