Published : 28 Dec 2019 03:41 PM
Last Updated : 28 Dec 2019 03:41 PM

என்ன கேப்டன்சி இது?  ஆஸி. வந்துள்ள நியூஸி. ரசிகர்களுக்காக போராடி ஆடுங்கள்: கேன் வில்லியம்சனுக்கு மெக்கல்லம் ‘கவுன்சிலிங்’

எம்.சி.ஜியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தின் போது வர்ணனையில் இருந்த முன்னாள் நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் கடுமையாக நியூஸிலாந்தை விமர்சித்தார். மேலும் கேன் வில்லியம்சனுக்கு கவுன்சிலிங்கும் செய்தார் மெக்கல்லம்.

முதல் டெஸ்ட்டில் போராட்டமின்றி சரணடைந்த நியூஸிலாந்து 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 467 ரன்கள் அடிக்கவிட்டது. பந்து வீச்சு திடீரென ஆக்ரோஷம் குறைந்தது, பீல்டிங் நிலையும் அருகில் நிறுத்தப்படாமல் தள்ளித்தள்ளி நிறுத்தப்பட்டதால் ஸ்மித், லபுஷேன், பிறகு ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன் ஆகியோரும் எளிதில் ரன்களைச் சேர்த்தனர்.

குறிப்பாக 2-ம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்குப் பிறகு கேன் வில்லியம்சனின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்தார் மெக்கல்லம். உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியவுடன் பகுதி நேர ஆஃப் ஸ்பின்னர் டாம் பிளெண்டலை பந்து வீச வில்லியம்சன் அழைத்தார். ஒரு முறை லார்ட்ஸ் கிரீன் டாப் பிட்சில் உணவு இடைவேளைக்குப் பிறகு நம் இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டனாக கருதப்படும் தோனி சுரேஷ் ரெய்னாவை பந்து வீச அழைத்தது போல் வில்லியம்சன் பகுதி நேர ஸ்பின்னரை அழைத்தது மெக்கல்லமின் விமர்சனத்துக்குள்ளானது.

இதே ஆஸ்திரேலியாவில் ஏகப்பட்ட தவறுகளைச் செய்த தோனி, 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா 50 ரன்களுக்குள் இழந்திருந்த நிலையில் மறுநாள் காலை ஒரேயொரு ஸ்லிப் வைத்து பந்து வீசிய கொடூரமும் நடந்தது. அணியிலிருந்தே தூக்கப்பட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்த பாண்டிங்கை இரட்டைச் சதம் அடிக்க வைத்தது தோனியின் அதிசய கேப்டன்சியினால் என்றால் மிகையாகாது. அதே தவற்றைத்தான் கேன் வில்லியம்சனும் செய்து வருகிறார். கடந்த முறை விராட் கோலி ஆஸி.யில் தொடரை வென்றதற்குக் காரணம் அவரது களவியூகம் தொடர்ந்து ஆஸி. பேட்ஸ்மென்களை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியதே.

ஆனால் இங்கு அணி நிர்வாகம், பயிற்சியாளர் என்று அனைவருமே தோனியின் ‘ரசிகர்கள்’ போல் செயல்பட்டதால் தோனியின் அணுகுமுறை பற்றி இப்படி வெளிப்படையாக விமர்சனம் செய்யவில்லை. இதுதான் நமக்கும் அவர்களுக்குமான வித்தியாசம்

இந்நிலையில் மந்தமான கேப்டன்சி செய்த கேன் வில்லியம்சனுக்கு மெக்கல்லம் கவுன்சிலிங் அளித்துள்ளார்.

அது தொடர்பாக அவர் கூறும்போது, “முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தைப் பார்த்தோமானால் ஆஸ்திரேலியா மெதுவே தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொள்ள அனுமதித்தோம். நான் கேன் வில்லியம்சனின் பெரிய விசிறி, இப்போதும் கூட விசிறிதான், ஆனால் சில வேளைகளில் அவர் ஆர்வமற்ற முறையில் களத்தில் செயல் படுகிறார்.

அதாவது கேப்டன்சி பொறுப்பை அவர் மகிழ்ச்சியுடன் செய்வது போல் எனக்குத் தெரியவில்லை. ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவில் எதிர்கொள்வது சாதாரணமல்ல ஆனாலும் ஆர்வமற்ற கேப்டன்சியினால் தவறுகள் நிகழ்கிறது.

இன்று காலை நான் கேன் வில்லியம்சனிடம் பேசியது என்னவெனில் 20,000 ரசிகர்கள் நியூஸிலாந்திலிருந்து மெல்போர்னுக்கு வந்திருக்கின்றனர். நியூஸிலாந்து அணி கடும் நெருக்கடியில் இருந்த போதும் அவர்கள் நியூஸிலாந்தின் தேசிய கீதத்தை பாடியபடி இருந்தனர். இந்த அணியை ஒரு பெருமையாக அவர்கள் கருதுவதன் அடையாளம் இது, அவர்கள் நியூஸிலாந்து அணி ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. ஆனால் தங்கள் வீரர்கள் முகத்தில் புன்னகையுடன் பாசிட்டிவாக ஆடி எதிரணியினருக்கு அவ்வப்போது அடி கொடுத்து நாங்கள் சுலபமானவர்கள் அல்ல என்று ஆட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்.

என்னைப் பொறுத்தவரை பிளண்டலை பந்து வீச அழைத்தது சரணடையும் ஒரு உத்தி. இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வாக்னர், சவுதி, போல்ட் ஆகியோரிடம்தான் பந்தைக் கொடுத்திருக்க வேண்டும்” என்றார் மெக்கல்லம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x