Published : 29 Dec 2019 09:33 AM
Last Updated : 29 Dec 2019 09:33 AM
தென் ஆப்பிரிக்க அணியை 272 ரன்களுக்குச் சுருட்டிய இங்கிலாந்து வெற்றி இலக்கான 376 ரன்களை நோக்கி பிரமாதமாக ஆடி வருகிறது. 3ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.
வெற்றி பெற இன்னமும் 255 ரன்கள் தேவையான நிலையில் நேற்று ஆட்ட முடிவில் பர்ன்ஸ் 77 ரன்களுடனும் டென்லி 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டி விட்டால் இங்கிலாந்து அணி 8வது பெரிய டெஸ்ட் இலக்கை விரட்டிய பெருமையை எட்டும்.
ஆனால் கேப்டன் ஜோ ரூட், மற்றும் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் இருவருக்கும் உடல் நிலை சரியில்லை என்பதால் நேற்று பட்லருக்கு பதிலாக பேர்ஸ்டோ விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டார். ஆனால் ஜோ ரூட் மதியம் களத்திற்குத் திரும்பியதையடுத்து அவர் பேட்டிங் செய்வார் என்ற நம்பிக்கை இங்கிலாந்துக்குப் பிறந்துள்ளது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பிலாண்டர், ரபாடாவிடம் வீழ்ந்து 142/3 யிலிருந்து 181 ரன்களுக்குச் சுருண்டது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் 2வது இன்னிங்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை 102 ரன்களுக்கு கைப்பற்றினாலும் 17 ஓவர்களில் ஓவருக்கு 6 ரன்கள் வீதம் அவரை சாத்தி எடுத்தனர் தென் ஆப்பிரிக்க வீரர்கள், காரணம் ஜோப்ரா ஆர்ச்சர் ஷார்ட் பிட்ச் பந்து வீச்சைக் கடைபிடித்ததே.
தென் ஆப்பிரிக்காவில் வான் டெர் டியூசன் சிறப்பாக ஆடி 51 ரன்களை அதிரடி முறையில் எடுக்க குவிண்டன் டி காக் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 37 பந்துகளில் 34 ரன்களை விளாச, பிலாண்டர் மீண்டும் அருமையாக ஆடி 46 ரன்களை எடுத்தார். பவுலர், நைட் வாட்ச்மேன் நோர்ட்யே 40 ரன்களை எடுத்தார்.
நேற்று காலை 72/4 என்று தொடங்கியது தென் ஆப்பிரிக்கா. வான் டெர் டியூசன், நோர்ட்யே மூலம் நல்ல கூட்டணி கண்டது. இருவரும் 91 ரன்கள் சேர்த்தனர். சாம் கரன் பந்தில் நோர்ட்டியே 8 ரன்களில் அவுட் ஆனதாகக் கருதப்பட்டது, ஆனால் பந்து அவரது தோள்பட்டையில் பட்டுச் சென்றது என்பது ரீப்ளேயில் உறுதி செய்யப்பட்டது.
51 ரன்கள் எடுத்த டியூசன் ஆர்ச்சரிடம் எல்.பி.ஆனார்.இங்கிலாந்து 20 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது, நோர்ட்டியே ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆகி ஆர்ச்சரிடம் காலியானார். ஸ்டோக்ஸ் பந்தில் பிரிடோரியஸ் கேட்ச் ஆனார், குவிண்டன் டி காக், ஆர்ச்சர் பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு அரக்க சிக்சர்களை அடித்து 34 ரன்களில் ஸ்டோக்ஸிடம் அவுட் ஆனார். கேஷவ் மகராஜ் (11) விக்கெட்டை ஆர்ச்சர் கைப்பற்றி தனது மிகவும் ரன்கள் கசிந்த ஸ்பெல்லில் தனது 5வது விக்கெட்டை வீழ்த்தினார். இது ஆர்ச்சரின் 3வது 5 விக்கெட் ஸ்பெல்லாகும்.
தென் ஆப்பிரிக்கா 272 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 376 ரன்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.
இங்கிலாந்து பிரமாதமாகத் தொடங்கி பர்ன்ஸ், சிப்லி ஜோடி 92 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்த சிப்லி, மகராஜ் பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பர்ன்ஸ் இருமுறை தப்பினார், ஒருமுறை ரபாடா எல்.பி.தீர்ப்பை ரிவியூவில் முறியடித்தார், இன்னொரு முறை வான் டெர் டியூசன் அவருக்கு ஸ்லிப்பில் கேட்சை விட்டார்.
ஆட்ட முடிவில் இங்கிலாந்து 121/1, இன்று 4ம் நாள் ஆட்டம். இங்கிலாந்து வெற்றி பெறும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்க, தென் ஆப்பிரிக்கா தனது அத்தனை வேகப்பந்து வீச்சு ஆயுதங்களையும் பயன்படுத்தி இங்கிலாந்தை முறியடிக்கும் என்று தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சுவாரசியமான கட்டத்தில் சென்சூரியன் டெஸ்ட் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT