Published : 28 Dec 2019 11:53 AM
Last Updated : 28 Dec 2019 11:53 AM

கமின்ஸ், பேட்டின்சன் வேகத்தில் அப்பளம் போல் நொறுங்கிய நியூஸி. : வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்ச மீண்டும் ஆஸி. பேட்டிங்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சுக் கூட்டணியின் ஓய்வு ஒழிச்சலில்லாத வேகப்பந்து வீச்சில் பயந்து பயந்து ஆடிய நியூஸிலாந்து 148 ரன்களுக்கு 3ம் நாளான இன்று தன் முதல் இன்னிங்ஸில் சுருண்டது.

பாலோ ஆன் கொடுக்காத ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து மொத்தம் 417 ரன்கள் முன்னிலைப் பெற்று ஆடி வருகிறது, கடும் வெயில் காரணமாக பாலோ ஆன் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் மிகப்பிரமாதமாக வீசி 17-5-28-5 என்ற அனாலிசிசில் முடிந்தார். அருமையான லெந்த், லைன் மற்றும் களவியூகத்தில் பேட்ஸ்மென்களை ஒர்க் அவுட் செய்து வீழ்த்துவது என்று உலகின் நம்பர் 1 பவுலருக்கான அனைத்து தகுதிகளுடன் விட்டுக் கொடுக்காமல் அசராமல் வீசினார் கமின்ஸ். பேட்டின்சனும் இவருக்குச் சளைக்காமல் வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நேற்று குறிப்பாக பிளண்டெலை கமின்ஸ் வீழ்த்த சுமார் 20,000 ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கேன் வில்லியம்ஸ் இறங்கி 9 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டின்சன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி எகிறிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட நினைத்தார், பந்து கூடுதலாக எழும்பியதால் கொடியேற்றமாக முடிய டிம் பெய்ன் ஓடிச்சென்று கேட்ச் ஆக்கினார். மைதானத்தில் நியூஸிலாந்து ரசிகர்கள் மவுனத்திற்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் சனிக்கிழமையான இன்று 44/2 என்று தொடங்கிய நியூஸிலாந்து அணியின் பலவீனமான நடுவரிசை பயங்கரமான கமின்ஸ், பேட்டின்சன், ஸ்டார்க் பந்து வீச்சில் பல்லிளிக்கத் தொடங்கியது.

நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர் டாம் லேதம் மட்டுமே கொஞ்சம் தைரியம் காட்டினார், நியூஸிலாந்தின் 148 ரன்களில் அவர் மட்டும் 50 ரன்களை எடுத்தார்.

இன்று லாதம் 9 ரன்களுடனும், டெய்லர் 2 ரன்க்ளுடனும் தொடங்கினர். ஆனால் ஒருவரும் நிற்கவில்லை உணவு இடைவேளையின் போதே 102/6 என்று சரிந்தது நியூஸிலாந்து.

அனுபவசாலி ராஸ் டெய்லர் கமின்ஸின் துல்லியத்தில் எட்ஜ் செய்து ஸ்லிப்பில் கேட்ச் ஆகி 4 ரன்களில் வெளியேறினார். அடுத்த பந்தே இடது கை வீரர் நிகோல்சுக்கு ரவுண்ட் த விக்கெட்டில் கமின்ஸ் வீச பந்து கால்காப்பைத் தாக்க நடுவர் கையை உயர்த்தினார், நிகோல்ஸின் ரிவியூ பயனளிக்கவில்லை.

கமின்ஸின் ஹாட்ரிக் பந்தை பயந்து நடுங்கியவாறே வாட்லிங் தடுத்தாடி ஹாட்ரிக்கைத் தடுத்தார்.

பேட்டின்சனும் தான் கமின்ஸுக்கு சளைத்தவரல்ல என்பது போல் வீசியதில் லேதம் அடுத்த ஓவரிலேயே காலியாகியிருப்பார், ஆனால் ஸ்டீவ் ஸ்மித் டைவ் அடித்து முயன்ற கேட்ச் தரைத்தட்டியது.

ஆனாலும் வாட்லிங்கை எழுச்சிப் பந்தில் பேட்டின்சன் காலி செய்தார், கிளவ்வில் பட்ட கேட்சை பர்ன்ஸ் பிடித்தார். நியூஸிலாந்து 58/5 என்று ஆனது. கிராண்ட் ஹோம் (11), லேதம் இணைந்து ஸ்கோரை 97 ரன்களுக்கு உயர்திய போது ஸ்டார்க் வந்தார் கல்லியில் டேவிட் வார்னரிடம் கேட்ச் ஆகி கிராண்ட் ஹோம் வீழ்ந்தார்.

சாண்ட்னர் ஸ்டார்க்கின் பவுன்சரில் காலியாகியிருப்பார், ஆஸ்திரேலிய வீரர்கள் இது அவுட் என்றே உறுதியாக நம்பினர், ஆனால் ரிஸ்ட்பேண்டில் பட்டுச் சென்றது, 3வது நடுவர் அலிம் தார் உறுதியாகத் தெரியவில்லை என்றதால் சாண்ட்னர் தப்பினார்.

டாம் லேதம் அருமையாகப் போராடினார், அவர் தன் 16வது அரைசதத்தை எடுத்தவுடன் கமின்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் கேட்சுக்கு வெளியேறினார். இவர் வீழ்ந்தவுடன் சவுத்தி 10 ரன்களை எடுக்க நீல் வாக்னர் கடும் பவுன்சர் மழைக்கிடையே 18 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ட்ரெண்ட் போல்ட், லயனை ஒரு அருமையான லாங் ஆன் சிக்சருடன் 8 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து 148 ரன்களை எட்ட முடிந்தது.

தற்போது ஆஸ்திரேலியா 108/2 என்று மொத்தம் 427 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது. இன்று இன்னும் 18 ஓவர்கள் மீதமுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x